Monday, February 8, 2016

CORINNA



மேற்கின் சந்தடி மிக்க நகரொன்றில் அவள் பிறந்தாள். பெற்றோர்
தேவதையொன்றின் பெயரைத் தேடி அவளுக்குச் சூட்டினர். அவளை மாத்திரமே
பிள்ளையாகக் கொண்ட பெற்றோர் கண்ணின் மணியெனப் போற்றி அவளை வளர்த்தனர்.
                மிகத் தூய்மையான நேர்த்தியான ஆடைகளையே எப்பொழுதும் அணிவாள். சுத்தமும்,
அழகும், நாகரிகமும் மிக்கதாக அவள் வாழ்ந்த நகரிருந்தது. ஜேர்மனி
இராணுவத்தில் பயிற்சி பெற்றிருந்தபொழுதும் செஞ்சிலுவைச் சங்கமே அவளை
மிகவும் கவர்ந்திருந்தது. செஞ்சிலுவைச் சங்கத்தில் உயர் அதிகாரியாகும்
தகைமையை மிக இளம் வயதிலேயே தனது திறமையினால் பெற்றுக் கொண்டாள். இராணுவ
நடையின் மிடுக்கு அவளது அசைவுகளில் தெரிந்தது. கட்டளைகளைப்
பிறப்பித்தவாறு மிக வேகமாக நடப்பாள். சற்று உயரமான, ஒல்லியான அவளது
தோற்றத்தில் மிகப் பெரும் ஆளுமை புதைந்திருந்தது. உடன் நடக்கும் ஆண்களே
சில வேளை ஓடிச் சென்று அவளது நடையுடன் ஈடுகொடுக்க வேண்டிவரும்.
                அமெரிக்காவில் அவர்கள் இருந்த பொழுது அந்தச் சம்பவத்தைக் கேள்விப்
பட்டாள். அந்த நாட்டின் இராணுவம் பொருளாதார இலாபம் தேடித் தரும் இன்னொரு
நாட்டின் மீது பாய்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. தகவல் கிடைத்த மறு
நிமிடமே இராணுவத் தலைமைப் பீடத்திற்குச் சென்று இறங்கினாள். சூடேறிய
எண்ணெய்யில் இட்ட கடுகு போல வார்த்தைகளைப் பொறிந்து தள்ளியவளாகத்
திடுதிடுவென உள்ளே நுழைந்தாள். எவராலும் எச்சக்தியாலும் அவளது
பிரவேசத்தைத் தடை செய்ய முடியாதிருந்தது. திடுமெனப் பாய்ந்து வரும் ஒரு
காட்டாறு போல உட்சென்றாள். மரியாதைக்குரிய வார்த்தைகளையோ,
சம்பிரதாயத்துக்குரிய சொற்களையோ அவள் உச்சரிக்கவே இல்லை. ஆதிக்க வெறியினை
அப்பாவி மக்களைக் கொண்டு தீர்க்க வேண்டாமென வாதாடினாள். அவர்களது
தலையசைவுகளையும் தந்திரச் சொற்களையும் நம்பாது, வில்லை விட்டுப்
புறப்பட்ட அம்பாக அந்நாட்டை விட்டு நீங்கினாள்.
                காற்றைக் கிழித்தவாறு செம்பிறைக் கொடி படபடத்திட விரைந்திடும்
வாகனத்தின் பின்னே புழுதிப் படலம் கிளம்பி எழுந்திடப் பாலைவனமொன்றினை
ஊடறுத்துச் சென்றாள். பின்னர் மலைகளால் சூழப்பட்ட கம்பீரமான நகரொன்றினுள்
பிரவேசித்தாள். மினாராக்களின் வண்ணங்களையும், புராதன நாகரிகத்தின்
சிதையாத அழகுகளையும் மாதுளம் தோட்டங்களையும் கண்டு வியந்தவாறு அந்த
நகரத்தின் அழகிய பிரதேசங்களில் எல்லாம் புகுந்து வெளிப்பட்டாள். பேரீத்த
மர நிழலில் அமர்ந்து தெளிந்த நீரோடையில் நீர் மொண்டு செல்ல வரும்
மக்களைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள். அமைதியாக வாழும் அம் மக்கள்
யாருக்கும் எத் தீங்கும் இழைத்தவர்கள் அல்லர். வனப்பு மிகு அவ் அழகிய
நகரத்தை வெகுவாக நேசித்தாள். அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந்த
நகரத்தின் சௌந்தரியங்கள் சேகரிக்கப்பட்டன.
                திடீரென அந்நகரம் சுற்றி வளைக்கப்படலாயிற்று. மக்கள் தம்
மனங்களிலெல்லாம் பயமும், பீதியும் நிரம்பலாயிற்று. அச்சமுற்ற மக்கள்
வீதிகளில் இறங்கித் தாம் செல்லும் திசை அறியாது அங்குமிங்கும்
வெருண்டோடினர். நாசகாரப் புயலொன்றினை ஏவி விட வந்த சாத்தான்களிடம் மானுட
நேயத்தை வேண்டி மன்றாடினாள் Corinna. வல்லமை கொண்ட அந்தச் சக்திகளோ
எளியோரின் பிரார்த்தனைகளையெல்லாம் துவம்சம் செய்து முன்னேறின. தமது
பாட்டில் வாழ்வையோட்டிய அப்பாவிகளிடம் தீராத் துயரங்களைத் திணித்தன. அந்
நகரத்திலிருந்த அனைத்தும் சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் மண்ணோடு
கலந்தன. இறுதியில் அவளது மனதிலும் பதிவு நாடாக்களிலும் அந் நகரத்தை
நேசித்தோரின் நினைவுகளிலும் மாத்திரமே அந் நகரம் எஞ்சியிருந்தது. மண்
மேடாகக் காட்சியளித்த நகரத்தின் இடிபாடுகளுக்குள் அதன் புகழ் கூறிய
அனைத்தும் புதையுண்டன.
                பின்னர் அவள் நாசகாரத்தின் பிம்பங்களைச் சேகரித்தாள்.
கற்குவியலாக்கப்பட்ட தம் வீடுகளின் சிதிலங்களிடையே நின்று கதறும்
பெண்களை, கரும்புகையுடன் ஊழித் தீயெரியும் நகரத்தை, முன்னோர் தம்
கீர்த்திகளை உலகுக்குச் சொல்லிய இடங்களெல்லாம் தேடியழிக்கப் பட்டதை,
அங்கவீனமுற்று ஏதுமறியாமல் அழும் குழந்தைகளை, அபலைகளாக்கப் பட்ட
பெண்களின் அழுகுரல்களை, தன் நிலத்துக்காக உயிரைப் பலியிட்ட பின்
வீதிகளில் வீசப்பட்டுக் கிடக்கும் இளைஞர்களின் சடலங்களை ஒலியாய்,
காட்சியாய் உயிர் உருகும் வார்த்தைகளுடன் பதிவு செய்தாள். வெடி குண்டு,
விஷ வாயு, ஆயுதங்களென அனுப்பி வைத்த மேற்குலகின் அலங்காரங்களின் மீது
விட்டெறிந்தாள். பின்னர் காணாமற் போனாள்.
                செஞ்சிலுவைச் சங்கம் அவளைத் தேடித் தோற்றது. Corinna எங்கு சென்றாள்?
என்னவானாள்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவே இல்லை. அவளைப் பழி
தீர்க்கப் பார்த்திருந்த ஆதிக்க சக்திகள் அவளை இறந்தவர்களுள்
ஒருவராக்கிடும் முயற்சியில் ஈடுபட்டன. எல்லோரையும் நம்ப வைத்திடும்
ஆதாரங்களை முன் வைத்தன. இறுதியில் செஞ்சிலுவைச் சங்கமும் அவளுக்காக
அஞ்சலி செலுத்தியது. வெற்றுப் புதைகுழி மீது மலர்களைச் சாத்தியது.
Corinna எங்கே என்ற கேள்வி வெற்றுப் புதைகுழிக்குள் அடங்கிப் போயிற்று.
                Corinna மிகவும் சாதுரியமாகத் தன்னை உருமறைப்புச் செய்து கொண்டாள்.
ஆசிய நாடொன்றில் வாழ்ந்திடவும், மேற்குலகின் அநியாயங்களிலிருந்து அந்த
மக்களைக் காத்திடவும் தீர்மானித்து அங்கு சென்றாள். ஐரோப்பா அவளுக்காக
அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்க அவளோ ஆசியாவில் அஞ்ஞாதவாசம் புரிந்தாள்.
அந்த மக்களின் மொழியை மிக வேகமாகக் கற்றுத் தேர்ந்தாள். அடிமட்ட மக்களோடு
இணைந்து வயல் நிலங்களில் வேலை செய்தாள். மழையும் வெயிலும் சேறும்
காற்றும் வறுமையும் அவளை ஆசிய மகளாகச் செதுக்கியெடுத்தது.
                ஆசியாவின் தென்கிழக்கே வயல்வெளிகளால்  சூழப்பட்ட கிராமமொன்றில் அவன்
வாழ்ந்தான். விதவைத் தாயுடனும் சில மந்தைகளுடனும். கல்வியை
இடைநிறுத்தியிருந்தபோதும் சிந்தனைத் தெளிவுள்ள உள்ளம் அவனுக்கு இருந்தது.
                ஒரு நாள் கிழக்குலகின் எல்லா அடையாளங்களோடும் இருந்த பெண்ணொருத்தியை
மணம் புரிந்தான். அவனுடன் அவள் அந்தக் கிராமத்துக் காற்றில் மணம் பரப்பி
நடந்தாள். ஆற்றிலே நீச்சலடித்த வண்ணம் வெகுநேரம் நீராடினாள்.
வயல்வெளிகளில் மாடுகளை ஓட்டிச் சென்றாள். மேலே பறந்து செல்லும் பறவைக்
கூட்டங்களின் ஒலி தேய்ந்து மறையும் வரை அவற்றைப் பார்த்திருந்தாள்.
மாமியாருக்கு ஏற்ற மருமகளாகத் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில்
கவனத்துடனேயே இருந்தாள். இனிமையுடன் அவளது நாட்கள் கழிந்தனவெனக் காண்போர்
நினைக்கும் வண்ணம் வாழ்ந்திருந்தாள்.
                ஒரு நாள் தனது சைக்கிளை வேகமாக மிதித்த வண்ணம் வீட்டை அடைந்தான்
அவ்விளைஞன். தனது மனைவியைத் தேடிய போது ஆற்றுக்கு அவள்
சென்றிருப்பதையறிந்து மிக வேகமாக ஆற்றை நோக்கி ஓடினான். குளித்து
முடிந்து அவள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கடைத் தெருவில் தான்
கேள்விப்பட்டவைகளையெல்லாம் அச்சத்தின் அதிர்வுடன் கூறினான்.
                திடீரென அந்த அமைதி சூழ்ந்த கிராமத்துக்கு அந்நிய மனிதர்கள்
வந்திறங்கினர். துப்பாக்கிகள் கவச வாகனங்கள் யாவும் கண்ணுக்குத் தெரியாத்
திசை வழியே நின்று திடுமெனப் பாய்ந்து வரக் காத்திருந்தன. அவனது
வாழ்விடத்தைப் பேய்கள் கூடிக் கேட்டு நின்றன.
                இளைஞன் அதிர்ந்து நடுங்கினான். தனது மந்தைகளையும் பயிர் வளர்ந்து
நிற்கும் மண்ணையும் இழக்க முடியாதென அழுதான். குளிர்ந்த காற்று வீசி
மரங்களின் இலைகளையும் பூக்களையும் சொரிந்திடச் செய்து கொண்டிருந்த மாலை
வேளையது. அவன் துயரம் மிகுந்தவனாக வீட்டின் முன்னால் ஓடிக்
கொண்டிருக்கும் நீரோடையைக் கடந்து மேலேறிச் செல்லும் தெரு வழியே
நடந்தான். அவள் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள். இலைகளையுதிர்த்துப்
பூக்களை மாத்திரம் மலர வைத்த மரங்களின் கீழேயுள்ள பாலத்தின் கைப்பிடிச்
சுவர்மீது முழங்கைகளையூன்றி அடிவானை வெறித்தவாறு நின்றிருந்தான்.
தொடுவானத்தில் மலைகளின் பின்னால் மறைகின்ற சூரியனைப் பார்த்தவாறு தான்
இறந்து விடப்போவதாகக் கூறி விம்மினான். அவர்களின் கால்களின் கீழே
உதிர்ந்த பூக்களைச் சுமந்தவாறு ஆற்று நீர் சுழித்தோடியது.
                அவள் செயற்படும் தருணம் அதுவென உணர்ந்தாள். ஒன்றே ஒன்றுதான் அவள்
செய்ததெல்லாம். Corinna எடுத்து வைத்திருந்த சிதைந்த நகரத்தின் நிழற்
படங்களை, தெருவில் கொன்று வீசப் பட்ட இளைஞர் குழந்தைகளென ஒன்றன் பின்
ஒன்றாக மிக அமைதியாக அவனது விழியெதிரே நீட்டினாள். புதிய சக்தியுடன்
இளைஞன் துடித்தெழுந்தான்.
                வீசுவதற்கெனக் கைகளையும் கால்களையும் மாத்திரமே வைத்திருந்த மக்கள் படை
பலத்துடன் வந்த சக்தியிடம் எப்படிச் சண்டையிடுவது?
                அன்னையை அழைத்துச் சென்று புதிய குடிசையில் அமர்த்திய பிறகு அறுவடை
முடிந்த வயல் வெளியில் பயிரடிக் கட்டைகள் எஞ்சிய பின்னர், கடைசியாக வந்து
கூடு கட்டிய ஒரு சோடிப் பறவையும் தனது குஞ்சுகளுடன் பறந்து சென்ற பின்,
ஆற்றுக்கப்பால் மந்தைகளை ஒட்டிச் சென்ற பின்னர் அவர்கள் முகாந்திரங்
கொள்ளத் தமதிருப்பிடத்தைத் தந்தகல்வதாக ஒப்பந்தமியற்றினர்.
                ஒப்பந்தத்தின் கையெழுத்துகளில் Corinnaவினது சாயல் எப்படி வந்ததென
அதிகாரிகள் வெகுவாகக் குழம்பினர். கிழக்குலகின் வேரோடிய அடையாளங்களோடு
மாடுகளை ஓட்டிச் செல்லும் பெண்ணிடம் அவர்களின் சந்தேகங்கள் வலுவிழந்து
போயின. அவளோ அவர்களின் எதிரில் முக்காட்டினால் முகத்திரையிட்டு
எஞ்சியிருக்கும் கால இடைவெளியின் மணித்துளிகளைக் கணக்கிட்டவாறு
திரிந்தாள்.
                அவளது இல்லத்தை அவர்கள் நோட்டமிட வந்த பொழுதெல்லாம் ஒன்றில் புகையும்
அடுப்பை ஊதுகுழல் கொண்டு ஊதிக் கொண்டிருப்பாள். அன்றேல் சமையல்
பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருப்பாள். உரலிலிருந்து குற்றிய
நெல்லை முறத்திலிட்டு உமி பறக்கப் புடைத்துக் கொண்டிருப்பாள். அல்லது
கைகளில் தையலையோ, பின்னலையோ வைத்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவளாக
அதில் ஈடுபட்டிருப்பாள். அதிர்ஷ்டம் என்னவெனில், தூர வருபவர்களைக்
காட்டிக் கொடுத்திடும்படியாக அவளது வீடமைந்திருந்தது.
                பின்னர் அவர்கள் கனவான்கள் எனக் காட்டிடப் புதிய முகமூடிகளை அணிய
ஆரம்பித்தனர். தேசிய விளையாட்டுக்களை வளர்ப்பதாகக் கூறி ஆற்றல் மிகு
இளைஞர்களை வலை வீசித் தேடலாயினர். இளைஞர்களை ஒன்று திரட்டுவதும் அவர்களது
உணர்வுகளைத் திசை மாற்றுவதுமே அவர்களது இலக்காக இருந்தது. அவர்களது
தந்திரங்களுக்குள் சிக்கி விடாமல் இளைஞர்களைக் காப்பாற்றுவது அவளுக்குப்
பெரும்பாடாயிற்று. எனினும் ஓய்ந்து விடாமற் செயற்பட்டு இளைஞர்களை ஈர்த்து
நின்ற அழிவை விட்டும் காப்பாற்றினாள்.
                அவள் அவனுக்கு விளையாட்டின் திறன்களைப் பயிற்றுவித்தாள். பதுங்கித்
தாக்குதல், தப்பித்தோடுதல், வியூகங்களையுடைத்து வெளிவரல் என எல்லாம்……
அவன் தனது தோழர்களுடன் திறன்களைப் பகிர்ந்து கொண்டான். எதிரணியை
எப்பொழுதும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றான். தலையில் நெற்றியைச்
சுற்றிக் கட்டிய பட்டியுடனும், தடிகளைக் கையிலேந்தியவளாகவும் அவள்
பயிற்றுவிக்கும் இலாவகமான காட்சியில் அவளது அடையாளங்கள் புலப்படலாயின.
அவள் மேற்குலகு தேடிக் கொண்டிருக்கும் Corinna தானேயென்பதை முதற்
தடவையாகக் கூறிய போது அவன் அதிர்ந்து போகவில்லை. அமைதியான புன்னகையுடன்
அதையவள் கூறும் வரை காத்திருந்தவனாகத் தலையசைத்தான்.
                வயது போன அன்னைக்கு எதுவுமே விளங்காத போதும் அந்தக் கிராமத்து வானில்
தோற்றம் கொடுத்த தூமகேது உரைத்த பலாபலன்களை எண்ணிச் சஞ்சலத்துடன்
இருந்தாள்.
                சண்டைக்குத் தயாரானவளாய் மருமகள் தடியுடன் நிற்பாள். கேட்டாளோ
விளையாட்டுப் பயிற்சிகளென்று சிரித்தவாறே கூறுவாள். எனினும் சட்டென
இறுக்கம் அவளது முகத்தில் நிலைகொள்ளும். தனது மகனும் மாலைப் பொழுதுகளில்
நண்பர்களுடன் கூடி அவ்வாறே செய்வான். இளைய தலைமுறையினர் மங்கலங்கள்
சூழ்ந்திட வாழ வேண்டிய குடும்ப வாழ்வைப் புறக்கணித்து விட்டமை உறுத்தலைத்
தந்த போதும் எதிலுமே தலையிடாது ஒதுங்கியிருந்தாள். கிரகணங்கள் வானில்
நிலைத்து நின்று விடுவதில்லையென்பதை அந்தத் தாய் நன்கு உணர்ந்திருந்தாள்.
                நாளுக்கு நாள் அவர்களைச் சூழப் பதற்றம் குடிகொண்டது. கவச வாகனங்கள்
அந்தக் கிராமத்தினூடாகச் சென்றுவரலாயின. பின்னர் அவை ஊருக்கு அண்மையிலேயே
நிலை கொள்ளலாயின.
                அவள் காணக் காத்திருந்த நாளை அந்த இளைஞர்களைக் கொண்டு உதயமாக்கிடும்
ஆற்றலைப் பெற்றாள். ஒரு அதிகாலைப் பொழுதில் கவச வாகனங்கள் வெடித்துச்
சிதறின. வீசுவதற்குக் கைகளையும் கால்களையும் மாத்திரமே கொண்ட
மனிதர்களிடம் அன்று ஆயுதங்களும் இருந்தன. ஒன்றுமறியாதிருந்த மக்கள் அன்று
படைபலமிக்க சேனையொன்றை அழித்துச் சிதைக்கும் வல்லமை பெற்றனர்.
வீதியெங்கும் மக்கள் இறங்கித் தம் தேசம் காத்த மகிழ்வைக் கொண்டாடினர்.
                மக்கள் எழுச்சியின் தலைவனாக அவ்விளைஞன் அடையாளங் காணப்பட்டான். அதிகார
வர்க்கம் தயாரித்து வைத்திருந்த குற்றச் சாட்டுக்களையெல்லாம் அவ்விளைஞன்
மீது அபாண்டமாகச் சுமத்தியது. மிகத் தந்திரமாக மேற்குலகின் கையாட்களின்
உதவியுடன் அவ்விளைஞன் கைது செய்யப்பட்டான். தன்னைச் சூழ்ந்து நின்ற
மக்களிடம் தனது மனைவியை விட்டுச் சென்றான்.
                Corinna முன்னெப்போதுமில்லாத கனத்த ஜோதியுடன் எரியத் தொடங்கினாள்.
சிறையின் அந்தகாரத்தை ஊடுருவிப் பிரவேசிக்கும் மெல்லிய மெல்லிய
கிரணங்களில் அந்த ஜீவ ஒளியைக் கண்டு ஆறுதல் கொண்டான் இளைஞன். ஒரு பெரும்
புரட்சியின் குரல் அவனது காதுகளில் எதிரொலித்தது.
- ஃபஹீமா ஜஹான்,
Saturday, June 2, 2012
சொற்களின் சாம்ராஜ்ஜியத்தில் குறுகிப்போயுள்ள தீவின் மொழி -


பேராசிரியர் சுச்சரித கம்லத்

 தமிழில் : ஃபஹீமாஜஹான்





இந்நாட்களில் பேராசிரியர் சிறி குணசிங்ஹ அவர்களுக்குப் பாராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன, சிறப்பிதழ்கள் வெளியிடப்படுகின்றன என்பவற்றை அறியமுடிகிறது. நான் அவற்றைக் கண்டதில்லை.அவ்விதழ்களில் சிறந்த திறனாய்வுடைய கட்டுரைகள் வெளிவருகின்றனவா என்பதை நான் அறியேன். ஏனெனில், இக்காலத்தில் அத்தகைய இலக்கியத் தரமிக்க கட்டுரைகளை எழுதக்கூடியவர்கள் எமது நாட்டில் அரிதாகவே உள்ளனர்.


