Monday, February 8, 2016

CORINNAமேற்கின் சந்தடி மிக்க நகரொன்றில் அவள் பிறந்தாள். பெற்றோர்
தேவதையொன்றின் பெயரைத் தேடி அவளுக்குச் சூட்டினர். அவளை மாத்திரமே
பிள்ளையாகக் கொண்ட பெற்றோர் கண்ணின் மணியெனப் போற்றி அவளை வளர்த்தனர்.
                மிகத் தூய்மையான நேர்த்தியான ஆடைகளையே எப்பொழுதும் அணிவாள். சுத்தமும்,
அழகும், நாகரிகமும் மிக்கதாக அவள் வாழ்ந்த நகரிருந்தது. ஜேர்மனி
இராணுவத்தில் பயிற்சி பெற்றிருந்தபொழுதும் செஞ்சிலுவைச் சங்கமே அவளை
மிகவும் கவர்ந்திருந்தது. செஞ்சிலுவைச் சங்கத்தில் உயர் அதிகாரியாகும்
தகைமையை மிக இளம் வயதிலேயே தனது திறமையினால் பெற்றுக் கொண்டாள். இராணுவ
நடையின் மிடுக்கு அவளது அசைவுகளில் தெரிந்தது. கட்டளைகளைப்
பிறப்பித்தவாறு மிக வேகமாக நடப்பாள். சற்று உயரமான, ஒல்லியான அவளது
தோற்றத்தில் மிகப் பெரும் ஆளுமை புதைந்திருந்தது. உடன் நடக்கும் ஆண்களே
சில வேளை ஓடிச் சென்று அவளது நடையுடன் ஈடுகொடுக்க வேண்டிவரும்.
                அமெரிக்காவில் அவர்கள் இருந்த பொழுது அந்தச் சம்பவத்தைக் கேள்விப்
பட்டாள். அந்த நாட்டின் இராணுவம் பொருளாதார இலாபம் தேடித் தரும் இன்னொரு
நாட்டின் மீது பாய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. தகவல் கிடைத்த மறு
நிமிடமே இராணுவத் தலைமைப் பீடத்திற்குச் சென்று இறங்கினாள். சூடேறிய
எண்ணெய்யில் இட்ட கடுகு போல வார்த்தைகளைப் பொறிந்து தள்ளியவளாகத்
திடுதிடுவென உள்ளே நுழைந்தாள். எவராலும் எச்சக்தியாலும் அவளது
பிரவேசத்தைத் தடை செய்ய முடியாதிருந்தது. திடுமெனப் பாய்ந்து வரும் ஒரு
காட்டாறு போல உட்சென்றாள். மரியாதைக்குரிய வார்த்தைகளையோ,
சம்பிரதாயத்துக்குரிய சொற்களையோ அவள் உச்சரிக்கவே இல்லை. ஆதிக்க வெறியினை
அப்பாவி மக்களைக் கொண்டு தீர்க்க வேண்டாமென வாதாடினாள். அவர்களது
தலையசைவுகளையும் தந்திரச் சொற்களையும் நம்பாது, வில்லை விட்டுப்
புறப்பட்ட அம்பாக அந்நாட்டை விட்டு நீங்கினாள்.
                காற்றைக் கிழித்தவாறு செம்பிறைக் கொடி படபடத்திட விரைந்திடும்
வாகனத்தின் பின்னே புழுதிப் படலம் கிளம்பி எழுந்திடப் பாலைவனமொன்றினை
ஊடறுத்துச் சென்றாள். பின்னர் மலைகளால் சூழப்பட்ட கம்பீரமான நகரொன்றினுள்
பிரவேசித்தாள். மினாராக்களின் வண்ணங்களையும், புராதன நாகரிகத்தின்
சிதையாத அழகுகளையும் மாதுளம் தோட்டங்களையும் கண்டு வியந்தவாறு அந்த
நகரத்தின் அழகிய பிரதேசங்களில் எல்லாம் புகுந்து வெளிப்பட்டாள். பேரீத்த
மர நிழலில் அமர்ந்து தெளிந்த நீரோடையில் நீர் மொண்டு செல்ல வரும்
மக்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அமைதியாக வாழும் அம் மக்கள்
யாருக்கும் எத் தீங்கும் இழைத்தவர்கள் அல்லர். வனப்பு மிகு அவ் அழகிய
நகரத்தை வெகுவாக நேசித்தாள். அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந்த
நகரத்தின் சௌந்தரியங்கள் சேகரிக்கப்பட்டன.
                திடீரென அந்நகரம் சுற்றி வளைக்கப்படலாயிற்று. மக்கள் தம்
மனங்களிலெல்லாம் பயமும், பீதியும் நிரம்பலாயிற்று. அச்சமுற்ற மக்கள்
வீதிகளில் இறங்கித் தாம் செல்லும் திசை அறியாது அங்குமிங்கும்
வெருண்டோடினர். நாசகாரப் புயலொன்றினை ஏவி விட வந்த சாத்தான்களிடம் மானுட
நேயத்தை வேண்டி மன்றாடினாள் Corinna. வல்லமை கொண்ட அந்தச் சக்திகளோ
எளியோரின் பிரார்த்தனைகளையெல்லாம் துவம்சம் செய்து முன்னேறின. தமது
பாட்டில் வாழ்வையோட்டிய அப்பாவிகளிடம் தீராத் துயரங்களைத் திணித்தன. அந்
நகரத்திலிருந்த அனைத்தும் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் மண்ணோடு
கலந்தன. இறுதியில் அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந் நகரத்தை
நேசித்தோரின் நினைவுகளிலும் மாத்திரமே அந் நகரம் எஞ்சியிருந்தது. மண்
மேடாகக் காட்சியளித்த நகரத்தின் இடிபாடுகளுக்குள் அதன் புகழ் கூறிய
அனைத்தும் புதையுண்டன.
                பின்னர் அவள் நாசகாரத்தின் பிம்பங்களைச் சேகரித்தாள்.
கற்குவியலாக்கப்பட்ட தம் வீடுகளின் சிதிலங்களிடையே நின்று கதறும்
பெண்களை, கரும்புகையுடன் ஊழித் தீயெரியும் நகரத்தை, முன்னோர் தம்
கீர்த்திகளை உலகுக்குச் சொல்லிய இடங்களெல்லாம் தேடியழிக்கப் பட்டதை,
அங்கவீனமுற்று ஏதுமறியாமல் அழும் குழந்தைகளை, அபலைகளாக்கப் பட்ட
பெண்களின் அழுகுரல்களை, தன் நிலத்துக்காக உயிரைப் பலியிட்ட பின்
வீதிகளில் வீசப்பட்டுக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்களை ஒலியாய்,
காட்சியாய் உயிர் உருகும் வார்த்தைகளுடன் பதிவு செய்தாள். வெடி குண்டு,
விஷ வாயு, ஆயுதங்களென அனுப்பி வைத்த மேற்குலகின் அலங்காரங்களின் மீது
விட்டெறிந்தாள். பின்னர் காணாமற் போனாள்.
                செஞ்சிலுவைச் சங்கம் அவளைத் தேடித் தோற்றது. Corinna எங்கு சென்றாள்?
என்னவானாள்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவே இல்லை. அவளைப் பழி
தீர்க்கப் பார்த்திருந்த ஆதிக்க சக்திகள் அவளை இறந்தவர்களுள்
ஒருவராக்கிடும் முயற்சியில் ஈடுபட்டன. எல்லோரையும் நம்ப வைத்திடும்
ஆதாரங்களை முன் வைத்தன. இறுதியில் செஞ்சிலுவைச் சங்கமும் அவளுக்காக
அஞ்சலி செலுத்தியது. வெற்றுப் புதைகுழி மீது மலர்களைச் சாத்தியது.
Corinna எங்கே என்ற கேள்வி வெற்றுப் புதைகுழிக்குள் அடங்கிப் போயிற்று.
                Corinna மிகவும் சாதுரியமாகத் தன்னை உருமறைப்புச் செய்து கொண்டாள்.
ஆசிய நாடொன்றில் வாழ்ந்திடவும், மேற்குலகின் அநியாயங்களிலிருந்து அந்த
மக்களைக் காத்திடவும் தீர்மானித்து அங்கு சென்றாள். ஐரோப்பா அவளுக்காக
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க அவளோ ஆசியாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தாள்.