 சிறி குணசிங்ஹ அவர்களுக்குக் கிடைக்கும் இத்தகைய கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் எனதுள்ளம் பூரிப்படைகிறது. சிறி குணசிங்ஹ அவர்கள் இந்நாட்டிற்கு மிகப் பெரிய சேவையைச் செய்தவரும், இலக்கியம் மற்றும் கலாசார பங்களிப்புகளைச் செய்தவருமாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்தபோது அவர் எனது ஆசானுமாவார்.


 அக்காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இருந்த சகல விரிவுரையாளர்களும் பல்வேறு மொழித்துறைகளிலும் முழு நிறைவான புலமைமிக்கவர்களாகக் காணப்பட்டனர். ஆனாலும் அவர்களில் அனேகமானோர் வகுப்பறைகளில் கற்பிப்பதற்காக வரும்போது முனை மழுங்கிய ஆயுதங்களைப் போன்றிருந்தனர்.அவர்கள் மத்தியில் சிறி குணசிங்ஹ கூரிய ஆயுதமொன்றினைப் போலத் திகழ்ந்தார். சமஸ்கிருத இலக்கியத்தில் எந்தவொரு படைப்பைக் கற்பித்தாலும் அந்தக் கற்பித்தலானது கூரிய அறுவைக் கத்தியொன்றினால் தாமரை மலர் இதழ்க்குவியலொன்றை அரிவதைப் போன்றிருக்கும்.


 பண்டைய பாரத உணர்ச்சிக் கலைக்கோட்பாடுகளைப் பரீட்சார்த்தரீதியில் இலக்கிய நயத்தில் பிரயோகிப்பதை முதலும் முடிவுமாக சிறி குணசிங்ஹ அவர்களிடத்திலேயே கண்ணுற்றேன்.

 அப்போது அவர் கற்பித்த நூல்களில் காளிதாசனின் மேகதூதம் நூலும் ஒன்றாகும்.

 அது புதிதாக மணமுடித்த பெண்ணைத் தண்டனையொன்றின் நிமித்தம் பிரிய நேர்ந்த கணவனொருவன் மனைவிக்குக் கள்ளத்தனமாக அனுப்பும் தூதுகொண்டு உருவான செய்யுள் இலக்கியமாகும். இதில் செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன் மேகமாகும்.


அவளைத் தேடிப் பரந்து விரிந்த பாரதத் தேசத்தின் எண்ணற்ற கிராமங்கள், துறைகள், குடியிருப்புக்கள், இராசதானிகள் கடந்து மிதந்து செல்லும் மேகத்துக்கு இடைவழியில் காடுகள், மலைகள், குன்றுகள், ஆறுகள் போன்ற இயற்கையின் செல்வங்கள் எதிர்படுகின்றன. அவை அனைத்தும் வர்ணனைக்குட்படுகின்றன. அந்த வர்ணனைகளின் எந்தவொரு வசனமும், சொல்லும், படிமமும் செய்யுளின் பிரதான உணர்ச்சியான விரக வேதனையை அழுத்திக் கூறும்வகையில் காளிதாசன் கையாண்டுள்ள விதத்தை சிறி குணசிங்ஹ அவர்கள் நுணுக்கமாகப் பகுத்தாய்ந்து காட்டினார். அவ்விதம் கூறும் வேளையில் உடலின் முழு நரம்பு மண்டலத்தையும் ஊடுருவிச் செல்லும் உணர்வொன்று கிளர்ந்தெழும்.


 இலக்கியத்தினூடாக அத்தகையதொரு உணர்வைப் பெற முடியுமென்பதை அதற்கு முன்னர் ஒருபொழுதும் நான் நினைக்கவே இல்லை.

 அதன்பின்னர் சமஸ்கிருத இலக்கியத்தின் ஏனைய படைப்புகளைக் கற்கும் போதும் கற்பிக்கும் போதும் நான் இத்தகைய நடைமுறையையே கையாண்டேன். மாணவர்களுக்கு இலக்கியம் கற்பிக்கப் படவேண்டியது இவ்வாறுதான். ஆனாலும், இன்று இந்நாட்டில் அத்தகைய ஆசிரியர்கள் உள்ளனரா? அத்தகைய இலக்கிய அணுகுமுறையொன்று இன்று பல்கலைக்கழகங்களில் காணப்படுகிறதா? அத்தகைய விடயங்கள் இன்றுக்கு யாருக்குத் தேவைப்படுகின்றன?


 நான் சிறி குணசிங்ஹ தொடர்பாக இத்தகைய உயர்வான மதிப்பீட்டுடன் இருந்தபொழுதும் அவருக்குக் கிடைக்கும் கீர்த்திகளாலும் பாராட்டுதல்களாலும் ஆனந்தக் களிப்படைந்தாலும் சிறி குணசிங்ஹ அவர்கள் எனது கருத்துக்கள் தொடர்பாகத் தப்பபிப்பிராயம் கொண்டிருப்பது என்னுள்ளே பெரும் மனவருத்தத்தை உண்டுபண்ணுகின்றது. அந்த மனவருத்தமானது ஒரு வகையில் சிறி குணசிங்ஹ அவர்களுக்கு உளரீதியான சமனின்மை ஏற்பட்டுள்ளதோ என்பதனாலும் மற்றையது அதனால் சிங்கள இலக்கியத்துக்கு ஏற்படும் சிதைவு பற்றிய அச்சத்தினாலும் ஏற்பட்டதாகும்.


 முதலாவதாக தப்பபிப்பிராயத்துக்குப் பாத்திரமாகியுள்ள விடயம் கடந்த காலத்தில் விருது பெற்ற சுனேத்ரா ராஜகருணாநாயக வின் "பொது புருஷயா" பற்றி நான் தெரிவித்த கருத்துக்களாகும்.


 நான் அந்த நாவலை மொழியை அடிப்படையாக வைத்தே சாடினேன் என சிறி குணசிங்ஹ அவர்கள் கூறுகிறார்கள். எனது பெயரைக் கூறாமலேயே அவர் அதனைத் தெரிவிக்கிறார்.


 அந்த நூலில் மொழித் துஷ்பிரயோகமும் இலக்கணப் பிறழ்வுகளும் அனேக இடங்களில் காணப்படுகிறதென நான் கூறியது உண்மையானதே. இதற்கு முன்னர் நான் எழுதிய நான்கு கட்டுரைகளில் ஒரு கட்டுரையில், ஒரு பாகத்தில் மாத்திரமே இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.


 அதில் தவறு இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை. இலக்கியம் என்பது மொழியினூடாகக் கட்டியெழுப்பப்படும் ஒரு கலையாகும். கலைப் படைப்பொன்றை மதிப்பீடு செய்ய வேண்டியது அக்கலையின் நியமங்களின் அடிப்படையிலாகும் என்பது மாக்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். நான் மாக்சிய விமர்சகர்களில் ஒருவனாவேன்.


 மொழியைத் துஷ்பிரயோகம் செய்திருப்பின் இலக்கணத்தைச் சாகடித்திருப்பின் மொழிக் கலைக்கு உரித்துடைய புதினமொன்று எவ்வாறு சிறந்ததாக அமைய முடியும்?


 "பொது புருஷயா" வெற்றியளிக்காமல் போனதற்கான வேறு காரணங்களையும் நான் குறிப்பிட்டிருந்தேன். சிறி குணசிங்ஹ அவர்கள் அவை அனைத்தும் தொடர்பாக மெளனம் சாதித்தவராக எந்தக் காரணங்களையும் குறிப்பிடாமல் அந்த நூல் நல்ல நாவலொன்றாகும் எனக் கூறுகின்றார். இலக்கிய விமர்சனத்தில் எப்போது வந்து சேர்ந்த விமர்சன முறை இது?


 சிங்கள இலக்கியம் மிகவேகமாகச் சீரழிவை எதிர்கொண்டிருக்கும் இத்தகைய காலகட்டத்தில் இவ்வாறான நுண்ணாய்வற்ற கருத்துக்களை வெளியிடுவதும் சதுப்புநிலங்களை உருவாக்குவதும் குழப்பத்தில் மூழ்கியுள்ள தற்கால இலக்கியகர்த்தாக்களையும் அதனூடாக இலக்கியத்தையும் நாம் ஆபத்தில் தள்ளுவதாகும். சிறி குணசிங்ஹ அவர்களிடமிருந்து யார் தான் அத்தகையதொரு குற்றத்தை எதிர்பார்ப்பார்?


 "பொது புருஷயா" நாவலை எந்த வகையில் பார்த்த பொழுதும் அது தாழ்ந்த படைப்பொன்றாகும். குணதாச அமரசேகர அவர்கள் குறிப்பிட்டதைப் போல அதனை விருதுக்காக தேர்வு செய்தவர்கள் மந்தைகளே.


 இரண்டாவதாகத் தப்பபிப்பிராயத்துக்கு உள்ளாகியுள்ள விடயம் நான் "observer" இதழில் ரங்க சந்திரரத்ன உடன் வழங்கிய நேர்காணல் தொடர்பானதாகும்.


 வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் "அமாவதுர", "புத்சரண", "சத்தர்மரத்னாவலிய", "ஜாதக பொத" போன்ற பண்டைய சிங்கள இலக்கியத்தின் உயர்ந்த தரத்திலான படைப்புகளை முழு ஈடுபாட்டுடன் பயிலவேண்டும் என்று அந்நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன்.அப்போது தான் அவர்களது சொல்வளம், சொல்லாட்சி என்பன வளமுடையதாக மாறும் என்பதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.


 சிறி குணசிங்க அவர்கள் இந்தக் கூற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறான புரிந்து கொள்ளலால் "அமாவதுர" மொழியில் நாவல்களைப் படைக்க வேண்டும் என நான் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவொன்றிலேயே இதனை வெளிப்படுத்தினார். இந்தத் தகவலை என்னிடம் கூறியவர்கள் பிழையற்ற தகவலையே தந்துள்ளார்கள் என்று எண்ணுகிறேன்.


 "அமாவதுர" மொழியில் புதினங்களைப் படைக்க வேண்டும் எனக் கூறக் கூடியவர் அதி முட்டாளாகவே இருக்க வேண்டும். நான் முட்டாளாக இருக்கலாம். ஆனால் அதி முட்டாள் அல்ல என நினைக்கிறேன்.


 மார்டின் விக்கிரமசிங்ஹ, எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமர சேகர ஆகிய எழுத்தாளர்கள் மிக வளமான, மிக அலங்காரமான, மிகக் கவர்ச்சிமிக்க மொழியில் தமது படைப்புகளை எழுதியதன் காரணம் அவர்களிடம் காணப்பட்ட சொல்லாட்சிகளில் அத்தகைய இலட்சணங்கள் காணப்பட்டதாலாகும். அவர்கள் அத்தகைய தன்மைகளை அடையப் பெற்றது மேற்கூறிய நூல்களை முழு ஈடுபாட்டுடன் பயின்றதனால் ஆகும்.


 இக்காலத்தைய அனேக எழுத்தாளர்கள் உயிர்ப்பற்ற, அழுக்கடைந்த, வறிய, இலக்கணவழுவுள்ள (தூய்மையற்ற) சிங்கள மொழியில் எழுதக்காரணம் அவர்கள் "அமாவதுர" போன்ற நூல்களில் பரிச்சயமற்றவர்களாக இருப்பதனாலேயே. அவர்களின் மொழி வறியது, யாசகமானது, அழுக்கடைந்தது, உயிர்ப்பற்றது. இதற்கான காரணம் சௌந்தர்யமான மொழி தானாகவே வந்து சேராமையேயாகும். அது பிரயத்தனமெடுத்துப் பயிற்சி பெறவேண்டியது. இவர்கள் அதைச் செய்யவில்லை.அதனால் இத்தகையோர் தொடர்ந்தும் வறிய மொழியிலேயே எழுதுகின்றனர். அவற்றுக்காக விருதுகளையும் பெறுகின்றனர்.


 பண்டைய இலக்கியக் கோட்பாட்டாளர்கள் சுந்தரமான மொழியொன்றின் பத்து குணாம்சங்களைப் பட்டியற் படுத்தியுள்ளனர்.

 அவை பின்வருமாறு:

 1சொல்லாடல்: (மிருதுவான தன்மை, தட்டுத்தடுமாற்றம் இல்லாத தன்மை)

 2.மனநிறைவு- நயம் பாராட்டுதல்: ( இலகுவாகப் பொருள் விளங்குதல், வாசிக்கும் பொழுது உள்ளத்தில் உறைதல்)

 3. திடகாத்திரம் :(முரணான சொற்களின்மை, ஆற்றொழுக்கான நடை)

 4.மனக்கிளர்ச்சி: (காதல், சோகம், துயரம் ஆகிய உணர்வுகள், மன உணர்ச்சிகள் வெளிப்படல், அது பூத்துக் குழுங்கிய மலர்த்தோட்டத்தில் நுழைந்த வண்டுகளைப் போல, வாசகர்களைக் கிளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இருத்தல்)

 5.இனிமை:( வாசிக்கும் வேளை பசிய தளிர்கள் நிரம்பியதும் விதம் விதமான மலர்கள் உள்ளதும் தேன் குடித்துக் கிறக்கமடைந்த வண்டுகள் இரைச்சலிடுவதும் பல்வேறு பறவைகள் குரலெழுப்புவதுமான வனமொன்றினூடாகச் செல்வதைப் போன்ற உணர்வு தோன்றல்)

 6.விளக்கம் -தெளிவு : ( எதிர்பார்க்கும் பொருள் இயல்பாகவே வெளிப்படல்)

 7.தாராளத் தன்மை: (ஆக்கத்தின் தோற்றக் கவர்ச்சியான தன்மை காணப்படல். படிக்கும் போது தானிருக்கும் இடத்திலிருந்து உயரே எழல்)

 8.ஆற்றல்- வலிமை :( மொழியின் உயிராற்றல், ஜீவ சக்தி, உயிர்ப்பான தன்மை)

 9.அழகு: (படைப்பு முழுதும் பரம்பியுள்ளதும் அழகிய பெண்ணின் அங்கம் பூராகவும் பரந்து செல்லும் வசீகரத்தைப் போன்றதுமான தன்மை)

 10.ஒரு முகப்படுத்தல் (ஒரு மையப் படுத்தல்) :(ஒரு பொருளின் பண்பை பிறிதொரு பொருளில் காணல். மலர் கண்விழிக்கும் - மலர் உறங்கும் எனபதைப் போன்றது. இங்கு உயிர் உள்ளவர்களின் செயலை உயிரற்றவைகளிடத்தே காணல்)

 தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளில் இத்தகைய பண்புகளைக் காண முடிகிறதா?


 "அமாவதுர" போன்ற படைப்புகளில் இத்தகைய பண்புகள் காணப்படுகின்றன.அவற்றைப் படிக்கின்ற வளர்ந்துவருகின்ற எழுத்தாளனுக்கு அதன் பண்புகள் இயல்பாகவே தொற்றிக் கொள்ளும்.


 அனேக நூல்களை வாசித்து, உலகை உற்று நோக்கி, புலமைமிக்கவர்களோடு பழகி அடிமனத்தில் கட்டியெழுப்பப்பட்ட அதிகளவான சொற் திரளைக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் எழுத அல்லது பேச ஆரம்பிக்கும் போது அந்தச் சொற் திரட்டுக்கள் தானாகவே ஊற்றெடுத்து வரத் தொடங்கும். எழுத்தாளன் சுயபடைப்பாற்றலைக் கொண்டிருப்பவனாயின் சிந்தனையாளன் ஒருவனாக இருப்பின் இடத்திற்குத் தகுந்த சொல், அமைப்பு, வெளிப்பாடு, அலங்காரம் என்பன இயல்பாகவே அவனிடத்தேயிருந்து வெளிப்படும்.

 அத்தகைய ஒருவன் சொற்களை ஆள்பவனாக, வசீகரமிக்க சொற்களைக் கொண்ட ஒருவனாகக் கருதப்படுவான்.

9ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆனந்த வர்தனா எனும் பெயருடைய தத்துவஞானி இவ்வாறு கூறியுள்ளார். (http://en.wikipedia.org/wiki/Anandavardhana - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம் -மொ.ர்)

 "ஆய்ந்தோய்ந்து புனையும் போது சுயபடைப்பாற்றலைக் கொண்டிருக்கும் கவிஞனிடம் அவனிடத்தே தேங்கிய நிலையிலுள்ள மிகச் சிரமமான சொற்கள், கருத்துக்கள், அலங்காரங்கள் போன்றன 'நான் முந்தி நான் முந்தி' எனப் போட்டிபோட்டுக்கொண்டு பாய்ந்துவரும்."

 போதிய சொற்களைத் தன்னகத்தே கொண்டிராத வறிய எழுத்தாளனுக்கு அத்தகைய சொற்களும் பண்புகளும் எவ்வாறு வரக்கூடும்?


 அதே நூற்றாண்டில் வாழ்ந்த அபினவகுப்த என்பவர் பின்வருமாறு கூறினார். (http://en.wikipedia.org/wiki/Abhinavagupta - தகவல் தேவைப்படுவோர் இதில் பார்க்கலாம்- மொ.-ர்)

 "படைப்பாற்றல் என்பது முன்னர் இல்லாத அபூர்வ விடயங்களைப் படைக்கும் ஞானமாகும்.அதனிலும் விஷேடமாகப் பல்வேறு சுவைகளும் உள்ளடங்கிய உரைநடை, செய்யுள், காவியங்கள் படைக்கும் ஆற்றலாகும்."

 சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவனுக்கும் இத்தகைய ஆற்றல் அமையப் பெற முடியுமா?

 இவ்வாறு இயல்பாகவே வந்துதிக்கும் சொற்கள், வெளிப்பாடுகள், அலங்காரங்கள் போன்றவற்றிலிருந்து இது பொருத்தமானது இது பொருத்தமற்றது என்பதை வேறுபடுத்திக் கொள்ளக் கூடிய புத்திக்கூர்மையுடன் படைக்கப்படும் உரைநடை அல்லது செய்யுள் "இனிய காவியங்கள்" என அடையாளங் காணப்பட்டு்ள்ளதாக குன்தக-kunthaka எனும் பெயருடைய இலக்கிய ஞானியொருவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இனிய காவியங்களின் இயல்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


 "வாட்டமடையாத புத்துணர்ச்சியான படைப்பாற்றலுடன் தோன்றிய புதிய ஓசைகளாலும் புத்துயிர்ப்பான சொற்களாலும் வடிவமைந்தவை: களிப்பூட்டும் அலங்காரமுடையவை: அவையும் இயல்பாகவே வந்து சேர்ந்தவை: மனோபாவங்களும் உலக நியதிகளும் அவற்றின் மூல இயல்பைச் சிதைவடையச் செய்யாமல் புலப்படுபவை:இலக்கிசய் சுவைகள் அவற்றின் இலட்சியத்தைக் கண்டடைவதில் திடமாக இருப்பவை: இவை அனைத்தும் அதைப் படிக்கும் வாசகனைக் கவிஞனுடன் மனதால் இனிய உரையாடலில் ஈடுபட வழிவகுப்பவை.ஏதேனுமொரு வசீகரம் இருப்பின் அது படைப்பினூடாகவே வெளிப்பட்டதாக இருக்கும். இந்தக் காவியப்பாதை இனிய பாதை என்ற பெயருடையது. மலர்கள் மலர்ந்திருக்கும் கானகமொன்றினூடாகச் செல்லும் வண்டுகளைப் போல நல்ல கவிஞர்கள் பயணிப்பது இந்தப் பாதையினூடாகும்."


 "குத்தில காவ்ய", "யசோதராவத" , "வெத்சன்தர ஜாதகய", "மளகிய எத்தோ", " மளவுன்கே அவுருது தா" போன்றன இவ்வர்த்தத்தில் இனிய காவியங்களாகும்.

 வாசிப்பறிவில்லாத சொற்களை யாசித்துக் கொண்டிருப்பவர்களால் அத்தகைய காவியங்களைப் படைத்திட முடியுமா?


 இதனால் தான் "அமாவதுர" போன்றவற்றை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் கற்றறிந்திட வேண்டும் எனக் கூறினேன்.


 இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளை இறைவனே வந்து தந்ததைப் போல ஒரு நூல் கிடைத்துள்ளது. அதனைப் பாகிஸ்தானில் வாழும் எனது நண்பரான நிஹால் ஷஹீட் அனுப்பிவைத்துள்ளார். நூலின் பெயர் Empires of the word என்பதாகும்.


 அதன் ஆசிரியர் ஆங்கிலேயரான நிக்கலஸ் ஒஸ்ட்லர் என்பவராவார். கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் உட்பட மொழித்துறையில் ஆரம்ப பட்டத்தைப் பெற்ற அவர் அமெரிக்காவின் M.I.T.நிறுவனத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அங்கு அவரின் ஆசிரியராக நோம் சோம்ஸ்க்கி இருந்தார். ஒஸ்ட்லர் 26 மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.தனது மொழியை மாத்திரம் உயர்வென்று கூறி ஏனையமொழிகளை இகழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் சில மூடர்களுக்கு இது அதிர்வை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். ஒஸ்ட்லர் சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் உலகெங்கிலும் பரந்து சென்றடைந்த விதத்தை உள்ளத்தில் பதியும் வண்ணம் விபரிக்கின்றார். மொழியின் உயர்ந்த சக்தி என்பது அவர் அதற்கிட்டுள்ள தலைப்பாகும். அவர் சமஸ்கிருத மொழியின் அடிப்படை அழகின் உச்சத்தை எடுத்துக்காட்டுகிறார்.


 கி.பி. 3வது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்து மதத்தின் வேத நூலொன்றான "ரிக் வேதத்" திலிருந்து பின்வருமாறு ஒஸ்ட்லர் எடுத்துக் காட்டுகிறார்.

 விழி இருந்தும்
அனேகர்
சொற்களைக் காண்பதில்லை


 செவி இருந்தும்
 அனேகர்
சொற்களைக் கேட்பதில்லை

 எனினும் பிறிதொருவனுக்கு
அது தோன்றக்கூடும்
வசீகரமிக்க மங்கையொருத்தி
தனது கணவனை நோக்கிச்
செல்வதைப் போல



 அவ்வாறு தோற்றமளிக்கப் போவது நூல்களைக் கற்றவனுக்கே அன்றி வாசிக்காத அற்பர்களுக்கு அல்ல.


 மேலும் அவர் தத்துவக் கவிஞரான பவபூதி யின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.


 வளையல்களை அணிந்து மனிதன்
அலங்கரித்துக் கொள்ள மாட்டான்
 நிலவு போலப் பிரகாசிக்கும் ஆரங்கள் அணிவதையோ
 வாசனைத் திரவியங்கள் தெளித்துக் கொள்வதையோ மலர்வளையங்களையும் கிரீடங்களையும்
 சூடிக்கொள்வதையோ செய்யமாட்டான்
அவனை மெய்யாகவே அழகுபடுத்துவது
 தூய செம்மைமிக்க மொழியேயாகும்


 ஆனாலும் இலங்கையின் இலக்கிய விருதுகளுக்குப் பேச்சுவழக்கில் உள்ள மொழியே போதுமென மூடர்கள் கூறுகின்றனர். இத்தகைய விருதுகளை வழங்குபவர்களைவிடவும் இன்றைய இலக்கியத்தின் எதிரிகள் வேறுயாருமில்லை.

 இந்து மதத்தின் இன்னொரு வேத நூலான "அதர்வண வேதம்" பின்வருமாறு கூறுகிறது.

 எனது உணவையும் நீரையும்
உன்னத மொழியையும்
 எவனொருவன்
அழிப்பதற்கு விளைவானோ


 இடியின் கடவுளே
தீயின் கடவுளே
அச்சந்தரும் பேரோசைகளெழுப்பி
எறிகணைகளைக் கரமேந்தி
 ஓங்கியடித்துச் சிதைத்திடு அவனை



 நன்றி: Rasanjalee - 2010 .05 .09


  நன்றி கலைமுகம் இதழ்-53:April-June 2012
Tuesday, January 17, 2012

லெஸ்ரரின் "நிதானய" (புதையல்) - திரைப்படத்தைப் 'பின் காலனித்துவப் பிரதி'யொன்றாக வாசிக்க முடியுமா?





லெஸ்ரரின் "நிதானய" (புதையல்) - திரைப்படத்தைப் பல்வேறு முறைகளில் வாசிக்கக் கூடிய படைப்பொன்றாக இனங்கண்டுள்ளேன். மனிதனொருவனின் உள்ளார்ந்த விடயங்கள் தொடர்பில் விரிவான யதார்த்தங்களைப் பேசும் திரைப்படமொன்றாக அதனைப் பலரும் வாசிக்க இடமுள்ளது. உள ஆய்வு குறித்த திரைப்படமொன்றை வாசிப்பதற்கு அழைப்புவிடும் சமிக்ஞைகள் அதன் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. ஆயினும் அந்த இலகுவான பிரவேசத்தைக் கைவிட்டுவிட்டு இந்த சிறந்த படைப்பை பின் காலனித்துவ பிரமானங்களுக்குள் தக்கவைத்து அதனூடாகப் புதிய கருத்துக்களை வெளிப்படுத்த முடியுமா எனக் காண விளைகிறேன். "நிதானய" திரைப்படத்தை நான் பல தடவைகள் பார்த்திருப்பினும் இதை எழுத முற்படும்போது சத்யஜித் மைடிபே அனுப்பியிருந்த மின்னஞ்சலொன்றில் காணப்பட்ட லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் கூற்றொன்றினை மேற்கோள் காட்டி இக்கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன்.

"I feel certain that film-makers of the future will be more subtle, more elliptical, more oblique in their narration and that all traces of the literary and the theatrical will be banished from their work" 
-Lester James Peries 

லெஸ்ரர் எதிர்கால நெறியாளர்களிடமிருந்து காண விரும்பிய இவ்விடயங்கள் நிதானய என்ற அவரது சிறந்த படைப்பில் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே காணக் கூடியதாகவிருந்ததைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அவரிடமிருந்து தர்மசேன பதிராஜ, பிரசன்ன விதானகே ஆகியோர் பெற்றுக் கொண்ட அந்தத் திரைக்கதையமைப்பைத் தமதாக்கிக் கொள்ளக்கூடிய புதிய குழுவொன்றைக் காண்பதற்கு என்னுள் இருக்கும் விருப்பும் இக்கட்டுரையூடாக வெளிப்படுத்தப் படுகின்றது.


சிறுகதையிலிருந்து திரைப்படத்துக்கு

நிதானய திரைப்படத்தையும் அதற்கு அடிப்படையாக அமைந்த சிறுகதையையும் ஒப்பிட்டு நோக்கும் வேளை திகைப்பே ஏற்படுகின்றது.அது மிகவும் பலவீனமான வகையில் அமையப் பெற்ற சிறுகதையொன்றாகும். அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டமைந்த இந்தத் திரைப்படத்துக்கும் அந்தச் சிறுகதைக்கும் இடையில் இருப்பது உயர்வானதற்கும் மேன்மையற்றதற்கும் இடையிலான வேறுபாடாகும்.அந்த எளிமையான கதையானது சிறப்பான திரைப்படமொன்றாக உருவாகியிருக்கும் விதத்தை உணர்ந்து கொள்ளும் போது உடனடியாகவே அக் கதையைத் திரைப்பட இயக்குனர் கட்டியெழுப்பிய முறைகளை நோக்கி எமது உள்ளங்கள் ஈர்க்கப்பட்டுச் செல்கின்றன. ஒரு தனி மனிதனைச் சுற்றிப் பின்னப்பட்ட எளிமையான கதையொன்று அத்தகைய சிறப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தக்க வகையில் குறியீடுகளுக்கிடையே பெயர்ச்சியடைவது எவ்விதம்?

குறியீடுகளுக்கிடையே பெயர்ச்சி - என்பது ஒரு குறியீட்டு வடிவத்தைக் கொண்டமைந்த பிரதியொன்று வேறு குறியீட்டு வடிவமொன்றாக மாற்றமடைவதாகும் என ரோமன் யாகொப்சன் கூறினார்.சிறுகதையானது சொற்களின் குறியீடுகளால் உருவான பிரதியொன்றாகும். அதனைக் கேட்டல், பார்த்தல் ஆகிய குறியீடுகளைக் கொண்ட பிரதியொன்றாக மாற்றுவதே திரைப்படத்தில் நடைபெறுகின்றது.இந்தப் பெயர்ச்சியானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றிருப்பதாக "நிதானய" திரைப்படத்தைப் பார்த்த மூன்று சந்தர்ப்பங்களிலும் எண்ணினேன்.கலைப் படைப்புகளை வாசிப்புச் செய்யும் போது கடைபிடிக்கக் கூடிய கோட்பாடு சார்ந்த பிரவேசங்களில் போதிய அறிவைக் கொண்டவனாகவே நான் அதனை மூன்றாவது தடவையாகப் பார்வையிட்டேன்.அதனால் மேலும் அதிகமான விடயங்களை அந்த திரைப்படத்தினூடாக நான் அப்பொழுது கண்டேன். இந்தக் கட்டுரையினூடாக அவ்விதமாக நான் புதிதாகக் கண்டடைந்த விடயங்களைக் கூறவிளைகிறேன்.

அவ்விதம் நான் புதிதாகக் கண்டவற்றை விபரிக்கும் போது நான் எடுத்துக் கொள்ளக் கூடிய பொருத்தமான கோட்பாட்டுப் பிரவேசமாக பின் காலனித்துவக் கோட்பாடுகளைக் கருதுகிறேன். சிறந்த கலைப்படைப்பை முன்னிறுத்தி பல்வேறுபட்ட கோட்பாட்டுப் பிரமாணங்களுக்கு ஊடாக பயணித்து அப்படைப்பின் உள்ளார்ந்த அர்த்தங்களை வெளிப்படுத்த முடியும். பல்வேறு வகைப்பட்ட பிரமாணங்களை நோக்கி அழைப்புவிடும் பண்பானது சிறந்த கலைப் படைப்பொன்றின் இயல்பாகும். நிதானய சிறுகதைக்கு இல்லாத அவ்வியல்பானது அச்சிறுகதையின் குறியீடுகளுக்கிடையே பெயர்ச்சிக்கு உட்பட்டு உருவான நிதானய திரைப்படத்துக்குக் கிடைத்தது எவ்விதம்?


சிறுகதையிலிருந்து கதைமாந்தருக்கு

சிறுகதையின் பிரதான பாத்திரத்தில் வரும் கதையின் நாயகன், தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ஒரு கடனாளியாக இருப்பினும் தன்வசம் எண்பதாயிரத்துக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.அவருக்கு மோட்டார் வாகனமொன்று இருப்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். இவ்விரு சிறிய விடயங்களும் காட்சி வடிவத்திற்கு மாற்றமுறுவது மிகவும் விரிவானதாக மட்டுமன்றி முழு திரைப்படத்தையும் புதிய வடிவத்தில் கட்டியெழுப்பும் விதமாகவும் அமைந்துள்ளது. இது பெயர் முன்னோட்டத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. நெறியாளரின் பெயர் விழும் இடத்திலேயே கதாநாயகனின் வீட்டின் கோட்டுச் சித்திரமொன்றும் விழுகிறது.அது திரைப்படத்தின் புகைப்படமொன்றல்ல. கோட்டுச் சித்திரமொன்றாகும். அதனால் அது சொற் குறியீடு எனப்படுகின்ற சிறுகதையானது பெயர்ச்சிக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை உணர்த்துகின்றது.அதன் பின்னர் நாம் கதை கூறும் வெளிக்கு வரும்பொழுது அதாவது மீசொன் சேன் இடம் வரும் பொழுது கதாநாயகனின் நிழல் வடிவத்தையே காணக் கிடைக்கிறது.அதன் பிறகே கதாநாயகன் அல்லது நடிகனைக் காணமுடிகிறது. அவனை முதன்முதலாக் காணும் போது அவன் தன்னைப்பற்றிய கதையை எழுதிக் கொண்டிருப்பதையே காண முடிகிறது. இது ஒரு நல்ல திரைப்பட உத்தியொன்றாகும். அவன் சொற்களால் எழுதிக்கொண்டிருக்கும் கதையை அச்சந்தர்ப்பத்திலேயே நெறியாளர் காட்சிகளால் எழுதுகிறார்.அவன் தனது கதையை எழுதிவைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறும் கட்டத்தில் கமராவானது வீட்டுக்கு வெளியே வந்து அவன் இருக்கும் வீட்டை எமக்குத் தூரக் காட்சியாகக் காண்பதற்கு இடமளிக்கிறது.

தான் பழைய பொருட்களுக்கு ஆசைப்படுவதாகக் கதாசிரியர் கூறும் பொழுது ஒரு பழைய வீட்டை எம்மால் காணமுடிகிறது. அது திரைப்படம் ஆரம்பத்தில் உருவான 1972 களின் போது காணக்கிடைத்த பொதுவான வீடமைப்பு முறைகளைக் கொண்டதாயினும் பழைய தோற்றத்தை தரும் ஒரு வீடாகும்.அதைத் தொடர்ந்து கமராவிற்கும் வீட்டிற்கும் இடையில் வரும் விசாலமான விருட்சமானது புராதனத்தன்மையை மேலும் தீவிரப்படுத்திக் காட்டுகிறது. பழையதாக இருப்பதைப் போலவே இந்த வீட்டைச் சூழப் பகலிலும் இருளாகவே இருப்பதாகவும் கூறுவதனூடாகக் கதாசிரியர் அந்த வீட்டினுள்ளும் அதைச்சூழவும் புதிர்த்தன்மையொன்றை ஏற்படுத்துகிறார். மீண்டும் வீட்டினுள் செல்லும் கமரா அவ்வீட்டினுள்ளே காணப்படும் பாழடைந்த தன்மையையும் பழைமையையும் சனநடமாட்டமின்மையையும் புலப்படுத்துகிறது.ஒரு காலத்தில் விருந்துக் கொண்டாட்டங்களில் கதைகள் பேசியபடி பிரபுக்களையும் விஷேடமாகப் பெண்களையும் சுமந்திருந்தவையெனக் கருதக்கூடிய சோபாக்களும் வெறுமையாக உள்ளன. மூலைகளில் காணப்படும் இறந்துபோன மிருகங்களும் பஞ்சடைக்கப்பட்ட மிருகங்களும் (stuffed animals) ஹிச்கொக் இன் 'சைகோ' திரைப்படத்தைப் போன்றதொரு புதிர்த்தன்மையைக் காட்டுகிறது. அவ்வாறே பஞ்சு நிரப்பப்பட்ட மிருகங்களின் ஊடாகப் புராதனத்தன்மை தொடர்பான அவரது ஆர்வமும் வெளிப்படுத்தப்படுகிறது.

மோசமான கடனாளியாகி இறந்து போன தகப்பனாரிடமிருந்து தனக்கு உரித்துடையதான வீட்டைவிற்றுக் கடனையடைப்பதற்கு அவருக்கு மனதை தேற்றிக்கொள்ள முடியாமற்போனது ஏனென்று அவரால் சிந்தித்துப்பார்க்க முடியாமலிருப்பதாக கதாசிரியர் குறிப்பிடுகிறார். அதன் பிறகு மிகவும் முக்கியமான தகவலொன்றை அவர் எமக்குக் கூறுகிறார். அதாவது இந்த வீட்டைப் பராமரிப்பதற்கும் தனது குடும்ப கெளரவத்துக்கு ஏற்றவாறு வாழ்வதற்கான பணத்தைத் தேடுவதற்காகவும் அவர் அரசின் கொந்தராத்து வேலைகளைச் செய்வதாகவும் குறிப்பிடுகிறார். அவ்விதம் அவர் கூறும் போது அவரது அறையில் புத்தகங்களுக்கு இடையே பாலமொன்றின் வரைபடமொன்று வைக்கப்பட்டுள்ளதை எமக்குக் காண முடிகிறது.

அதன் பிறகு கதாசிரியர் அவரது சிறுபிராய காலத்துக்குச் செல்கிறார். அங்கே அவர் கதையொன்றைக் கேட்டவாறு நித்திரைக்குச் செல்வதை நாம் காண்கிறோம். அந்தக் கதை பழைய உலகொன்றைப் பற்றியதாகும். அவர் மீண்டும் இளமைப் பருவத்ததுக்கு வரும் பொழுது ஏட்டுச்சுவடியொன்றை -அதாவது இன்னுமொரு பழைய பொருளொன்றைப் - பற்றி முதல் தடவையாகக் கூறுகிறார். பழைய வீடொன்றில் வாழும் பழைய பொருட்களை விரும்பும் அவர் பழங்கதைகளைக் கேட்டவாறு வளர்ந்த அவர் தனது ஆலோசகராகப் பழைய ஜோதிடர் ஒருவரைக் கொண்டுள்ளார்.

ஆயினும் இக்காட்சிகளில் வரும் அவரது ஆடையணிகள் புத்தகங்கள் ஆகியன அவரை மேற்குலகுக் கல்வியின் ஆதிக்கத்தின் கீழ் உருவான மனிரொருவராவே சித்திரிக்கின்றன. ஆயினும் அவர் அவ்விரு உலகங்களில் எதற்குமே முழு உரித்துடையவர் அல்ல என்பதுவும் எமக்குத் தென்பட ஆரம்பிக்கின்றது. இத்தகைய உணர்வுநிலை சிதைவடைந்த மனிதனொருவனின் வாழ்வின் மீதிப்பகுதியை எங்கள் முன்வைப்பதற்காக திரைப்படத்தின் எஞ்சிய பகுதி விரிவடைந்து செல்கிறது. இந்தச் சிதைவடைந்த உணர்வுநிலையானது மிகவும் இறுக்கமாக ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுபொழுது நெருக்கமாகவும் சிறுபொழுது தூரமாகவும் சிறுபொழுது சுகமாகவும் சிறுபொழுது மீளக் காயப்படும் பிளவைக் கொண்டதுமான இந்த உணர்வுநிலையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காகக் கனகச்சிதமாய் இசையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசையினூடாகவும் வயலீன் இசையும் பறை இசையும் இணைந்ததான உணர்வுநிலையே கட்டியெழுப்பப்படுகிறது. அது விலீ அபேநாயக்காவினது உணர்வுநிலையின் இருவேறு காலகட்டங்களை செவிப்புலக் குறியீட்டுத் தொகுதியாக மாற்றுவதில் வெற்றியடைந்துள்ளது.


பின் காலனித்துவக் காலகட்டம்

சிறுகதையாசியரால் வழங்கப்படாத இத்தகவல்கள் அனைத்தும் திரைப்பட இயக்குனரால் கட்டியெழுப்பப்பட்ட குறியீடுகளைக் கொண்ட பிரதியினுள் உள்ளடங்குகின்றன. இந்தக் குறியீடுகளைக் கொண்ட பிரதியானது மிகச்சாதாரணமான சிறுகதையொன்றைத் துல்லியமான வரலாற்றுக் கட்டமைப்பொன்றினுள் நிலைநிறுத்தப்பட்ட கிளைக்கதையொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இக் கட்டமைப்பானது வேறெதுவுமல்ல இந்நாட்டில் காணப்பட்ட காலனித்துவத்தின் உச்சக் கட்டமாகும். வரலாற்று ரீதியாக திரைப்படத்தில் வருகின்ற மீசோன் சேன் - எனப்படுகின்ற இயக்குனர் கமராவுக்கு முன்னால் வைத்துள்ள அனைத்தும் - நிலைநிறுத்தப்பட வேண்டியிருப்பது ஒன்றில் 19ம் நூற்றாண்டின் பிற்கூறில் அல்லது 20ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலாகும். இதுவே மீசோன் சேன் இடம் காணக்கூடிய குறியீடுகளின் ஊடாக நான் வந்தடையும் முடிவாகும். தனக்கொரு மோட்டார் வாகனமிருப்பதாக சிறுகதையின் கதாபாத்திரம் குறிப்பிட்டபோதிலும் திரைப்படத்தில் குதிரைவண்டியொன்றையே காணமுடிகிறது.ஆயினும் ஆற்றின் கரைகளை இணைத்துப் பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதால் ஒருங்கிணைந்த பெருந்தெருக்கள் உருவாகிக்கொண்டிக்கும் சந்தர்ப்பம் எமக்குத் தென்படுகிறது. மிகவும் விரிவான முடிவற்ற கதையொன்றாகச் சிறுகதையாசிரியரால் முன்வைக்கப் படுகின்ற கதையொன்றை இலங்கை வரலாற்றில் காலனித்துவக் கட்டமைப்பினுள் நிலைநிறுத்தியமையானது இக்கதையின் பொருள்சார்ந்த உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதற்காக நெறியாளர் செய்த முக்கியமான செயற்பாடாகும்.