அந்த மக்களின் மொழியை மிக வேகமாகக் கற்றுத் தேர்ந்தாள். அடிமட்ட மக்களோடு
இணைந்து வயல் நிலங்களில் வேலை செய்தாள். மழையும் வெயிலும் சேறும்
காற்றும் வறுமையும் அவளை ஆசிய மகளாகச் செதுக்கியெடுத்தது.
                ஆசியாவின் தென்கிழக்கே வயல்வெளிகளால்  சூழப்பட்ட கிராமமொன்றில் அவன்
வாழ்ந்தான். விதவைத் தாயுடனும் சில மந்தைகளுடனும். கல்வியை
இடைநிறுத்தியிருந்தபோதும் சிந்தனைத் தெளிவுள்ள உள்ளம் அவனுக்கு இருந்தது.
                ஒரு நாள் கிழக்குலகின் எல்லா அடையாளங்களோடும் இருந்த பெண்ணொருத்தியை
மணம் புரிந்தான். அவனுடன் அவள் அந்தக் கிராமத்துக் காற்றில் மணம் பரப்பி
நடந்தாள். ஆற்றிலே நீச்சலடித்த வண்ணம் வெகுநேரம் நீராடினாள்.
வயல்வெளிகளில் மாடுகளை ஓட்டிச் சென்றாள். மேலே பறந்து செல்லும் பறவைக்
கூட்டங்களின் ஒலி தேய்ந்து மறையும் வரை அவற்றைப் பார்த்திருந்தாள்.
மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில்
கவனத்துடனேயே இருந்தாள். இனிமையுடன் அவளது நாட்கள் கழிந்தனவெனக் காண்போர்
நினைக்கும் வண்ணம் வாழ்ந்திருந்தாள்.
                ஒரு நாள் தனது சைக்கிளை வேகமாக மிதித்த வண்ணம் வீட்டை அடைந்தான்
அவ்விளைஞன். தனது மனைவியைத் தேடிய போது ஆற்றுக்கு அவள்
சென்றிருப்பதையறிந்து மிக வேகமாக ஆற்றை நோக்கி ஓடினான். குளித்து
முடிந்து அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கடைத் தெருவில் தான்
கேள்விப்பட்டவைகளையெல்லாம் அச்சத்தின் அதிர்வுடன் கூறினான்.
                திடீரென அந்த அமைதி சூழ்ந்த கிராமத்துக்கு அந்நிய மனிதர்கள்
வந்திறங்கினர். துப்பாக்கிகள் கவச வாகனங்கள் யாவும் கண்ணுக்குத் தெரியாத்
திசை வழியே நின்று திடுமெனப் பாய்ந்து வரக் காத்திருந்தன. அவனது
வாழ்விடத்தைப் பேய்கள் கூடிக் கேட்டு நின்றன.
                இளைஞன் அதிர்ந்து நடுங்கினான். தனது மந்தைகளையும் பயிர் வளர்ந்து
நிற்கும் மண்ணையும் இழக்க முடியாதென அழுதான். குளிர்ந்த காற்று வீசி
மரங்களின் இலைகளையும் பூக்களையும் சொரிந்திடச் செய்து கொண்டிருந்த மாலை
வேளையது. அவன் துயரம் மிகுந்தவனாக வீட்டின் முன்னால் ஓடிக்
கொண்டிருக்கும் நீரோடையைக் கடந்து மேலேறிச் செல்லும் தெரு வழியே
நடந்தான். அவள் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். இலைகளையுதிர்த்துப்
பூக்களை மாத்திரம் மலர வைத்த மரங்களின் கீழேயுள்ள பாலத்தின் கைப்பிடிச்
சுவர்மீது முழங்கைகளையூன்றி அடிவானை வெறித்தவாறு நின்றிருந்தான்.
தொடுவானத்தில் மலைகளின் பின்னால் மறைகின்ற சூரியனைப் பார்த்தவாறு தான்
இறந்து விடப்போவதாகக் கூறி விம்மினான். அவர்களின் கால்களின் கீழே
உதிர்ந்த பூக்களைச் சுமந்தவாறு ஆற்று நீர் சுழித்தோடியது.
                அவள் செயற்படும் தருணம் அதுவென உணர்ந்தாள். ஒன்றே ஒன்றுதான் அவள்
செய்ததெல்லாம். Corinna எடுத்து வைத்திருந்த சிதைந்த நகரத்தின் நிழற்
படங்களை, தெருவில் கொன்று வீசப் பட்ட இளைஞர் குழந்தைகளென ஒன்றன் பின்
ஒன்றாக மிக அமைதியாக அவனது விழியெதிரே நீட்டினாள். புதிய சக்தியுடன்
இளைஞன் துடித்தெழுந்தான்.
                வீசுவதற்கெனக் கைகளையும் கால்களையும் மாத்திரமே வைத்திருந்த மக்கள் படை
பலத்துடன் வந்த சக்தியிடம் எப்படிச் சண்டையிடுவது?
                அன்னையை அழைத்துச் சென்று புதிய குடிசையில் அமர்த்திய பிறகு அறுவடை
முடிந்த வயல் வெளியில் பயிரடிக் கட்டைகள் எஞ்சிய பின்னர், கடைசியாக வந்து
கூடு கட்டிய ஒரு சோடிப் பறவையும் தனது குஞ்சுகளுடன் பறந்து சென்ற பின்,
ஆற்றுக்கப்பால் மந்தைகளை ஒட்டிச் சென்ற பின்னர் அவர்கள் முகாந்திரங்
கொள்ளத் தமதிருப்பிடத்தைத் தந்தகல்வதாக ஒப்பந்தமியற்றினர்.
                ஒப்பந்தத்தின் கையெழுத்துகளில் Corinnaவினது சாயல் எப்படி வந்ததென
அதிகாரிகள் வெகுவாகக் குழம்பினர். கிழக்குலகின் வேரோடிய அடையாளங்களோடு
மாடுகளை ஓட்டிச் செல்லும் பெண்ணிடம் அவர்களின் சந்தேகங்கள் வலுவிழந்து
போயின. அவளோ அவர்களின் எதிரில் முக்காட்டினால் முகத்திரையிட்டு
எஞ்சியிருக்கும் கால இடைவெளியின் மணித்துளிகளைக் கணக்கிட்டவாறு
திரிந்தாள்.
                அவளது இல்லத்தை அவர்கள் நோட்டமிட வந்த பொழுதெல்லாம் ஒன்றில் புகையும்
அடுப்பை ஊதுகுழல் கொண்டு ஊதிக் கொண்டிருப்பாள். அன்றேல் சமையல்
பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருப்பாள். உரலிலிருந்து குற்றிய
நெல்லை முறத்திலிட்டு உமி பறக்கப் புடைத்துக் கொண்டிருப்பாள். அல்லது
கைகளில் தையலையோ, பின்னலையோ வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவளாக
அதில் ஈடுபட்டிருப்பாள். அதிர்ஷ்டம் என்னவெனில், தூர வருபவர்களைக்
காட்டிக் கொடுத்திடும்படியாக அவளது வீடமைந்திருந்தது.
                பின்னர் அவர்கள் கனவான்கள் எனக் காட்டிடப் புதிய முகமூடிகளை அணிய
ஆரம்பித்தனர். தேசிய விளையாட்டுக்களை வளர்ப்பதாகக் கூறி ஆற்றல் மிகு
இளைஞர்களை வலை வீசித் தேடலாயினர். இளைஞர்களை ஒன்று திரட்டுவதும் அவர்களது
உணர்வுகளைத் திசை மாற்றுவதுமே அவர்களது இலக்காக இருந்தது. அவர்களது
தந்திரங்களுக்குள் சிக்கி விடாமல் இளைஞர்களைக் காப்பாற்றுவது அவளுக்குப்
பெரும்பாடாயிற்று. எனினும் ஓய்ந்து விடாமற் செயற்பட்டு இளைஞர்களை ஈர்த்து
நின்ற அழிவை விட்டும் காப்பாற்றினாள்.
                அவள் அவனுக்கு விளையாட்டின் திறன்களைப் பயிற்றுவித்தாள். பதுங்கித்
தாக்குதல், தப்பித்தோடுதல், வியூகங்களையுடைத்து வெளிவரல் என எல்லாம்……
அவன் தனது தோழர்களுடன் திறன்களைப் பகிர்ந்து கொண்டான். எதிரணியை
எப்பொழுதும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றான். தலையில் நெற்றியைச்
சுற்றிக் கட்டிய பட்டியுடனும், தடிகளைக் கையிலேந்தியவளாகவும் அவள்
பயிற்றுவிக்கும் இலாவகமான காட்சியில் அவளது அடையாளங்கள் புலப்படலாயின.