காலனித்துவவாதி ஐரோப்பாவல்லாத உலகுக்குள் வருவது நவீனத்துவத்தையும் நாகரிகத்தையும் கொண்டுவந்து அவ்வுலகத்தை வரலாற்று அபிவிருத்திப்பாதையில் முன்னோக்கித் தள்ளிவிடுவதற்காகும். உலக நாகரிகமயமாக்கல் தொடர்பான பொறுப்பானது ஐரோப்பிய வெள்ளையனிடமே வழங்கப்பட்டிருப்பதாகக் காலனித்துவவாதி நம்பினான்.அதனால் அவன் ஐரோப்பா அல்லாத உலகை நாகரிகத்தை நோக்கிக் கொண்டு செல்வது விதி வசமாகவே தனக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கருதினான்.காலனித்துவவாதி ஐரோப்பாவிலிருந்து நாகரிகமயமாக்கல் திட்டம் தொடர்பான கருத்துக்களோடு ஐரோப்பிய தலைநகரங்களில் இருந்து புறப்படும் வேளை அந்நகரங்கள் மேல்தட்டு செல்வந்த - தொழில்துறை சார்புடைய பொருளாதாரதிற்கு மாறியிருந்தன.அந்நகரங்கள் மேல்தட்டு நகர்ப்புற சனத்தொகை கட்டமைப்பைச் சார்ந்திருந்தன. அப்பிரதேச மக்கள் கடவுளின் படைப்புக் கோட்பாடு போன்ற சமயரீதியான உலகக் கண்ணோட்டங்களுக்கு எதிராக மானுட தர்க்கவியல் அறிவை மையப்படுத்தி அது சார்ந்த லெளகீக யுகத்தைக் தொடங்கி இருந்தனர். இதனால் ஐரோப்பாவல்லாத உலகிற்குச் செல்லும் போது ஐரோப்பிய காலனித்துவவாதிக்குத் தென்படுவது அவ்வாறாக ஐரோப்பிய அகநிலைசார்ந்து உருவான அனைத்தினதும் அந்நியத்தன்மையாகும். அதனால் காலனித்துவ நாகரிகமயமாக்கல் திட்டமானது சரியாது என்பதை காலனித்துவவாதிக்கு உணர்த்துவதற்கு இந்த ஐரோப்பாவல்லாத யதார்த்தத்திற்கு இயலுமாகும். அவனது கண்ணோட்டத்தில் பார்க்கும் போது காலனித்துவத்தின் எல்லாக் குறியீடுகளும் நாகரிகத்தை வேண்டி நிற்பதாகவே தென்படுகிறது.

நான் மேலே விபரித்த நிதானய திரைப்படத்தின் குறியீட்டுப் பிரதியின் மூலம் விலீ அபேநாயக்கா காலனித்துவ நாகரிகப்படுத்தும் திட்டத்தினுள்ளேயே முற்றிலும் பிறந்து வளர்ந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.அவரது வெண்ணிற ஐரோப்பிய ஆடை, அவ்வாடை மூலமாகவே உருவான பெருமிதமான நடை, மற்றும் நடத்தைப்போக்குகள், மரியாதை கெளரவங்கள், சில முக்கிய காட்சிகளில் திரையின் மையத்துக்கு வரும் நேர்த்தியாகப் பூசி மினுக்கிய பாதணிகள் என்பன நவீன காலனித்துவத்தின் கூறுகளை மிகவும் எளிதாகவும் அழகாகவும் தனது சுதேசிய சரீரத்தில் தாங்கியிருக்கும் மனிதரை எமக்குப் புலப்படுத்துகின்றன. சிலவேளை சிங்களத் திரைப்படத்தினுள் மேற்கத்தேய ஆடையை மிகவும் கச்சிதமாக அணிந்திருந்த நடிகர் என்று கூறக்கூடிய காமினி பொன்சேகாவை விலீ அபேநாயக்காவின் இவ் வெளித் தோற்றமானது எமக்குத் தோற்றுவிப்பது அவரது - அதாவது அபேநாயக்காவின் - காலனித்துவப் பின்னணியோடு மிகவும் நம்பத்தகுந்த விதத்திலாகும். விசாலமான அவரது வீடு காலனித்துவ மனை எனப்படுகின்ற colonial mansion ஒன்றாகும். இந்த வீடும் கூட உயிர்ப்பற்ற நடிகனொருவனைப் போலவே திரைப்படத்தில் வருகின்றது. விலீயின் தந்தை, இறந்து போன தாயின் புகைப்படம் போன்றவற்றினூடாக நவீன காலனித்துவத்தின் முதலாவது பரம்பரையைச் சேர்ந்த சுதேசிகள் தென்படுகின்றனர்.

வீடு , ஆடையணிகள்தொடர்பான "நவீன" குறியீடுகளின் பின் திடீரென எம்மால் ஓலைச்சுவடியொன்றைக் காண முடிகிறது. அந்த ஓலைச் சுவடியும் புதைபொருள் ஒன்றாகும்.பேய்கள் பூதங்கள் தொடர்பான காலமொன்றை நினைவு படுத்தும் ஓலைச் சுவடியொன்றாகும்.அது சட்டத்தையோ, பெளத்த சமயத்தையோ, உயர் இலக்கியங்களையோ பேசும் ஓலைச் சுவடியொன்றல்ல. அவரது பழைய வீட்டை அவரது மனச்சாட்சியிலிருந்து நீக்கிவிட்டு விடுதலைபெற முடியாதென அபேநாயக்காவின் பேச்சினூடாக வெளிப்படுவதற்கும் அவரது தூய நேர்த்தியான நவீன மேற்கத்தேய ஆடைக்கும் இடையில் நாம் இது வரை பார்த்த பொருத்தமற்ற தன்மை, இந்தப் புதைபொருள் வெளியே வந்தவுடன் அவரது நிரந்தர ஆலோசகராக சோதி்டரொருவர் வெளிப்பட்டு வரும்போது உச்சகட்டத்தையடைகிறது. அறிவியல் கோட்பாடு, மனித தர்க்க அறிவு மற்றும் லெளகீக வாழ்வைக் கொண்டமைந்த நவீனத்துவத்தை எடுத்துவந்து ஐரோப்பாவல்லாத உலகை நாகரிகமயமாக்கல் எனக் கூறும் காலனித்துவம் இவ்விடத்தில் தோற்றுப் போயிருப்பதாக, வெளித் தோற்றத்தில் நாகரிகமயமாக்கலை குறித்துநிற்கும் விலீ அபே நாயக்காவிடத்திலேயே காணக்கிடைக்கும் இந்த இரட்டைத் தன்மையினால் விளங்குகிறது. இது வெளிப் புறத்துக்கும் உட்புறத்துக்கும் இடையிலான இடைவெளியை காலனித்துவமயப்படுத்தியதன் விளைவொன்றாக எமக்கு உடனடியாகவே விளங்குகிறது.

அவரது உடலியல் தோற்றத்தில் விலீ அபேநாயக்கா மிகவும் நவீனமயமானவர்: அதிகமாக மேற்கத்தேய மயமானவர். அவர் தன்வலையில் வீழ்த்திக் கொள்ள மிகப் பொருத்தமான யுவதியைத் தேடியவாறு லண்டன் நகரில் பெண்கள் வேட்டையில் ஈடுபடும் கெசனோவா ஒருவரைப் போல பூங்காக்களில் சுற்றித் திரிகிறார். திரைப்படத்தின் கவனத்தை ஈர்க்கக் கூடிய காட்சியொன்றான சோடியாகத் தழுவிக் கொண்டு நடனமாடுவதில் தனது உடலை அசைத்தாடும் இலாவகமான காட்சியானது அத்தகைய நடனங்களைத் தனது உடலில் துல்லியமாக உள்வாங்கிக் கொண்ட காலனித்துவ மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரென்பதை உணர்த்துகிறது . ஆனாலும் அந்தப் புறத்தோற்றத்தில் தென்படும் குறியீடுகளின் கீழ் புதைந்திருப்பது மிகவும் பழைமைவாய்ந்த நவீன உணர்வுநிலையின் மீதிகளாகும்.புனைகதைக் கண்ணோட்டத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் இடம்பெயர்க்கவரும் நவீன காலனித்துவமானது மிகவும் கவர்ச்சிகரமான காலனித்துவப் பிரசையொருவரான விலீ அபேநாயக்கா இடத்தேயே தோற்றுப் போயிருப்பதை காட்டுகின்ற திரைப்படத்துக்கே உரித்தான காட்சிகள் சிலவற்றையும் இங்கு காணக்கூடியதாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டமான பலி பூஜை வரையிலும் அபேநாயக்காவின் சட்டையணிந்திராத உடலைக் காணமுடியவில்லை. அவரது இரவு ஆடையும் முறையாகத் தைக்கப்பட்ட ஆடையாகும். ஆனாலும் அவர் மூன்று பிறவித் தழும்புகளைக் கொண்ட கன்னிப் பெண்ணொருத்தியைத் தேடித்திரியும் போது கண்ட துர்க் கனவொன்றிலிருந்து விழித்தெழும்பொழுது அவரது மேற்சட்டை விலகி நெஞ்சிலுள்ள மயிர்கள் புடைத்திருப்பதைக் காண முடிகிறது.இது நாகரிகப் போர்வையின் கீழ் மறைந்திருக்கும் அநாகரிக,மிருகத் தன்மையை உணர்த்துவதைப் போல் உள்ளது. அவர் அந்தக் கனவைக் கண்டவாறு புரண்டு கொண்டிருக்கையில் பின்னணியில் உள்ள சுவரில் காணப்படும் அவரது தாயின் நிழற்படம் அவரையும் எம்மையும் பார்த்தவாறுள்ளது. அவர் அந்தக் கனவிலிருந்து விழித்தெழுந்து கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்.அப்போது தாயின் படமும் அவரது உருவமும் ஒன்றுடனொன்று பட்டும் படாமலும் இருக்கத்தக்கதாக அண்மிக்கின்றன.பழைமையும் புதுமையும் அவரது உணர்வுகளுக்குள் அடங்கியிருப்பதாகவும் வெளிப்புற நவீனத்துவத்தால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வொன்றாக சில முன் நவீன அடையாளங்கள் அவருள் அடங்கியிருப்தாகவும் தெரிகிறது.

மறைத்தலும் அது மீள வெளிப்படுவதும் உளப்பகுப்பு விமர்சகர்களின் தலையங்கமொன்றாக இருப்பதனால் அதனை இவ்விடத்தில் தவிர்த்துவிட்டுச் செல்கிறேன். ஆயினும் முன் நவீனம் மற்றும் நவீனம் என்றவகையில் இத்தகைய உணர்வுரீதியான பகுதிகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டுச் செல்லும் போக்கு நிகழ்வது காலனித்துவ தறுவாயின் போதிலா என்ற வினாவை எழுப்ப வேண்டியுள்ளது. புனைகதைக் கண்ணோட்டத்திலான கருத்துக்களும் நவீன கருத்துக்களும் சமய விஷயங்களில் உயர்மட்ட தொடர்புகளின் போது வெளிப்படுத்துவது காலனித்துவ நிலைப்பாடுகளையா? அவை குறுக்குவெட்டு முகமான பரிமாணத்தில் உணர்வுநிலைப்பட முடியாதா.? அவ்வாறு முடியுமென்றே நான் நினைக்கிறேன்."முன் நவீன" அடையாளங்களென குறிப்பிடப்படும் புனைகதைக் கண்ணோட்டத்திலான விடயங்கள் முற்றாகவே இல்லாமற்போன முழுமையான பகுத்தறிவுடைய மனித சமூகமொன்று உண்டென்றும் உருவாக முடியுமெனறும் நம்பாத நான், பொதுவாக "புனைகதை" என்றும் "அறிவியல்" என்றும் குறிப்பிடப்படும் இரு வேறு உண்மைகளும் ஒன்றுடனொன்று மோதாமல் காத்துக் கொள்ளதக்க பழக்கப்பட்ட உணர்வுகள் மனிதனுக்கு உண்டென நினைக்கிறேன் .காலனித்துவவாதி புனைகதையென்றும் முன் நவீனம் என்றும் சொல்லும் இயல்புகளுக்கு எதிராக நாகரிகமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தி அதனைப் பொதுமைப் படுத்துவதனாலேயே விலீ அபேநாயக்காவினதைப் போன்ற உடைந்த மனநிலை அல்லது பிளவுபட்ட உணர்வுகள் ஏற்படுகின்றன. அதனால் அபேநாயக்கா காலனித்துவ வேலைத்திட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஓரே கணத்தில் வெளிப்படுத்துகிறார்.

நெறியாளரும் திரைக்கதையாசியரும் விலீ அபேநாயக்கவின் உணர்வுநிலை பிளவுபட்டமை குறித்துப் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஹிச்கொக் இன் "சைகோ" வை நினைவுபடுத்தும் காட்சியொன்றின் போது வைத்தியர் அய்ரினை நோக்கி சிந்திப்பதுடன் தொடர்பான வியாதியொன்று விலீயிடம் சிறுவயது தொட்டே காணப்பட்டதாகக் கூறுகிறார். அவரது சிறுவயதிலேயே அவரது தாய் இறந்து போனதால் ஏற்பட்ட வெறுமை பற்றியும் எங்களுக்குக் கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது. குறியீட்டு ரீதியாகப் பார்க்கும் பொழுது அவர் பலிகொடுக்க முனையும் கன்னிப்பெண் இழந்து போன தாயைப் பற்றிய ஆசைகளை அழிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சியொன்றாகும்.அது பழைய விடயங்கள் தொடர்பான அவரது ஆசையையும் தேசிய கலாசாரங்களால் தான் கொண்டிருக்கும் அனைத்தையும் நவீனத்துவத்தின் வேட்டைக்கத்தியினால் குத்திக் கொலை செய்வதற்கு முயலும் முயற்சியொன்றுமாகும். கொலை இடம்பெறுவது மேற்கத்தேயத்தில் பயன்படுத்தப்படும் வேட்டைக்கத்தியொன்றால் அல்லது hunting knife ஒன்றினால் என்பதும் உறுதியாகும்.


காலனிய நவீனத்துவமும் தேசிய நம்பிக்கையும்

விலீ அபேநாயக்கா அரசாங்கத்தில் கொந்தராத்து வேலை செய்து பணம் உழைப்பதை எமக்கு அறிந்து கொள்ள முடிகிறது. இந்த அரசாங்கம் என்பது காலனித்துவ இராச்சியம் என்பது மிக நன்றாகத் தென்படுகிறது.அவர் நவீனத்துவ முறையில் கொந்தராத்து வேலை செய்து பழைய வீட்டைப் பராமரிப்பதற்காகவே பணமீட்டுகிறார். அரசாங்கத்துக்காகப் புதிய பாலங்களை நிர்மாணிக்கும் அவர் தான் வாழ்வதற்காகவேண்டிப் புதிய வீடொன்றைக் கட்டிக்கொள்வதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பாலத்தைக் கட்டுவதற்காக அத்திவாரமிடும் சந்தர்ப்பத்தில் தெய்வ ஆசிபெறுவதற்காக வேண்டி மலர், தீப ஆராதனை நடைபெறும் போது" இவை பூமியோடு தொடர்பான விடயங்கள்" என்று கூறுவதனூடாக விலீ அபேநாயக்காவின் "நிலப் பண்பை" வெளிப்படுத்துவதற்கு நெறியாளர் முயற்சி செய்கிறார். அது நவீனத்துவம் அல்ல ஆரம்பத்தை உணர்த்தும் வாசகமாகும். வெளித்தோற்றத்தில் முற்றாகவே மேற்கு மயமான அவரது இக்கூற்றானது அவர் அவரது நண்பரான முட்லியரையும் மிஞ்சிய முன் நவீனத்துவ உணர்வுகள் கொண்டவர் என்பதை உணர்த்துகிறார். "பிரித்" கூறுதல் இதைவிட நல்லதென முட்லியார் கூறுகிறார். விலீயின் இந்த உணர்வானது போலியான உணர்வொன்றாகும் எனக் காண்பிக்கும் வகையில் பாலத்தின் நிர்மாணப்பணிகள் தடைபடுகின்றன. சிலவேளை அவரது அந்த உணர்வுநிலைக்குத் தேவையாக இருப்பது பாலத்தைக் கட்டுவதைத் தவிர்ப்பதாக இருக்கலாம். காலனித்துவ அரசாங்கம் அல்லது காலனித்துவ முறைகள் காணப்படுவது தெய்வத்தின் விருப்பத்தை நடைமுறைப்படுத்தவல்ல ஆட்சியின் சட்டங்களை நடைமுறைப் படு்த்துவதற்காகவாகும். " உணது பைத்தியகாரத்தனமான கடவுளுக்குப் பூஜைகளை வைத்ததைத் தவிர பாலத்தின் எந்தவொரு வேலையும் நடக்கவில்லை" என அதிகாரி கூறுகிறார்.காலனித்துவ நாகரிகவாதியான அதிகாரிக்கும் அரை- நாரிக விலீ அபேநாயக்காவுக்கும் இடையிலான மோதலில் "எனது கடவுளரை இதில் தொடர்பு படுத்தவேண்டாம்" என்று வீலி கூறுகிறார். மேற்சொன்ன கூற்றானது மிகவும் முக்கியமானதொன்றாகும். பார்வைக்குக் காலனித்துவத்தின் முழுமையான பிரதியொன்றாகத் தென்படும் விலீ காலனித்துவத்தின் கீழ் அகப்படாமல் காப்பாற்றிக்கொண்ட ஏதோவொன்றையும் தன்னுள்ளே பாதுகாப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார். புதைபொருள் தொடர்பான நம்பிக்கை இப் பாதுகாப்பான பகுதியினுள்ளேயே காணப்படுகிறது.காலனித்துவத்தின் அறுவைக் கத்தியில் அகப்படாத இந்த அறிவார்ந்த பகுதி எது? இது அவராகவே செய்கின்ற வெளிப் பிரதிபலிப்புகள் தொடர்பாக அவருள்ளேயே எழுகின்ற குற்ற மனப்பாங்கினால் உருவானதா? முக்கியமான வரலாற்றுப் பாய்ச்சலொன்றைச் செய்து முழுமையாகவே மாற்று வியூகமொன்றைக் கட்டியெழுப்புதல் தொடர்பாகச் சுதேசிய காலனித்துவவாதியின் விருப்பமின்மையை உணர்த்துவதா? ஆனாலும் இந்தப் பாதுகாப்பான பகுதி சுதேசியின் மனதைச் சுகப்படுத்துவதற்கான ஒன்றல்ல.


காலனித்துவ உரையாடலால் அழுக்கடையாத தூய்மை

ஆயினும் காலனித்துவவாதியின் நவீனத்துவ உரையாடலுக்குள் அகப்படாத அதே போன்று விலீ போன்ற பிளவுண்ட உணர்வுகளைக் கொண்டிராத சுதேசத்தின் தூய்மையையும் அப்பாவித்தனத்தையும் வெளிப்படுத்தும் பாத்திரமொன்று உள்ளது. அது மாலினி பொன்சேகாவினது அபூர்வமான நடிப்பினூடாக வெளிப்படும் அய்ரின் பாத்திரமாகும். நடக்கும் பொழுது, கழுத்தைத் திருப்பும் பொழுது, புன்னகைக்கும் பொழுது, அல்லது ஏதோனுமொரு வேலையைச் செய்யும் பொழுது தூயதன்மை புலப்படும் வகையில் அவர் நடிக்கும் விதம் - இவற்றை நடிக்கத் தெரியாமல் தொலைக்காட்சி நடிகைகளால் மாசடைந்துபோன இன்றைய கட்புலக் கலைகள் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும். அய்ரினால் வெளிப்படுத்தப்படும் தேசியத்தூய்மையும் அப்பாவித்தனமும் விலீயின் குரூர திட்டங்களுக்கு ஆட்படுவது பல்வேறு அர்த்தங்களை எழுப்புகிறது. அது ஒரு தளத்தில் காலனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது.மிகவும் மோசமான சமன்பாடொன்றினால் வகைப்படுத்துவதாயின் காலனித்துவமயமாக்கல் என்பது காலனித்துவத்தைப் பலிகொடுத்துப் புதையலைப் பெற்றுக் கொள்வதாகும்.

புதையல் எனப்படும் treasureஐத் தேடுதல் காலனித்துவம் தொடங்கிய யுகம் தொடர்பான குறியீடாகும். தங்கம் எனப்படுகின்ற புதையலைத் தேடுவதற்காகவே பண்டைய ஐரோப்பிய பயணிகள் அமெரிக்கக் கண்டத்திற்குச் சென்றனர். காலனித்துவ நவீனமயமாக்கலின் துல்லியமான பிரதிபலிப்பாலனிடம் தேசிய கலாசாரத்தினால் கிடைக்கின்ற முற்சாய்வும் ஒன்றுசேரும்போது திரிபடைந்த கொலைகாரனொருவனே உருவாகின்றான். இது ஃபென்சிஸ் ஃபோட் கொபாலா ஜோஸ்ஃப் கொண்ரட் உடைய ஹாட் ஒஃப் டாக்னஸ் படைப்பினூடாக உருவாக்கிய எபொகலிப்ஸ் என்ற புதிய திரைப் படத்திற்கு மிகவும் ஒத்ததாகும். கடவுளுக்குப் பூஜைசெய்து பாலத்தைத் திறந்துவைக்கும் தினத்திலேயே அவ்விடத்தில் சந்திக்கும் உண்மையான புதையலும் விதிவசமான பெண்ணுமாக அய்ரின் காணப்படுகிறாள். கடவுள் கொடுத்த அந்தப் புதையலைப் பிசாசுகளுக்காகப் பலிகொடுத்தல் காலனித்துவப் பிறழ்வொன்றா?


நிரந்தரமானதா கட்டியெழுப்பப்பட்டதா?

சனநாயக கருத்துடைய விமர்சகர்கள் ஐரோப்பிய பெரும் (சேக்ஷ்பியர் நாடகம் போன்ற) இலக்கியப் படைப்புகளை நிலையானதும் சர்வதேசப் பதில்கள் மற்றும் வரலாற்றுக் கருத்துக்கள் அடங்கிய படைப்புகளென்றும் அறிமுகம் செய்து வைக்கின்றனர். ஆயினும் பல்வேறு பின் காலனித்துவக் கொள்கைகள் மூலம் மனித நடத்தைகள் பற்றி ஐரோப்பிய உலகலாவிய கொள்கைகள் வரலாற்று ரீதியாக கட்டியெழுப்புவது எவ்வாறென்பதை எமக்குக் கற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. உயர் இலக்கியப் படைப்புகளில் எக்காலத்துக்கமான பொருள்கள் உள்ளன என்பதனூடாக கலாசார, பிரதேச மற்றும் சமூக வேறுபாடுகளை கவனத்திற் கொள்வதில்லை என்பது விளங்குகின்றது. இது விவாதிக்கப் படுவதோடு ஐரோப்பாவுக்கும் ஐரோப்பா அல்லாத உலகிற்கும் இடையிலான வரலாற்று வித்தியாசமும் அபிவிருத்தியின் வேறுபாடும் காலனித்துவத்திற்குத் தேவையாகவுள்ளது. அவ்வாறில்லாமல் காலனித்துவத்தை நியாயப்படுத்தமுடியாது. ஐரோப்பாவல்லாத உலகை நோக்கி நாகரிகத்தைக் கொண்டுவருவது தொடர்பான அனுமதி கிடைப்பது வேறுபாட்டை முன்வைக்கும் அளவிலாகும். காலனித்துவவாதி இவ்வாறே வேறுபாட்டை அதிகமாக முன்வைத்து நவீனத்துவத்தைக் கொண்டுவர முனைகையில் சில சுதேசிய மக்கள் மனங்களில் ஏற்படக்கூடிய உட்பிளவுகளை விலீ அபேநாயக்காவின் பாத்திரத்தினூடாகக் காண்பிப்பதற்கு நெறியாளர் முனைகிறார்.

இதனால் வெளித்தோற்றத்தில் உண்மையான நாகரிகமயமான மனிதனிடத்தே மிகவும் அநாகரிகமான மனிதனொருவனைக் காணக்கூடியதாகவுள்ளது.அய்ரின் மீது உண்டாகின்ற அன்பினால் கூடத் தடுத்துவிட முடியாத அநாகரிகம் அது. தேசியம் சார்ந்த நம்பிக்கைகள் அதாவது புதையலும் பிசாசுகளும் தொடர்பான நம்பிக்கைகள் - புராதன காலம்முதல் தொடர்கின்ற உரிமைகள் தொடர்பான நம்பிக்கைகள்- காரணமாக விலீ அபேநாயக்கா மூலம் நிகழ் காலத்திலிருக்கும் உன்னதமான புதையல் சாகடிக்கப்படுகிறது. விலீயின் எதிர்காலம் குறித்த சிறப்பான பாதை அய்ரின் ஊடாக அப்பொழுதே திறந்துவிடப்பட்டிருந்தபோதும் அவர் தெரியாத இறந்தகால பொருளொன்றுக்காகத் தெரியாத வாசலொன்றைத் திறக்க முனைகிறார். அவ்வகையில் இப் படைப்பானது காலனித்துவத்தையும் தீவிர தேசப்பற்றையும் ஒருங்கே வெளிப்படுத்தும் படைப்பொன்றாகும். உண்மையான பின்காலனித்துவக் கலையானது காலனித்துவவாதியின் ஏகாதிபத்தியத்தையும் தேசியப்பற்றாளனின் தேசியவாதத்தையும் ஒருங்கே புறக்கணிக்கிறது. அதனாலேயே நிதானயவில் காணப்படும் இந்த அடியாதாரமான வளமானது எங்கள் முன் மீளத் திறபட வேண்டியுள்ளது.

சிங்கள மூலம்: லியனகே அமரகீர்த்தி

தமிழில் : ஃபஹீமாஜஹான்
(நன்றி கலைமுகம் இதழ்- 52)
Friday, June 24, 2011

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்




1988 நவம்பர் மாதம் பயங்கரம் நிரம்பிய காலப்பகுதியாக இருந்தது. அந்த இடத்தை விட்டுக் காலம் வேகமாகக் கடந்து போயுள்ளது. இன்றைய காலப்பகுதியில் அந்தப் பயங்கரத்தின் நிகழ்வுகளை அனேகர் மறந்து போயுள்ளனர். 88 -89 காலப் பகுதியில் காணாமற் போனவர்களைப் பற்றியும் கொலைசெய்யப் பட்டவர்களைப் பற்றியும் நாம் 90களில் உரையாடினோம்.மரணத்தை எதிர்நோக்கியவாறே கொல்லப்பட்டவர்களுக்கான இரங்கல் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.அவர்களை எண்ணி இன்று வரைக்கும் நான் பெருமையடைகிறேன்.நான் பிறந்து வளர்ந்து ஆளானது பயங்கரம் குடிகொண்டிருந்த ஒரு சமூகத்திலாகும். அந்தக் கால கட்டத்தில் அனேக மக்கள் மிலேச்சத் தனமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

நான் பிறந்து வளர்ந்த பீதி சூழ்ந்த அதே சமூகம் இன்றும் உயிர்புடனே காணப்படுகிறது.அதனாலேயே இதனை நான் எழுத முனைந்தேன். இறந்த காலத்தின் நினைவுகளில் இருந்து என்னால் விடுபடமுடியாமல் உள்ளது. இடதுசாரி ஒருவரான எனது தந்தை 1988 நவம்பர் மாதம் 8ம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் கொலை செய்யப்பட்டார்.அவர் தான் நந்தசேன சில்வா என்பவர்.வாழ்வின் 39 வது வருடத்தில் அவரைக் கொன்றபோது நான் சின்னஞ் சிறுமியாக இருந்தேன்.நான் அறிந்த வரையில்1971ம் ஆண்டுக் கிளர்ச்சியுடனேயே அவரது அரசியல் வாழ்வு ஆரம்பமாகியது.அது 1971 கிளர்ச்சியுடன் தொடர்பானவர்களுக்கும் அவருக்கும் இடையிலான அரசியல் நற்புணர்வினாலாகும்.எனது நினைவுகளில் அவர் மிகவும் பிரியத்துக்குரியவரும் சமூகத்தில் ஏனையவருக்காகப் பணியாற்றிய ஒருவருமாவார்.

1980 இன் வேலை நிறுத்தம் காரணமாக தொழிலை இழந்த அவர் பண்டாரவெல ஊவ கரந்தகொள்ள என்னுமிடத்தில் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார். வேலை நிறுத்தத்தால் பாதிப்படைந்திருந்த அவரது ஒருசில நண்பர்களுக்கும் இப் பண்ணையின் மூலமாக ஜீவனோபாயத்திற்கான வழியொன்று கிடைத்தமையால் அவர் மகிழ்வடைந்தார்.ஊவ கரந்தகொள்ள பாடசாலையைக் கட்டியெழுப்புவதிலும் பாடுபட்டுழைத்தார். உயர்தர வகுப்பில் கல்விகற்ற பிள்ளைகளுக்கான இலவச மேலதிக வகுப்புக்கைளையும் அவர் நடாத்தினார்.கிராமத்திலுள்ள ஏனைய பிள்ளைகளைப் போலவே சிரமங்களை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுமாறு கூறி எங்களைக் கிராமத்துப் பள்ளிக் கூடத்திற்கே ஆரம்பத்தில் அனுப்பினார். அப்பா பாடசாலைக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய காரணத்திற்காக எங்கள் மீது விஷேட கவனம் செலுத்தப் படுவதை விரும்பவி்ல்லை.அப்போது பள்ளிக்கூட நாடகக் குழுவில் இரண்டாவது தடவையாகவும் நான் தேர்ந்தெடுக்கப் பட்டதை விரும்பாத அப்பா பாடசாலைக்குச் சென்று "ஆற்றல் உள்ள வேறு பிள்ளைகள் இந்த வகுப்பில் இல்லையா" எனக் கேட்டது இன்று போல இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.மனிதர்களுடன் அன்புடன் பழகுவதற்கு அப்பாவே எனக்குக் கற்றுத் தந்தார் .பணணையைத் தாண்டிச் செல்லும் கிராமத்து மக்களை நிறுத்திக் கொழும்பிலிருந்து எடுத்து வந்த விட்டமின், இரும்புச் சத்து மாத்திரைகளைப் பகிர்ந்தளிப்பது இன்று போல் எனக்கு நினைவிலுள்ளது.1983 கறுப்பு ஜூலையில் எங்கள் இல்லம் தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. அப்பா தன்னால் இயலுமான எல்லாச் சந்தர்ப்பத்திலும் பிறருக்காக உதவி புரிந்தார்.எனினும் அக்காலகட்டத்தில் எமக்கு அவரது சமூகத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லாமலிருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியினரால் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி எனது அப்பா திட்டமி்ட்டுக் கொலை செய்யப் படுவதற்கான பிரதான காரணமாக அமைந்தது இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவரான அவர் அன்றைய மக்கள் விடுதலை முன்னணியினரின் அரசியலைப் பகிரங்கமாகவே எதிர்த்ததனால் ஆகும்.அவர் இனவாதத்திற்கும்,மக்களைக் கொன்றொழிப்பதற்கும் எதிராக வெளிப்படையாகவே பேசினார். நந்தன மாரசின்ஹ,விஜய குமாரதுங்க கொலைகளுக்கு அவர் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்தார்.மாரசின்ஹ கொலை செய்யப்பட்டதன் பின்னர், அப்பா நந்தன மாரசின்ஹ அவர்களின் பெரியதொரு நிழற்படத்தை வீட்டின் முன்னால் தொங்க வைத்துக் கொண்டு அதைப் பற்றித் துயரத்துடன் கதைத்தது எனக்கு நினைவில் உள்ளது. சிறுமியான நான் மாரசின்ஹ என்பவர் யார் என்பதைப் பற்றி விரிவாக அறிந்திருக்கவில்லை. எனினும் தந்தையின் வேதனையினூடே அவர் தொடர்பாக என்னுள் கட்டியெழுப்பப் பட்ட சித்திரம் இன்னும் அழியாமல் உள்ளது.

அப்பா எப்பொழுதும் அவரது மரணம் பற்றிக் கதைத்தார்.எனினும் அவர் ஒரு வீரர் என்பதால் அவர் இறக்கப் போவதில்லை என்றே கருதினேன். எனது சிறு வயது உலகில் அப்பா தோற்றுப் போகாத வீரனாக இருந்தார்.அவரை யாரால் கொலை செய்ய முடியும்? சில வேளைகளில் என்னை மடியில் அணைத்துக் கொண்டு மார்க்ஸ் அல்லது லெனின் உடைய படைப்பொன்றை சத்தமிட்டு வாசிக்க அவர் பழகியிருந்தார்.எனக்கு அவற்றில் எவையும் விளங்கவில்லை.எனினும் நான் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.சிறுவயதிலிருந்தே எங்கள் செவிகளை அவற்றுக்குப் பழக்கிடவே அவ்வாறு வாசித்ததாக அவர் ஒரு தடவை கூறியது ஞாபகம் உள்ளது. அவர் உலகைக் காணும் விதம் தொடர்பாகச் சிறியவளான என்னிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது அவரது மரணத்தைப் பற்றி அறிந்திருந்ததாலேயே என்பது இப்போது எனக்கு விளங்குகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினரால் கொலை செய்யப் பட்ட எனது அப்பா அத்தகைய ஒரு மனிதராவார். நானும் அக்காவும் நவம்பர் 3ம் திகதி எமது பாடசாலை விடுதியிலேயே இறுதிகாக அப்பாவைப் பார்த்தோம். அதன்பின்னரான 5 தினங்களில் அவர் கொலை செய்யப் பட்டார். அவருடன் மேலும் நால்வர் கொலை செய்யப்பட்டனர். அதில் இருவர் அருகிலிருந்த பண்ணைகளின் உரிமையாளர்கள்.அவ்விருவரும் தமிழர்கள் என்பதோடு எந்தவொரு அரசியலிலும் ஈடுபடாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவ்விருவரையும் எதற்காகக் கொன்றார்கள் என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியாமலே உள்ளது.மற்றைய இருவரில் ஒருவர் பண்ணை வேலைகளுக்கு உதவியாளராக வந்திருந்த ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த தச்சர் ஒருவான ரோஹண என்பவராவார்.இரண்டாமவர் 'ஜயவர்தன அங்கில்' ஆவார்.( அவர் இடதுசாரிச் செயற்பாட்டாளர் ஒருவரான வசந்த திசாநாயக்காவின் இளைய சகோதரராவார்).'ஜயவர்தன அங்கில்' அப்போது (மொரட்டுவ)கட்டுபெத்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவர் ஒருவராக இருந்தார். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்த அவர், தொழில் ரீதியாகக் கட்டட நிர்மாணக் கலைஞரான எனது அப்பாவிடமிருந்து செயன்முறைசார் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக எங்கள் இல்லத்தில் வந்து தங்கியிருந்தார் என்பது நினைவில் உள்ளது.அவர்கள் அனைவரும் எமது இல்லத்தினுள் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்.பின்னர் கொலையுண்டவர்களோடு சேர்த்து வீட்டை முழுமையாகத் தீவைத்து எரித்தனர். 'ராவணாஎல்ல' யிலிருந்து தந்தையின் நண்பரொருவர் வளர்ப்பதற்காக எனக்குக் கொண்டு வந்த தந்திருந்த மான்குட்டியைக் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கொலை செய்திருந்தனர்.கொலை செய்வதற்கு முன்பாக அப்பாவைச் சித்திரவதைப் படுத்தினார்களா என்பதை நான் அறியேன்.ஜயவர்தன அங்கிலின் வலது கரத்தைத் துண்டித்து அப்பாவின் வெட்டப் பட்ட தலையுடன் சேர்த்து எங்கள் வீட்டுக்கு வரும் பிரதான பாதையின் மரமொன்றில் தொங்கவைத்திருந்தார்கள். அவருக்கான மரணச் சடங்குகளைத் தடைசெய்திருந்த கொலையாளிகள் மீறிச் செய்தால் எங்கள் மூலம் பலிதீர்ப்பதாக அறிவித்திருந்தார்கள்.எனக்கும் அக்காவுக்கும் அப்பாவின் ஈமக்கிரியைகள் தடுக்கப் பட்டதொன்றாயிற்று. அவர் எம்மிடத்திலிருந்து விடைபெறவில்லை. அவரது முகத்தை முத்தமிட்டு வழியனுப்ப எனக்கும் அக்காவுக்கும் முடியாமற் போனது. எனக்கு உலகைப் பற்றியும் அன்பைப் பற்றியும் கற்றுத் தந்த அப்பா அத்தகைய கொடூர மரணத்திறகு இரையானதேன்?மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களிடத்தில் இன்றுவரைக்கும் நான் கேட்பதற்காக உள்ள கேள்வி இதுதான்.

எரியூட்டப்பட்ட வீட்டுடன் சேர்த்து எனது சிறுபராயத்தின் எல்லா நினைவுத் தடயங்களும் எரிந்து கருகிப்போயின. ஆகக் குறைந்தது அப்பாவின் நிழட்படமொன்று கூட எமக்கில்லாமற் போனது.அன்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை விமர்சனம் செய்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த தண்டனை அத்தகையது தான்.அந்தக் கொலைகாரர்கள் இன்று கூட சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். அந்த உதிரத்தத்தின் பொறுப்பிலிருந்து இன்றைய ஜேவிபி தலைவர்களால் விடுதலைபெற முடிந்திருப்பது நாம் சமூகம் என்ற ரீதியில் நேர்மையை, உயர் பண்புகளைக் காணாத் தொலைவொன்றில் வாழ்வதனாலாகும்.எனது அப்பாவின் கொலைகாரர்களுக்கு எதிரான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதையும் நான் இன்று வரை அறியேன்.

அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது அரசியலுடன் இணைந்திருந்த நண்பர்கள் அனேக இடர்களுக்கு மத்தியில் எம்மை இடத்துக்கு இடம் கொண்டு சென்று ஒளித்துப் பாதுகாத்தனர்.அந்த மனிதாபிமானத்துக்கு நான் இன்று வரை மதிப்பளிக்கிறேன்.எமது பிள்ளைப் பருவம் புறக்கணித்துச் செல்ல முடியாத கெட்ட கனவொன்றை போலானது. கருணையற்ற உலகம் தொடர்பான இருண்ட சித்திரம் எஙகள் உள்ளங்களினுள் ஆழப்பதிந்தது அச்சிறு வயதிலேயே ஆகும்.அப்பாவின் அரசியல் நண்பரொருவர் என்னையும் அக்காவையும் அரவணைத்துப் பேணிப் பாதுகாத்து வாழ்வைக் கட்டியெழுப்பிட துணையிருந்திராவிட்டால் எங்கள் வாழ்வு எங்கே போய் முடிந்திருக்கும் என்பதை எனக்கு எண்ணிப்பார்க்கக் கூட முடியாமலுள்ளது.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.எனது தந்தையின் ஆரம்பகால அரசியல் சகபாடிகள் இப்போதும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் அனேகமானோருக்கு அவரவருக்கேயான பாதைகளும் கிட்டியுள்ளன.எதிர்பாராத விதமாக நாம் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில் "இவர் நந்நவின் மகள்- இவர் அந்தச் சகோதரனின் மகள்" என அன்புடன் அழைப்பர். எனினும் எங்கள் உள்ளங்களை அழுத்திப் பிழிகின்ற வேதனையை அவர்கள் உணர்வார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நல்ல மனிதர்களில் ஒருவரான எனது அப்பாவை எதற்காகக் கொன்றார்கள் என்பதைத் தெளிவு படுத்த அவர்களாலும் முடியாமல் உள்ளது. அந்த மாபெரும் வேதனையை எமது மரணம் வரை சுமந்தலைய வேண்டியவர்களாக உள்ளோம்.எவரும் எத்தகைய பதிலொன்றையும் தந்திட முயற்சியெடுக்கவில்லை. அந்த வேதனையிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுவாரில்லை.எவருக்கும் எவரையும் கொல்லும் உரிமை இல்லை என்பது எனது எண்ணமாகும்.ஏதாவதொரு கொலை நிகழ்ந்தால் அது ஏன் நிகழ்த்தப்பட்டது என்பதைக் கேட்கும் உரிமை சனநாயகச் சமூகம் ஒன்றில் காணப்படவேண்டும். இன்றும் இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நபர்கள் கொல்லப் படுவதை நான் அறிவேன்.

இந்தக் கடிதம் 1988 -89 காலப்பகுதியில் கொலைசெய்யப் பட்ட எல்லா மனிதர்கள் சார்பாகவும் நிறைவேற்றப்படாமற் போன நீதியைப் பற்றிய வேதனையுடன் எழுதப்பட்டதாகும்.இறந்தகாலத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதக் கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தேடுவதற்கு எவருமே முன்வராத காரணத்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் அதைப் பற்றிப் பேசாமல் விட்டதாலும் இதுவரையும் மனிதக் கொலைகள் மலிந்த சமூகமொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதுவரை வடக்கிலிருந்து தெற்கு வரை மாற்றுக் கருத்துடையவர்கள் கொலை செய்யப் படுவதென்பது இரகசியமல்ல.எந்தவொரு மனிதனுக்கும் மாற்றுச் சிந்தனையையோ கருத்தையோ கொண்டிருக்கும் உரிமை உண்டென்பது எனது நம்பிக்கையாகும்.கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப் படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பது அதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

நீதியும் நேர்மையும் இழந்து போன நாடொன்றில் கொல்லப்பட்ட நல்ல மனிதர்களில் ஒருவரான அப்பாவைப் பற்றிய நினைவுகள் குறித்து இதைத் தவிர்த்து நான் வேறெதனை எழுதமுடியும்?

ருவந்தி சில்வா
(நந்தவின் மகள்)
தமிழில் - ஃபஹீமா ஜஹான்
Thursday, July 1, 2010
Sunday, May 30, 2010

பேராசிரியர்- சுச்சரித கம்லத்


பேராசிரியர்- சுச்சரித கம்லத்

தமிழில் - ஃபஹீமாஜஹான்



பேராசியர் சுச்சரித கம்லத் அவர்கள் இலங்கையின் அறிவுசார் காலாசாரத்தினுள்ளே மேலாண்மையுடைய பாத்திரமொன்றை வகிக்கும் இணையற்ற அறிஞராவார். பல்கலைக்கழக ஆசான்களில் ஒருவராக இருந்து அவர் பல்கலைக்கழகக் கல்வித் துறையில் சிறந்த சேவையைச் செய்தார். சிங்களம் , பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழித்துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற புத்திஜீவி ஒருவரான இவர் கீழைத்தேய மேலைத்தேய தத்துவங்கள் மற்றும் அழகியல்
துறையிலும் ஆற்றல்மிக்கவர். விவாதமுறைப்படி உண்மையை ஆராயும் மெய்யியல் சிந்தனைகளின் ஊடாகத் தனது திறனாய்வுகளைப் புகுத்தி பொதுவுடமைவாத திறனாய்வாளர் ஒருவராக 80களின் முற்பகுதியில் பேராசிரியர் கம்லத் அவர்கள் பிரசித்தி பெற்றிருந்ததோடு இயங்குகின்ற ஒருவராவும் திகழ்ந்தார்.

சிறந்த இலக்கியப் படைப்புக்களையும் மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு அவர் இருவழிகளில் செய்த இலக்கியச் சேவை விரிந்த பரப்பில் நோக்கப் படுகிறது. தற்கால இலக்கியம் மற்றும் திறனாய்வுத்துறை செல்நெறிகள் சார்ந்த விமரிசனங்களுடன் அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் இது.



தாங்கள் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான இலக்கிய பரிச்சயம் கொண்ட திறானாய்வாளர்களில் ஒருவர். நூல்களைத் தேடிப் படிக்காத முறையான அறிதல் இல்லாத கற்றலில் இருந்து விடுபட்ட தலைமுறையொன்றிடம் இன்று இலக்கியம் கைமாறியுள்ளது. இலங்கையின் தற்கால இலக்கியங்களின் செல்நெறி தொடர்பாகத் தங்களது கருத்தைக் கூறமுடியுமா?



சுச்சரித: இலக்கியம் என்பது சமூகத்தில் உள்ள அறிவார்ந்த உரையாடல் ஒன்றாகும்.ஆனாலும் இன்று இந்தக் கலையானது முறைசார் கல்வியற்ற, மரபு ரீதியான மொழி அறிவு அற்ற, மேற்கின் மொழி அறிவில் பயிற்சியற்ற வெற்று மனிதர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் எமது சிங்கள இலக்கியம் பெருமளவு சிதைவடைந்துள்ளது.இவை அனைத்திற்கும் காரணமாக அமைவது மேல்குடி வர்க்கத்தினரின் ஆதிக்க மனோபாவங் கொண்ட செயற்பாடுகளேயாகும்.அவர்கள் திட்டமிட்டுச் செய்த கொடிய குற்றச் செயல் தான் இந் நாட்டில் காணப்பட்ட கல்வி முறையைச் சீர்குலைத்தது. ஆங்கிலக் கல்வியை நாசமறுத்ததும் பெரிய குற்றமாகும்.இன்று இலக்கியக் கலையும் திறனாய்வும் இருண்ட பாதாளமொன்றினுள் வீழ்ந்துள்ளது.இலக்கியம் என்ற பெயரில் இன்று வெளிவந்து கொண்டிருப்பவை சிந்தனைத் தொடர்பற்ற நீளுரைகள் ஆகும். புளித்துப்போன மொழியில் எழுதப்படும் இந்த நூல்களுக்குத் தங்கம், வெள்ளி , வெண்கலம் மற்றும் அரச விருதுகள் எனப் பல்வேறு பெயர்களிலான விருதுகளின் மேல் விருதுகள் வழங்கப் படுகின்றன. இதற்குள் படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள அனேகர் தனித்த தீவொன்றில் அநாதரவாக விடப்பட்ட அகதிகளைப் போன்றுள்ளனர். தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அனேக இலக்கியப் படைப்புகளில் சிறந்த சிங்கள இலக்கியங்களின் விதிமுறைகள் மற்றும் மொழி ரீதியான உள்ளார்ந்த படிமங்கள் தென்படுவதில்லை. புராதன காலத்திலிருந்து தொடர்ந்துவரும் சிறந்த இலக்கியத்திலிருந்து விலகிய தீவாந்திர இலக்கியமொன்றுதான் இன்று காணப்படுகிறது. இன்று இலக்கியத் திறனாய்வொன்று இல்லை. திறனாய்வாளர்கள் எனக்கூறப் படும் வெளியீட்டாளர்கள் கூட தரம் குறைந்த இலக்கியப் படைப்புகளை மிகைபடுத்தி்திக் கூறி அவற்றை உச்சத்துக்குக் கொண்டு சென்று பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எந்தவொரு திறனாய்வு தொடர்பாகவும் முறையான விதிமுறையொன்றோ தர்க்க ரீதியான வெளிப்பாடொன்றோ புலப்படுவதில்லை.முறையான தளமொன்று இன்றி நூல்களுடன் இருளுக்குள் தட்டுத்தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் இலங்கையின் இலக்கியத் துறையே இன்று குளறுபடியாகிக் கொண்டுள்ளது.



தாங்கள் இந்நாட்டின் பல்கலைக்கழகக் கல்வியைமுறையைப் பெரிதும் குறைகாணும் பேராசிரியர்களில் ஒருவர். விஷேடமாக நாடொன்றின் சிந்தனை, பகுத்தறிவு ஆற்றலை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மையானதாகத் திகழவேண்டிய பல்கலைக்கழகக் கல்வித் துறையானது பெருமளவு பின்னடைவு கண்டுள்ளதாக எப்பொழுதும் அழுத்தமாகக் கூறிவருகிறீர்கள். அனாலும் இன்று அறிவானது ஆற்றொழுக்காகச் செல்லாமைக்குத் தாய்மொழிக் கல்வியும் பிரதான காரணமொன்றாகும் என்பது தென்படுகிறது.
இன்று பல்கலைக்கழகங்களிற் கூட இருமொழிப் புலமையுடையவர்களுக்கான வெற்றிடம் இருப்பதைக் காண்கிறோம். ஆனாலும் அக் காலத்தில் பேராசிரியர் சரத்சந்திர போன்ற அறிவாளிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக நுண்ணாய்வுகளை நிகழ்த்திப் புரட்சிகரமான பங்காற்றினர். ஆங்கிலத்தைக் கைவிட்டதும் பிரிவெனாக்களைப் பல்கலைக்கழகங்களாக மாற்றியதும் தான் இந்தக் கல்வியின் இருளடைவுக்குக் காரணம் எனத் தென்படுகிறது. இது குறித்து?




சுச்சரித:
தாய்மொழிக் கல்வி காரணமாக ஆங்கிலம் மாத்திரம் அல்ல சிங்களம் கூட இழக்கப்பட்டுள்ளது.இன்று இலங்கையின் கல்வித்துறையானது முழுமையாகவே சிதைந்து போய்க் காணப்படுகின்றது.அநேகமான பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் மானுடவியல் பீடங்கள் தொடர்பாகக் கதைக்கக் கூட எதுவுமற்ற நிலையில் உள்ளன. இந்த நாட்டின் பல்கலைகழகங்களில் உள்ள பெரும்பாலான பேராசிரியர்கள் சிங்கள மொழியைச் சரியாகக் கற்பிப்பதில்லை. இது உண்மைக்குப் புறம்பானதென்று எவரேனும் ஆட்சேபனை தெரிவிப்பார்களேயானால் அவருடன் நான் உரையாடவும் தயாராகவுள்ளேன். இன்று கல்வியானது தடையின்றிச் செல்வதற்குப் பிரதானமான காரணம் தாய்மொழிக் கல்வியாகும்.

பேராசிரியர் சரத்சந்திர போன்ற சிறந்த கல்விமான்கள் பதவி உயர்வுகளை நோக்காகக் கொண்டு நுண்ணாய்வுகளை மேற்கொள்ளவில்லை.நாடகக் கலைஞர், விமர்சகர் மற்றும் இயக்கியவாதி ஒருவராகவும் பிரகாசிக்கின்ற ஆசிரியர் ஒருவராகவும் தான் பெற்றுக் கொண்ட அறிவைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குப் பேராசியர் சரத்சந்திரர் பெரும் முயற்சிளை மேற்கொண்டார். இதனால் பல்கலைக்கழகத்தினுள்ளும் அதற்குப் புறத்தேயான சமூகத்திலும் உயர்ந்த மதிப்பீடு கொண்ட பரம்பரையொன்று உருவாகியது. ஆனாலும் இன்று பல்கலைக்கழகக் கலாநிதிகளும் பேராசிரியர்களும் காணப்படுவது நாட்டின் பொதுத்தேர்தல் ஒன்று வரும்வேளையில் ஒரு கட்சிக்கு ஆதரவாகக் கையொப்பமிடுவதற்கும் பிரத்தியேக வகுப்பு வியாபார நிலையங்களைத் திறப்பதற்குமேயாகும்.





இலங்கையின் இலக்கியத் துறையோடு தொடர்பான "லவிசாரலய" எனப்படும் பிரபந்தமானது ஒருவகையான மரபையொத்த தன்மையோடு எமக்குக் கிடைக்கின்றது.எந்தவொரு திறனாய்வாளருள்ளும் இந்த வகைமாதிரியானது அவரது பல்வேறு கருத்துக்கள் மனப்பாங்குகள் சார்ந்து வடிவமைந்துள்ளது. தங்களது திறனாய்வுக் கலையும் பெரும்பாலும் மாக்ஸிய திறனாய்வுக் கோட்பாடுகளிலேயே தங்கியிருந்தது. ஆனாலும் இன்று முன்னேற்றமடைந்துள்ள உலகத்துக்கு இசைவாக இலக்கியத் திறனாய்வுக் கலையும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் அளவுகோள்களைத் தம்முள் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனுடன் ஒத்திசைவடையாமல் தாங்கள் உட்பட முன்னோடியான திறனாய்வாளர்கள் குழுவொன்று இனனும் பழைய சொதியையே கிளறிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.



சுச்சரித:
இப்போது இலங்கையில் இலக்கியத் திறனாய்வாளர்கள் இல்லை. இன்றிருப்பது திறனாய்வுக் கோமாளிகள். இந்தத் திறனாய்வுகளினூடாகத் தென்படுவது அவர்களுக்கு எந்தவொரு நுண்ணறிவு சார்ந்த பணியைச் செய்வதற்குமான அறிவோ பயிற்சியோ இல்லயென்பதே.அள்ளுண்டு வரும் புதிய கொள்கைகளுக்கு அடிமைப்படுவது பயங்கரமானது. அக்காலத்தில் எனது திறனாய்வுக் கோட்பாடுகள் யாவும் மாக்ஸியம் சார்ந்தே காணப்பட்டது. ஏதாவதொரு கலை வடிவத்திலிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் இலக்கை ஆய்ந்தறிந்து ஏதோவொரு ஒளிக்கீற்றை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கவே நான் எப்பொழுதும் முயற்சி செய்தேன்.அவ்வாறே மனிதன் மிகவும் வெற்றிகரமான மனப்பாங்குடன் வாழ்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைவதற்கு ஏதுவாகும் காரணிகள் எவை என்பதும் எனது திறனாய்வுக் கோட்பாடுகளில் காணப்பட்ட அடிப்படை விடயங்கள் எனக் கூற முடியும்.

அக்காலத்தில் மார்டின் விக்கிரமசிங்ஹ, பேராசியர் எதிரிவீர சரத்சந்திர, குணதாச அமரசேகர போன்ற எழுத்தாளர்கள் பண்டைய சிறந்த மொழிக்கலையை திறம் படக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அதனால் அவர்களது பெரும்பாலான படைப்புகள் தனித்துவமான எண்ணங்களாலும் கொள்கைகளாலும் நிரம்பிக் காணப்பட்டது. அனாலும் தற்கால பரம்பரையில் பெரும்பாலானவர்கள் அத்தகைய ஆழ்ந்த தன்னித்துவங்கொண்ட கருத்துக்களை முன்வைப்பவர்கள் அல்லர். அழுக்கடைந்த மொழியினால் எழுதும்,உரையாடும் அவர்களில் பெரும்பாலானோர்களிடத்தே அத்தகைய ஆற்றல்கள் இல்லை. போலியான கற்பனாவாதங்களை இரு கரம் நீட்டித் தழுவிக் கொள்வதற்கு நாங்கள் அவசரப்படத்தேவையில்லை.






தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை குறைகாணும் இயல்புடன் விமர்சனத்துக்குட்படுத்தும் தாங்களின் படைப்புகளிலும் செயற்பாட்டு பரப்புகளிலும் முக்கிய வேறுபாடுகள் தெரிவதற்கில்லை. ஆனாலும் சிங்கள, ஆங்கில, பாளி, சமஸ்கிருத மொழித்துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள காரணத்தாலேயே தங்களிடத்தே மொழி ரீதியான வலுவும் அறிவுத்துறை சார்ந்த தற்பெருமையும் காணப்படுவதாகச் சிலர் கூறுகின்றனர். அடுத்தவரை கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்வதற்கான ஆயுதமொன்றாகத் தாங்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் எனக் கருதுகிறேன். இதைப் பற்றி ?



சுச்சரித:
நான் மொழியறிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ள ஒருவர். நான் எழுதுவது தேர்ச்சி பெற்ற ஒரு மொழியில். அதனால் அது தொடர்பான அபிமானம் எனக்குள்ளது. ஆனாலும் நீங்கள் முன்பு குறிப்பிட்ட அறிவுத்துறை சார்ந்த தற்பெருமை என்ற சொல் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அறிவுத்துறை சார்ந்த தற்பெருமையுள்ளவர்கள் இருப்பின் அறிவுத்துறை சார்ந்த யாசகர்களும் காணப்பட வேண்டும். எனது செயற்பாடுகள் தொடர்பாகவும் படைப்புகள் தொடர்பாகவும் நீங்கள் கேள்வியெழுப்புகிறீர்கள். நான் உலகில் வளர்ச்சியடைந்த வாசிப்புகளால் முழுமைபெற்ற கலைப்படைப்புக்களை அதிகமாக வாசித்த, அவை தொடர்பாக ஆழமாகக் கற்றறிந்த ஒருவர். ஆனாலும் உலகில் காணப்படும் எல்லாக் கழிவுகளையும் குப்பைகளையும் தலையில் போட்டுக் கொள்வதற்கான தேவை எனக்கில்லை. ஒவ்வொரு பிதற்றல்காரர்களின் திமிர்பிடித்த பேச்சுக்களால் நான் குழப்பமடையப் போவதில்லை. இன்று எல்லா இடத்திலும் இருப்பவர்கள் பிதற்றல்காரர்களே. இன்று பல்கலைக் கழகங்களில் புத்தஜீவிகள் இல்லை. இதனால் புதிய கொள்கைகள் தொடர்பாக விவாதங்கள் நிகழ்த்தவதற்கும் அறிவார்ந்த விமர்சனங்களை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு முடியாதிருப்பது வியப்பானதல்ல. ஆனாலும் பல்கலைக்கழகத்துக்குப் புறம்பாக எழுச்சியடைந்த சுய கற்றலில் ஈடுபடும் இளம் இயக்கங்களும் குழுக்களும் கடந்த காலத்தில் பாழடைந்த வீடுகளில் பாத்திரங்களை போட்டுடைத்துக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.





நவீன கலை ,நவீன கலை வெளியீடுகளில் எப்பொழுமே கலையானது புதிய உருவமொன்றை பெற்றுக் கொள்கிறது. அப்பொழுது மரபு ரீதியான கலைகளும் மரபு ரீதியான கலை வெளியீடுகளும் மறுவாசிப்புக்குட்படுகின்றன. அத்தோடு அவற்றினூடாக புதிய கலைவடிவமொன்றுக்கான வெளியொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இடம் கிடைக்கின்றது. இலங்கைக் கலைகளுக்கு இசைவாக இந்தப் பண்பு மாறுபாட்டின் வேறுபாடுகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?



சுச்சரித:
இன்று இந்த நாட்டில் கலை இலக்கியத்தையும் விடவும் திரைப்படக் கலைத்துறையில் குறிப்பிடத்தக்களவு பயனுண்டாக்கத்தக்க வளர்ச்சி அடைந்துவருதைக் காணக் கூடியதாக உள்ளது. ப்ரசன்ன விதானகே, அஷோக ஹந்தகம போன்ற இளம் திரைப்படக் கலைஞர்கள் நவீன கலையை மிகவும் ஆழ்ந்து உள்வாங்கி உயர்ந்த திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்கள் எப்பொழுதும் சமூகத்தை நவீனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உந்துதல் பெற்றுள்ளனர். இது நல்ல போக்கொன்றாகும்.உதாரணத்திற்கு ப்ரசன்ன விதானகே நெறியாள்கையில் வெளிவந்த "ஆகாச குசும்" திரைப்படமானது சிறந்த பிரயத்தனமொன்றாகும். ஆனாலும் அது தொடர்பாக எழுதப்பட்ட ஆழமான திறனாய்வொன்றை இன்னும் காண முடியவில்லை. இது தவிர ஓவியக் கலைத்துறையில் நவீன கலை வெளிப்பாடுகளால் ஊட்டம் பெற்ற மாற்றுக் கலைவடிவங்கள் ஓரிரண்டு காணக்கிடைக்கின்றன. நவீன கலையையும் வெயியீடுகளையும் சமூகமயப்படுத்தச் சென்ற அனேகமானோரை நோக்கி எப்பொழுதும் ஏச்சுப் பேச்சுக்களும் கல்லடிகளும் பொல்லடிகளும் வந்து விழத்தொடங்கின. நீங்கள் கூறும் படியான நவீன கலை வடிவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சமூகமும் நவீனமடைய வேண்டும்.





இலக்கியவாதியின் பாத்திரமானது உலகினுள் எந்த விதத்திலான வேடமொன்றை ஏற்பதில் தங்கியுள்ளது என சிலர் கேள்வியெழுபபகின்றனர். நான் அந்தக் கேள்வியைத் தங்களிடம் முன்வைக்கிறேன்

சுச்சரித:
உண்மையான இலக்கியவாதி என்பவனும் இலக்கியம் என்பதுவும் மானுட வர்க்கத்தில் வளங்களோடும் கருத்துப் பறிமாற்றங்களுடனும் மலர்ச்சியுடனும் வாழ்வதற்காக வகுப்புவாத சமூகத்திற்கும் இயற்கைக்கும் எதிராக எப்பொழுதும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனாவான் .அவன் மொழியூடாக இந்த வேதனைமிக்க போராட்டத்தை எல்லாத் தரப்பினூடாகவும் மீள் உருவாக்கம் செய்கிறான்.அவ்வாறே இந்தப் போராட்டத்தினுள் மனிதர்கள் புதிய அனுபவங்களையும் புதிய பரிமாணங்களையும் புதிய ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதைக் காண முடியும். இவை அனைத்தும் இயக்கியப் படைப்பினுள் உள்ளடங்குகின்றன.இதனால் அதனுடன் கூட்டிணைவை மேற்கொள்ளும் சுவைஞர்களின் அனுபவத்தளத்தின் எல்லைகள் விரிவடைவதற்கும் ஆரம்பிக்கின்றன.இங்கு மனிதர்கள் தமக்குச் சார்பான வெற்றிகளால் உற்சாகமும் சார்பான தோல்விகளால் மனத்துயரும் அடைகின்றனர். வகுப்புவாத எதிரிமீது பகைமை கொள்ளுதல், நண்பனிடத்தே கருணை காட்டல், பிரமாண்டமான தடைகளின் எதிரே அச்சமடைதல், வகுப்புவாத எதிரியின் சில நடவடிக்கைகளை சந்தேகத்துடன் பார்த்தல் போன்ற அனைத்து விடயங்களும் இலக்கியத்தினுள் தங்குதடையின்றி வருவதும் நடைபெறுகிறது. அதனால் அதனுடன் தொடர்பு கொள்கின்ற சுவைஞர், இரசிகர், வாசகர் எனும் தரப்பினர்களின் சிந்தனைத் தளங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவும் கூடும். இதன் படி இலக்கியத்துடன் தொடர்புகொள்கின்ற ஒருவனின் உலகில், உலகமக்களின் வாழ்வுப் போராட்டங்களையும் வாழ்வையும் மெய்ப்பாட்டு ரீதியாகத் தொட்டுணர்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
இலக்கியவாதியின் வாழ்க்கையானது முழுமையானதும் ஆழமானதுமான ஒன்றாக மாறுவதினூடாக அவனது இலக்கியப் பாத்திரமும் மேம்பாட்டை நோக்கி நகரும். ஆனாலும் தற்கால இலக்கியவாதி மேற்கூறப்பட்ட அனைத்தையும் பறிகொடுத்த ஒருவனாவான்.



கடந்த தசாப்தங்களில் இலங்கையிலுள்ள புத்திஜீவிகள் இரு கூறாகப் பிரியும் போக்கினைக் காணகூடியதாக இருந்தது.இந் நாட்டில் காணப்பட்ட இனவாத யுத்தத்துக்குச் சார்பானவர்கள் என். ஜீ.ஓ. ஆனதோடு இன்னொரு குழு வெறுமனே தேசியம் ஆனார்கள். தேசிய - சர்வதேசிய என்ற அடிப்படையில் பிரிந்து கூறுபட்டதனால் மத்திய தரப் புத்திஜீவிகளது வெளி இழக்கப்பட்டுப் போனது. கோட்பாடுகள் மேலைத்தேயம் தேசியம் ஆகிய ரீதியில் பிளவுபடுவது குறித்து உமது கருத்து எத்தகையது?


சுச்சரித:
இலங்கையில் புத்திஜீவிகளுக்கிடையிலான பிரிவைப் பற்றிக் கதைப்பதைவிடவும் புத்திஜீவிகள் என்ற குழுவொன்று காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியமாகும். நான் அறிந்தவரையில் இந்த நாட்டில் புத்திஜீவிகள் அனைவரும் மறைந்து போயுள்ளனர். இனறு பல்கலைக்கழகங்களில் கூட புத்திஜீவிகளைக் காணமுடியாதுள்ளது.புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழுவும் ஒவ்வொருவரிடத்தேயும் விலைபோய்க் கொண்டிருக்கின்றனர். புத்திஜீவிகள் எனப்படுவோர் யார் என்பதை நாம் முதலில் வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

புத்திஜீவியொருவர் எப்பொழுதும் நடைமுறையிலுள்ள கோட்பாட்டுப் பிரவாகங்களுக்கு எதிராக எழுந்து நிற்கக் கூடிய ஒருவர்.அவர் சம்பிரதாயங்களை மாற்றமுறச் செய்பவர். ஆனாலும் இலங்கையில் எவ்விடத்திலும் அத்தகைய புத்திஜீவிகளைக் காண்பதற்கில்லை. 19ம் நூற்றாண்டளவில் ரஷ்யா போன்ற நாடுகளில்
அதி புத்திஜீவிகள் வாழ்ந்தனர்.அவர்களில் பெரும்பாலாவர்கள் கொள்கை விரோதிகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கோட்பாடுகளை மேற்கு மற்றும் தேசியம் என்ற ரீதியில் பிரிப்பது தவறாகும். எமது புராதன இலக்கியங்கள் கூட சர்வதேச மயப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டள்ளன.


பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர மற்றும் குணதாச அமசேகர ஆகியோர் இந்நாட்டில் உருவான சிறந்த இலக்கியகர்த்தாக்கள் எனக் கொள்ள முடியும்.சரத்சந்திரர் போலி அரசியல் சித்தாந்தங்களைப் பற்றி புதினங்களை எழுத முற்படவில்லை. ஆனாலும் குணதாச அமரசேகர அவரது கலைத்திறமைகளை மழுங்கடித்துக் கொண்டு இன்னும் போலியான சித்தாந்தங்களுக்கு ஊட்டமளிக்கும் மெய்விளக்க நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் எண்பது வயதைப் பூர்த்திசெய்த குணதாச அமரசேகர அவர்களின் இலக்கிய வகிபங்கு தொடர்பாக தங்களுக்குத் தோன்றுவதென்ன?


சுச்சரித:
குணதாச அமரசேகர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த இயக்கியவாதியொருவர்.அது தொடர்பான மாற்றுக் கருத்துக்கள் இல்லை. அவ்வாறே எமக்கிருக்கும் சிறந்த கவிஞரும் அவரே. ஆனாலும் அவரது அண்மைக்கால படைப்புகள் தொடர்பாகத் திருப்தியடைய முடியாது. அதனூடாகப் புலப்படுவது அவரது படைப்பாற்றலின் வறுமை நிலைதான். அமரசேகரவின் அண்மைக்காலப் படைப்புகள் வெற்றியளிக்காமைக்குக் காரணம் அவரது கிராமிய கற்பனைகளே.அவர் எப்பொழுதும் கிராமத்து இளைஞனுக்குச் சுயாதீனமான கடமைகள் உண்டென்று தவறாக விளங்கிக் கொண்டார்.அமரசேகர மாக்ஸிய வாதத்தைக் கற்றறிந்த ஒருவரல்ல. மத்திய தர வர்க்கத்தின் செயல்கள் எப்பொழுதும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு வால் பிடிப்பதாகும்.

கிராமிய இளைஞர்களின் சொல் செயல்களை எமக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காணக் கூடியதாக இருந்தது. 71 இன் கிளர்ச்சி, 88, 89 பயங்கரவாதம், மற்றும் எல்.ரீ.ரீ. ஈ பயங்கரவாதங்களினூடாக நன்றாக விளங்கியது. இன்று அமரசேகரவின் படைப்புகளினூடாகத் தென்படுவதும் திசைதிருப்பமொன்றாகும். ஆனாலும் இதனூடாக அமரசேகர எனப்படும் சிறந்த இலக்கியவாதியின் வரலாற்று செயற்பாடுகளைப் புறக்கணித்து விட முடியாது. எனது சிந்தனையின் படி அவரது இலக்கியப் பங்களிப்புகள் இன்னும் சரியான மதிப்பீடொன்றுக்கு உட்படவில்லை.

நன்றி: பூந்தி இணையதளம்
சஷி ப்ரபாத் ரணசிங்ஹ
Friday, December 11, 2009

வானம் ஏன் மேலே போனது?






விஜயலட்சுமி சேகரின் “வானம் ஏன் மேலே போனது?” இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.

இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப் பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.

மட்டக்களப்பு வாழ்வியலும் மொழியும் தொகுதி முழுவதும் இழையோடிக் காணப் படுகின்றது.கிழக்குடனான தொடர்பேதும் இன்றி வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இவரது தொகுதி புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.எனினும் “சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்” குறித்தும் அதன் வெளியீடுகள் குறித்தும் அறிந்திருப்போருக்கு இந்தத் தொகுதி முன்னைய அனுபவங்களின் நீட்சியாகவே தென் படும்.

தனது சுயத்தை இழக்க எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்.தான் அவமதிக்கப் படுவதையும் பிறரின் அனுதாபத்துக்குப் பாத்திரமாக அமைவதையும் ஆத்ம விசுவாசங் கொண்ட எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

“வலி” கதையின் பெண்ணும் தனது துயரத்தை வென்றுவிடப் பார்க்கிறாள். “என்ர காயத்த தவித் தடவி கத கேட்கும்.தடவக்குள்ள எல்லார்ர நகமும் காயத்தில் கீறும்.திரும்பத் திரும்ப வலிக்கும்.”

இரத்தம் வழியும் காயங்களை மூடி மறைத்துக் கொண்டு அனைவர் முன்னிலையிலும் புன்னகைத்து வாழும் பெண்களையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றுது.இங்கு காயம் ஒரு குறியீடாகவும் உள்ளது.

இன்றைய உலகில் அதிகமான நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களின் வறுமை என்பன அதிக கவனத்தைக் கோரி நிற்பவையாக உள்ளன. முதலாவதாகப் பெண் தனது வறுமைக்கு எதிராகப் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.அதே வேளையில் பருந்துகளிலிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியவளாகவும் இருக்கிறாள். பெண் தனது பொருளாதார விடுதலைக்காக எழுந்து நிற்கையில் ஆண், பல் வேறுபட்ட தொந்தரவுகளையும் துயரயங்களையும் அவள் மீதும் அவளது குழந்தைகள் மீதும் சுமத்துகிறான்.பெண்ணானவள் வறுமைக்கு எதிராகவும் அவளைச் சுற்றி நிற்கும் பிசாசுகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.ஆணிடமிருந்தே பெண்ணின் உலகுக்கு அச்சமும் இருளும் ஆற்றமுடியாத வடுக்களும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.


“அவள் நானாகி நாமாக” கதையில் வரும் பெண்னின் அவல நிலையின் முன் நாம் வார்த்தைகளையிழந்து போகிறோம்.
“எழும்பவே இயலாமல் இடுப்பெலும்பு முறிந்து திரும்பவும் தாய் நாட்டிற்கு வெறும் கையுடன் அனுப்பப் பட்ட நான், என் குழந்தை இரண்டு, நஞ்சு குடித்து இறந்த அக்காவின் குழந்தை இரண்டு இத்தனையும் சேர்த்து 76 வயது தாய்க்கு பாரமாவதில் உறைந்தே விட்டேன்”
இந்தப் பெண்ணுக்குச் சொல்ல எந்த மொழியிலாவது எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமா?

தனது தலைவிதியை ஆண் எனும் சாத்தானிடம் ஒப்புவித்துப் பின்னர் அவனால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் பட்ட பெண்ணின் வாழ்வை “கண்ணாடி வாழ்க்கை” சொல்கிறது.

“மொட்டுக்கள் மலரட்டும் 1-2” என்பன ஆணுடைய இழி செயலால் வல்லுறவுக்குள்ளாகும் பிஞ்சுகளைப் பற்றிச் சொல்கின்றன.

அவளை மட்டுமல்ல அவளது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியவளாக நித்தமும் ஆண் மிருகங்களை எண்ணிப் பயந்தவளாக பெண் வாழவேண்டியுள்ளது.

இவ்விடத்தே மாலதி மைத்ரியின் கட்டுரை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “சங்கப் பெண் கவிஞர்கள்” நூல் குறித்து “நிற் தகைக்குனர் யாரே?” என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நாடா கொன்றோ ; காடா கொன்றோ ;
அவலா கொன்றேர் மிசையா கொன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர் ;
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும் இடம் எப்படியிருற்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும்.பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க, தண்டிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட பெண்களின் கூட்டுக் குரல் இது.இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?”

பொருளாதார விடுதலை மாத்திரம் பெண்ணுக்கு நிறைவான வாழ்வைக் கொடுக்கப் போவதில்லை.அவள் சார்ந்து வாழும் ஆண் சமுகம் அவளுக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டும். ஆண் உயர்ந்த குணமுள்ளவனாக, 'மனிதனாக' மாறினால் மாத்திரமே பெண் உலகுக்கு உண்மையான விடுதலை வந்து சேரும்.
“அவளுக்கென்று…” கதையில் அவள் தன் கணவன் நல்லவனாக மாறிவிடுவான் என்று மனதிலும் உடலிலும் வடுக்கள் தாங்கி வாழ்கிறாள்.
தொடர்ந்தும் அந்த இல்லத்தை அவன் நரகமாக்கிக் கொண்டே இருக்கிறான்.இறுதியில் அவள் அந்த நரகத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
“உள்ளே சென்று சில பொருட்களை பையில் போட்டு எடுத்த படி குழந்தையை அள்ளித் தோளில் போட்டுக் கொள்கிறாள்.இவள் பார்வையின் கனம் தாங்காமல் ரகுவின் உடல் சேற்றில் படுத்த எருமை மாடு போல மறு பக்கம் புரள்கிறது.பாதம் வாசலை, வாசல் படியைத் தாண்டுகிறது.வானம் அமைதி காக்கிறது.இந்த அமைதி அடங்கிப் போதலுக்கான அறிகுறி அல்ல”
என ஆசிரியர் முடிக்கும் இடத்திலிருந்து கதையைத் தொடங்கியிருந்தால் என்ன? என்று கேட்கத் தோன்றுகின்றது.

இத்தகைய கதைகள் வழமையாகவே பெண் வீட்டைவிட்டு வெளியேறுவதுடன் முடிந்து போகின்றன.அதன் பின்னர் அவள் செல்லும் வழி எது? இடம் எது? இவளைப் போல கணவனிடமிருந்து பிரிந்து சென்ற பெண்ணுக்கு அவள் அவாவி நின்ற நிம்மதியான வாழ்வு கிடைத்ததா? சமுகம் அவளுக்கு இசைவாகி நின்றதா? நாவைத் தொங்கவிட்டவாறு அலையும் மிருகங்களிடமிருந்து தன்னையும் குழந்தையையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வாள்? இத்தகைய பெண்களைக் காப்பாற்றிடப் பெண்ணிய வாதிகளும் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளும் எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன? துயரங்களின் பதிவுகளை மட்டுமல்ல துயரங்களுக்கான தீர்வுகளையும் அவளுக்கான நம்பிக்கைகளையும் இத்தகைய படைப்புகளினு}டாக வழங்க முடியாதா?

“வானம் ஏன் மேலே போனது?” நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டிருந்தாலும் அது சொல்லும் உண்மை எல்லாப் பெண்களுக்கும் தைரியத்தை அளிக்கிறது.
“பத்து வயசுக்கு மேல நம்மளால நிமிந்து நிற்கவே முடியுதில்லயே. அதுவரைக்கும் தான் பூமிக்கும் வானத்துக்குமான உயரம்.அதுக்கு மேல தான் அறிவும் கூடயா வளருது. ஆளும் வளருது…ஆனா நம்மளோட உண்மையான வளர்ச்சிய உணர முடியாம வானம் இப்படி வளைச்சுப் போடுறாப் போல எப்பவும் முதுகுல முட்டுதே..”
வானம் மேலே போய் விட்டாலும் இன்னும் பெண்களின் நிலைமை இப்படித்தானே உள்ளது?

தொடரும் யுத்தங்களாலும் சிறுவர்களும் பெண்களுமே அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தீர்க்கமுடியா வடுக்களைச் சுமந்து வாழும் இவர்களால் சமுகமே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.யுத்தத்தில் ஒரு ஆண் கொல்லப் படும்போது அல்லது அவயவங்களை இழக்கும் போது அவன் ஒரு பெண்ணின் மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ இருக்கிறான்.அவ் வேளை அவனைச் சார்ந்து வாழும் பெண்ணும் குழந்தைகளும் அநாதரவாக விடப்படுகின்றனர்.அவ்வாறே யுத்தத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்களையும் குழந்தைகளையும் குண்டுகள், நச்சு வாயுக்கள், கண்ணிவெடிகள், வல்லுறவுகள் போன்ற பல்வேறு
(ஆண் சார்ந்த)ஆயுதங்கள் சிதைக்கும் போது அவர்களுடைய முழு ஆயுளும் வீணடிக்கப் படுகின்றது.அப்பாவிகள் மீது செத்துச் செத்து வாழும் வாழ்க்கை திணிக்கப் படுகிறது.


இவ்வாறு யுத்தம் அந்தரத்தில் விட்டுச் சென்ற சிறுவன் ஒருவனின் வாழ்வை “அந்தரத்தில்” கதை சொல்கிறது.

இவரது படைப்புகள் யாவும் அன்றாட வாழ்வின் துயரங்களில் இருந்தே வெளிப் பட்டுள்ளன.செய்யப் பட்ட கதைகளாகவோ முன்னரே தயாரித்து வைத்திருக்கும் வார்ப்புகளில் ஊற்றியெடுக்கப் பட்ட கதைகளாகவோ அன்றி துயருறும் பெண்களின் வலியைச் சொல்பவையாகவே அனேக கதைகள் அமைந்துள்ளன. “தீக்குள் தீ” , “நியாயம்” , “அவளுக்கென்று” போன்ற கதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பலராலும் எடுத்தாளப் பட்டுள்ள விடயங்களாக இருப்பதால் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் குறைகின்றது.இந்தக் கதைகள் தொகுதியில் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.சில கதைகள் குறுகி அவற்றின் மொழி இறுக்கமாகக் காணப் பட்டாலும் அவை சொல்லிச் செல்லும் விடயங்கள் மனதில் நீண்ட அதிர்வைத் தோற்றுவிக்கின்றன.

மௌனமாகவே பெண்ணின் துயரங்களைப் பார்த்துப் பார்த்து இருந்து இனியும் தாங்க முடியாமற் தானோ அந்த வானமும் தூரப் போயிற்று?

இந்தத் தொகுதியின் அட்டையும் வடிவமைப்பும் மிகவும் பின்னடைவுடன் காணப் படுகின்றது.இங்கு பிள்ளைகளுக்கான 40 பக்கப் பயிற்சிக் கொப்பிகள் கூட இதை விடவும் தரமான அட்டை மற்றும் வடிவமைப்புடன் தான் விற்பனைக்காக வருகின்றன.யுத்த நெருக்கடிக்கும் பல்வேறு தட்டுப் பாடுகளுக்கும் மத்தியில் வடக்கிலிருந்து வெளிவரும் நூல்களும் தம்மால் இயலுமான உச்ச தரத்துடனேயே வெளிவந்துள்ளன. ஆனால் அச்சுத் துறை சிறப்பாகவும் அதே வேளை மலிவாகவும் காணப் படுவதாக எமது மக்கள் கருதும் இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட இந்த நூலின் அட்டையோ போட்டோ கொப்பிப் பிரதியொன்றை ஒத்திருக்கின்றது.இதன் அட்டை மற்றும் வடிவமைப்பில் இதை விடவும் நேர்த்தியைக் கையாண்டிருக்கலாம்.புத்தகக் கடலில் அல்லது நூலகத்தில் இந்தப் புத்தகத்தின் வெளித்தோற்றத்தால் இது பார்ப்போரின் கவனத்தைவிட்டும் நழுவிப் போய்விடும் அபாயம் உள்ளது.
“பனிக்குடம் பதிப்பகம்” இந்த நூலின் செய்நேர்த்தியை விட்டுக் கவனம் வழுவியதேன்?

(மறுகா-2007 இதழுக்காக எழுதப்பட்டது)

பஹீமாஜஹான்
2007.03.04

Monday, September 21, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்




(பகுதி-2)
படிமம், குறியீடு இல்லாத கவிதைகளைப் புதுக் கவிதைகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

படிமம், குறியீடு என்பன பற்றி நான் இப்போது சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் புதுக் கவிதைக்கு மட்டுமன்றி மரபுக் கவிதைக்கும் படிமம் அடிப்படை என்பது பெறப்படும். குறியீடும் ஒருவகைப் படிமமே என்ற வகையில் இரு வகைக் கவிதையிலும் அதுவும் ஒரு வெளிப்பாட்டு முறையாக இருக்கலாம். உவமை, உருவகம் , குறியீடு போன்ற படிம வகைகள் ஒவ்வொரு கவிதையிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவை எதுவும் இல்லாமல் நேர் படிமங்களால் மட்டுமே ஒரு நல்ல கவிதை அமைய முடியும்.



யதார்த்தவாதம் என்றால் என்ன? உதாரணம் ஒன்றைக் கூறமுடியுமா?


யதார்த்தவாதம் என்பது ஒரு கலைக் கோட்பாடு. இதை ஆங்கிலத்தில் Realism என்பர். இதைப்பற்றி மிகச் சுருக்கமாக விளக்குவது என்பது எளிதல்ல. ஆயினும், நடைமுறை வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு கலை இலக்கியப் படைப்புகளில் சித்திரித்தல் என அதன் சாராம்சத்தைக் கூறலாம். இக்கலைக் கோட்பாடு மேலைநாடுகளில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தான் வளர்ச்சியடைந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றத்துக்கும் இக்கலைக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது இன்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. நவீன புனைகதை இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதைகளிலேயே இது முதல் முதல் வெளிப்பட்டது. டால்ஸ்டாய், தாத்தாவேஸ்கி, மாக்ஸிம் கார்க்கி போன்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இக்கோட்பாடு உச்சநிலை அடைந்தது என்பர். கவிதையில் யதார்த்தவாதத்தின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். தமிழில் மஹாகவியின் 'சடங்கு', 'கோடை', 'ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்', 'நீலாவணனின் பாவம் வாத்தியார்', என்னுடைய 'நிலம் எனும் நல்லாள்' போன்ற கவிதைகளை யதார்த்தவாதக் கவிதைக்கு உதாரணமாகக் காட்டலாம்.




இயற்பண்புவாதம் என்றால் என்ன? உதாரணத்துக்கு ஒரு கவிதையைச் சொல்வீர்களா?



யதார்த்தவாதம் போல் இதுவும் ஒரு கலை இலக்கிய கோட்பாடு தான். ஆங்கிலத்தில் இதனை Naturalism என்பர். நடைமுறை வாழ்க்கையை அப்படியே உளளது உள்ளபடி சித்திரிப்பதை இது குறிக்கும். பிரான்ஸிய நாவலாசிரியர் எமிலி ஜோலாவின் நாவல்களை இயற்பண்புவாதத்துக்குச் சிறந்த உதாரணங்களாக மேலை நாட்டு விமர்சகர்கள் கூறுவர். எனினும், யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்பு வாதத்துக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது அல்லது பெரிதும் கற்பிதமானது என்றே எனக்குத் தோன்றுகின்றது. எந்த ஒரு படைப்பாளியும் உள்ளதை உள்ளவாறே சித்திரிப்பது என்பது சாத்தியமல்ல. புகைப்படத்தில் கூட இது சாத்தியமில்லை. எனினும் ஒரு வாழ்க்கை நிலைமையைச் சித்திரிக்கும் ஒரு படைப்பாளி இந்த நிலைமை ஏன் இவ்வாறு இருக்கின்றது? இதற்கான காரணிகள் யாவை? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காணக் கூடிய முறையில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். இதே வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கும் பிறிதொரு படைப்பாளி இது இவ்வாறு தான் இருக்கும், இது இவ்வாறு இருப்பதுதான் இயற்கையானது என வலியுறுத்தும் வகையில் அப்படைப்பை உருவாக்க முடியும். இந்த வேறுபாட்டை யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்புவாதத்துக்கும் இடையிலான வேறுபாடாகக் குறிப்பிடலாம். எனினும், இந்த வேறுபாடு நிலையானதல்ல. வாசகனின் வாசிப்பை- புரிதலைப் பொறுத்து மாறுபடக் கூடும். உதாரணமாக, ஒரு இயற்பண்புவாத நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் யதார்த்தவாத நாவலாக வாசிக்க முடியும். அதாவது ஒரு யதார்த்த நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் இயற்பண்புவாத நாவலாக வாசிக்க முடியும். உதாரணமாக, புதுமைப்பித்தனின் பொன்னகரம், ஒருநாள் கழிந்தது ஆகிய சிறுகதைகளை இரு வகைகளிலும் ஒருவர் வாசிக்க முடியும். இதனால் தான் இவ்விரு கொள்கைகளுக்குமிடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது என்றேன். கவிதையில் இயற்பண்புவாதத்துக்கு உதாரணம் தேடுவது சிரமம். எனினும், நீலாவணனின் 'வேளாண்மை' ஒரு பொருத்தமான உதாரணமாகத் தோன்றுகின்றது. அதையே யதார்த்தவாதக் கவிதைக்கும் உதாரணமாகக் கூறுவேன்.



கற்பனாவாதம் என்றால் என்ன? இத்தகைய கவிதையொன்றைச் சொல்வீர்களா?



Romanticism எனும் ஆங்கிலப் பதத்துக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் தமிழ்ப் பதம் இது. இதனை யதார்த்தவாதத்துக்கு எதிர்நிலையானது எனலாம். நடைமுறை யதார்த்தத்தில் இருந்து விலகி, மிகைப்படுத்தப் பட்ட, முற்றிலும் புனைவியல் பாங்கான கலை முறையை இது குறிக்கும். ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு கலைக் கோட்பாடு இது. சிந்தனையை விட உணர்ச்சியையும், மனிதனால் உண்டாக்கப்பட்டவற்றையும் விட இயற்கை வனப்பையும் இக்கலைக் கோட்பாடு முதன்மைப் டுத்துகிறது. அழகை ஆராதித்தல் இதன் முக்கிய அம்சமாகும். ஏனைய இலக்கிய வடிவங்களைவிட கவிதையில் இதன் ஆதிக்கம் அதிகமாகும். வில்லியம் வேட்ஷ்வேத், வால்ட்விட்மன்,ஷெல்லி, கீற்ஸ் ஆகியோர் பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கற்பனாவாதக் கவிஞர்களாவர். தமிழில் பாரதியிலும் பாரதிதாசனிலும் அவருடைய வாரிசுகளிடத்திலும் கற்பனாவாத்ததின் செல்வாக்கைக் காணலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே கற்பனாவாதக் கவிதைகளுக்கு நல்ல உதாரணங்களாகும்.


இதில் எதை அல்லது எவற்றைத் தற்போதைய இலங்கைக் கவிஞர்கள் கையாள்கிறார்கள்?


இதில் ஒன்றைத் தனித்துக் குறிப்பிட முடியாது. கவிதையைப் பொறுத்த வரை இன்று இவையெல்லாம் தனித்தனிக் கோட்பாடுகளாகச் செயற்படுவதாகக் கூறமுடியவில்லை. இவை எல்லாவற்றின் செல்வாக்கும் வெவ்வேறு அளவில் கவிஞர்களிடத்தில் செயற்படுவதாகத் தான் தோன்றுகின்றது. கற்பனாவாதம், யதார்த்தவாதம் ஆகியவற்றின் கலவையைப் பல கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது. சோலைக்கிளியின் கவிதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.


தலித் என்பது எந்த மொழியிலிருந்து வந்த சொல்? தலித் இலக்கியம் என்றால் என்ன?


இது மராட்டி மொழிச் சொல் என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக சாதிகாரணமாக ஒடுக்கப்பட்டவர்களைச் சுட்ட இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. தலித் இலக்கியம் என்பது சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய, அவர்களின் விமோசனம், விடுதலை பற்றிய இலக்கியமாகும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இந்திய மொழிகள் பலவற்றில் தலித் இலக்கியம் பெருவளர்ச்சி பெற்றள்ளது.



இலங்கையில் தலித் இலக்கியத்தில் உள்ளடக்கக் கூடிய படைப்புகள் உள்ளனவா?


நிறைய உள்ளன. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற சொல் பிரபலமாக முன்னரே, 1950 களின் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் இத்தகைய இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்பன படைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவை தலித் இயக்கியம் என அழைக்கப்படவில்லை.பொதுவாக, முற்போக்கு இலக்கியம் என்றே அழைக்கப் பட்டன.கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கம்,தெணியான் போன்ற பலர் இத்தகைய இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.



ஈழத்து இலக்கியத்தில் பஞ்சமர் இலக்கியம் பற்றிப் பேசப்படுகிறதே, இதைப்பற்றிச் சற்று விளக்க முடியுமா?


தலித் இலக்கியம், பஞ்சமர் இலக்கியம் இரண்டும் ஒன்று தான். பஞ்சமர் என்பது, தலித் என்பது போல் சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினரைச் சுட்டும் ஒரு யாழ்ப்பாண வழக்குச் சொல்லாகும். யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை விட சாதிப் பாகுபாடும் சாதி ஒடுக்கு முறையும் அதிகம். அவ்வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இத்தகைய இலக்கியங்கள் அதிகம் எழுந்தன.



தற்கால யுத்த சூழ்நிலையில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளதாகப்பொதுவாக உணரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இலக்கிய உலகில் ஈழத்து இலக்கியத்துக்கு எத்தகைய இடத்தைப் பெற்றுத் தரும் என நீங்கள் கருதுகிறீர்கள்?


கடந்த சுமார் இருபது தசாப்தங்களில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளது என்பது உண்மைதான்.இன முரண்பாடும் யுத்தமும் தொடரும் சூழலில் சமூக ரீதியான அடக்கு முறை தீவிரமடைவதும், தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் எனபன தீவிரமாகப் பாதிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நிகழும்போது இலக்கியம் இந்த நிலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாதது. உலகமெங்கும் இத்தகைய சூழல் நிலவும் நாடுகளிலெல்லாம் இதனைக் காண்கிறோம். இதற்கு இலங்கை விலக்கல்ல. சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் , தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன மீறப்படுவதற்கு எதிராகவும் குரல்கொடுக்கும் இத்தகைய இலக்கியத்தை எதிர்ப்பு இலக்கியம் (Protest literature) என அழைப்பர். மூன்றாம் உலக நாடுகளான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் இன்றைய இலக்கியம் பெரிதும் எதிர்ப்பு இலக்கியமேயாகும். பலஸ்தீன இலக்கியம் இதற்கு நல்ல உதாரணமாகும். இன்றைய ஈழத்து இலக்கியம் இந்த நெறியிலேயே செல்கின்றது.

மூன்றாம் உலகின் எதிர்ப்பு இலக்கியத்தில் ஈழத்து இலக்கியத்துக்கும் குறிப்பாகக் கவிதை இலக்கியத்துக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் என்றே கருதுகிறேன்.


இலக்கிய உலகில் 'நவீனத்துவம்' என்ற குறிப்பிடுகிறார்களே, நவீனத்துவம் என்பது பற்றி விளக்குவீர்களா?


தமிழ் இலக்கிய உலகில் நவீனத்துவம் என்ற சொல் ஒரு திட்டவட்டமான பொருளில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் Modernity, Modernism ஆகிய சொற்கள் வழக்கில் உள்ளன.இவை இரண்டும் பொருளில் வேறுபட்டவை. Modernity என்பது தற்காலத்துக்குரியது, புதுமையானது, பாரம்பரிய மரபு வழியிலிருந்து வேறுபட்டது என்ற பொருள் தரும். இதனை நவீனத்துவம் எனலாம். Modernism என்பது இந்த நூற்றாண்டின் முன் அரைவாசியில், குறிப்பாக இரண்டு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கு நாடுகளில் தோன்றிய ஒரு கலாசாரக் கொள்கையாகும். கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம் போன்ற துறைகளில் புதிய வெளிப்பாடடு வடிவங்களைத் தேடிய, அவற்றைத் தத்துவ ரீதியாக நியாயப் படுத்திய ஒரு கலாசாரக் கொள்கையாக நாம் இதனை விளக்கலாம். இக் கொள்கையை நவீனவாதம் எனத் தமிழில் கூறுவது பொருத்தமாகும். ஆயினும், நவீனத்துவம் என்ற சொல்லாலேயே இவ்விரண்டையும் நாம் சுட்டுகிறோம். அதனால் சில மயக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நவீனவாதம், நவீனத்துவம் என்பவற்றுக்கிடையே உறவு உண்டு எனினும் இவை இரண்டும் வேறுபட்டவை.

மேற்கு நாடுகளில் நவீனத்துவம் கைத்தொழிற் புரட்சியோடு ஆரம்பிக்கின்றது. கைத்தொழிற் புரட்சி பாரம்பரிய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பைப் பெரிதும் மாற்றியமைத்தது. சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்கியது. அரசியல், நீதித்துறை, ஒழுக்கவியல், தத்துவம் ஆகியவற்றில் இது பெரு மாற்றங்களைக் கொண்டு வந்தது. கலை இலக்கியத் துறைகளிலும் புதிய பொருள், புதிய வடிவங்கள் என்பன தோன்றின. இவை பழைய மரபுகளிலிருந்து (Tradition) பெருமளவு மாற்றமடைந்த நவீனத்துவத்தின் சில முக்கிய அம்சங்களாகும். தமிழில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நவீனத்துவத்தின் அம்சங்கள் வெளிப்படத் தொடங்கின. ஆங்கிலேயர் இங்கு அறிமுகப்படுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவுகளே இவை. இலக்கியத் துறையில் நவீனத்துவத்தின் வெளிப்பாடாக 19ம் நூற்றாண்டின் இறுதியில் நாவல்கள் தோன்றின.பாரதியின் வருகையோடு கவிதையில் நவீனத்துவம் அறிமுகமாகியது. அதே காலப் பகுதியில் சிறுகதை இலக்கியம் தோன்றியது. கலை இலக்கியத்தில் யதார்த்தவாதம் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மேலைத் தேய முதலாளித்துவ சமூகங்களில் ஏற்பட்ட துரித வளர்ச்சியும் சிக்கல்களும் கலை இலக்கியத்தில் நவீனவாதச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. யதார்த்தவாதப் போக்கிலிருந்து வேறுபட்ட imagism, cubism, surrealism போன்ற கலைமுறைகள் தோன்றின. நவீன ஓவியம் (modern art), புதுக்கவிதை (new poetry) போன்றவையும் நவீனவாதத்தின் வெளிப்பாடுகளேயாகும். கடந்த கால் நூற்றாண்டுக்குச் சற்று அதிகமான காலப்பகுதியில் மேற்குலகில் பண்பாட்டுத் துறையில் பின்னவீனவாதம் (Post Modernism) பற்றிப் பேசப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழிலும் இதன் தாக்கத்தைக் காண்கிறோம்.



பின்னவீனவாதத்தின் முனைப்பான அம்சங்கள் எவை எனக்கூறுவீர்களா?


பின்னவீனவாதம் அலசியல், தத்துவம், பண்பாடு போன்ற பல துறைகளிலும் இதுவரை வலுவுடன் விளங்கிய கொள்கைகள் எல்லாவற்றையும் கேள்விக்கிடமாக்குகின்றது. உலகளாவிய கொள்கைகள் என்று எவையும் இருக்க முடியாது எனக் கூறுகின்றது. அவற்றையெல்லாம் பெருங்கதையாடல் (Mata narative) என்று நிராகரித்து விடுகின்றது. குழுத் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இலக்கியத் துறையில் பிரதிக் கோட்பாடடுக்கு முதன்மை கொடுக்கின்றது. இலக்கிய ஆசிரியரின் முக்கியத்துவத்தை நிராகரிக்கின்றது. ஆசிரியனின் மரணத்தை றோலன் பார்த் என்ற பிரான்சிய பின்னவீனச் சிந்தனையாளர் முதன் முதல் அறிவித்தார். ஒரு படைப்பு உருவாகிய பின் ஆசிரியரனின் ஆளுமைக்கு அங்கு இடமில்லை என்பது இதன் பொருள். வாசகனே இங்கு முக்கியத்தவம் பெறுகிறான். ஒரு இலக்கியப் பிரதியைப் படித்து வாசகன் என்ன பொருள் கொள்கின்றானோ அதுவே அப்பிரதியின் பொருள். அவ்வகையில்
ஒரு பிரதிக்குத் திட்டவட்டமான பொருள் ஒன்று இருக்க முடியாது. ஒவ்வொரு வாசகனும் ஒரே பிரதியைப் படித்து வெவ்வேறு பொருள் கொள்ள முடியும். ஆகவே, ஒரு பிரதியின் பொருள் முடிவற்றது என்றெல்லாம் பின்னவீனவாதம் கூறுகின்றது. பின்னவீனவாதத்தைப் பொறுத்த வரை கம்பராமாயணமும், கல்கியின் சிறுகதை ஒன்றும், ஒரு காதல் கடிதமும், ஒரு சிறு துண்டுப் பிரசுரமும் பிரதிதான். பிரதி என்ற வகையில் இவை தம்முள் சமமானவை. அவ்வகையில், இலக்கியத் தரம், இலக்கிய மேன்மை என்பவற்றுக்குப் பின்னவீன விமர்சனத்தில் இடம் இல்லை எனலாம். ஜனரஞ்சக இலக்கியம், உயர் இலக்கியம் என்ற வேறுபாட்டைப் பின்னவீனவாதம் கடந்த செல்கின்றது.



இலங்கைப் படைப்புகளின் உணர்வுத் தளம் சுய அனுபவங்களைக் கூற விளைவதாகவே பொதுவாகக் காணப்படுகின்றது.இதனால் இலக்கியம் நவீனத்துவம் பெற முடியுமா?


சுய அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனித அனுபவத்தின் அர்த்தத்தைக் காண விளைவது உயர்ந்த கலையின் முக்கிய பண்பாகக் கொள்ளலாம். இது நவீனத்துவத்தின் முக்கிய அம்சமே. ஆனால், நீங்கள் சொல்வது போல் இலங்கைப் படைப்புகளின் இதுவே பிரதான போக்கு என்று எனக்கத் தோன்றவில்லை.இங்கு சுய அனுபவங்களை விட கருத்துக்களை அல்லது கொள்கைகளை முதன்மைப் படுத்தும் போக்கே முனைப்பாகத் தெரிகின்றது.


இலக்கியம் நவீனத்துவம் பெற வேண்டுமாயின் எத்தகைய உத்திகளைப் பயன்படுத்தலாம்?


நவீனத்துவம் உத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. உள்ளடக்கமே பிரதானமானது. உள்ளடக்கம் காலத்தைப் பிரதிபலிப்பதாக, அதாவது நம் காலத்துககுரியதாக இருத்தல் நவீன இலக்கியத்தின் பிரதான பண்பாகும். இன்றைய மனிதர், இன்றைய வாழ்க்கை, இன்றைய நடைமுறை ஆகியவற்றை இன்றைய நோக்கு நிலையில் அணுகுவது முக்கியமானது. தற்காலத்தில் எழுதப்படுவதனாலேயே ஒரு இலக்கியம் தற்காலத்துக்குரியது, நவீனமானது ஆகாது. அதில் தற்காலத்தின் குரல் கேட்க வேண்டும். உதாரணமாக, பாரதியின் கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான பாரதியின் கவிதைகளில் இந்த நூற்றாண்டின் குரலைக் கேட்கிறோம். பாஞ்சாலி சபதம் மகாபாரதத்தி்ல் இருந்து எடுக்கப் பட்ட பழைய கதையே. ஆனாலும் அதில் கூட அடிமைப்பட்ட இந்தியாவின், அடிமைப்பட்ட பெண்களின் குரலையே கேட்கின்றோம். அதனாலேயே பாரதி நவீன கவிஞன் ஆகிறான். அவன் கையாண்ட பாட்டு வடிவங்கள் பெரும்பாலும் பழையவை. ஆனால், பொருள் புதிது, சுவை புதிது, சொற்புதிது.

அதனாலேயே அவனது கவிதைகள் நவ கவிதை அதாவது நவீன கவிதை எனப்படுகின்றன.உத்திகள் ஒவ்வொரு இலக்கிய வடிவத்துக்கும் ஏற்ப வேறுபடலாம்.படைப்பாளியின் நோக்கமும் தேவையுமே அதைத் தீர்மானிக்கும்.


தற்கால இளம் படைப்பாளிகளுக்குக் குறிப்பாக கவிதை எழுதுவோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


வாசிப்பையே நான் அதிகம் வலியுறுத்துவேன். நமது பெரும்பாலான இளம்படைப்பாளிகள், கவிஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