அவள் மேற்குலகு தேடிக் கொண்டிருக்கும் Corinna தானேயென்பதை முதற்
தடவையாகக் கூறிய போது அவன் அதிர்ந்து போகவில்லை. அமைதியான புன்னகையுடன்
அதையவள் கூறும் வரை காத்திருந்தவனாகத் தலையசைத்தான்.
                வயது போன அன்னைக்கு எதுவுமே விளங்காத போதும் அந்தக் கிராமத்து வானில்
தோற்றம் கொடுத்த தூமகேது உரைத்த பலாபலன்களை எண்ணிச் சஞ்சலத்துடன்
இருந்தாள்.
                சண்டைக்குத் தயாரானவளாய் மருமகள் தடியுடன் நிற்பாள். கேட்டாளோ
விளையாட்டுப் பயிற்சிகளென்று சிரித்தவாறே கூறுவாள். எனினும் சட்டென
இறுக்கம் அவளது முகத்தில் நிலைகொள்ளும். தனது மகனும் மாலைப் பொழுதுகளில்
நண்பர்களுடன் கூடி அவ்வாறே செய்வான். இளைய தலைமுறையினர் மங்கலங்கள்
சூழ்ந்திட வாழ வேண்டிய குடும்ப வாழ்வைப் புறக்கணித்து விட்டமை உறுத்தலைத்
தந்த போதும் எதிலுமே தலையிடாது ஒதுங்கியிருந்தாள். கிரகணங்கள் வானில்
நிலைத்து நின்று விடுவதில்லையென்பதை அந்தத் தாய் நன்கு உணர்ந்திருந்தாள்.
                நாளுக்கு நாள் அவர்களைச் சூழப் பதற்றம் குடிகொண்டது. கவச வாகனங்கள்
அந்தக் கிராமத்தினூடாகச் சென்றுவரலாயின. பின்னர் அவை ஊருக்கு அண்மையிலேயே
நிலை கொள்ளலாயின.
                அவள் காணக் காத்திருந்த நாளை அந்த இளைஞர்களைக் கொண்டு உதயமாக்கிடும்
ஆற்றலைப் பெற்றாள். ஒரு அதிகாலைப் பொழுதில் கவச வாகனங்கள் வெடித்துச்
சிதறின. வீசுவதற்குக் கைகளையும் கால்களையும் மாத்திரமே கொண்ட
மனிதர்களிடம் அன்று ஆயுதங்களும் இருந்தன. ஒன்றுமறியாதிருந்த மக்கள் அன்று
படைபலமிக்க சேனையொன்றை அழித்துச் சிதைக்கும் வல்லமை பெற்றனர்.
வீதியெங்கும் மக்கள் இறங்கித் தம் தேசம் காத்த மகிழ்வைக் கொண்டாடினர்.
                மக்கள் எழுச்சியின் தலைவனாக அவ்விளைஞன் அடையாளங் காணப்பட்டான். அதிகார
வர்க்கம் தயாரித்து வைத்திருந்த குற்றச் சாட்டுக்களையெல்லாம் அவ்விளைஞன்
மீது அபாண்டமாகச் சுமத்தியது. மிகத் தந்திரமாக மேற்குலகின் கையாட்களின்
உதவியுடன் அவ்விளைஞன் கைது செய்யப்பட்டான். தன்னைச் சூழ்ந்து நின்ற
மக்களிடம் தனது மனைவியை விட்டுச் சென்றான்.
                Corinna முன்னெப்போதுமில்லாத கனத்த ஜோதியுடன் எரியத் தொடங்கினாள்.
சிறையின் அந்தகாரத்தை ஊடுருவிப் பிரவேசிக்கும் மெல்லிய மெல்லிய
கிரணங்களில் அந்த ஜீவ ஒளியைக் கண்டு ஆறுதல் கொண்டான் இளைஞன். ஒரு பெரும்
புரட்சியின் குரல் அவனது காதுகளில் எதிரொலித்தது.
- ஃபஹீமா ஜஹான்,

0 comments: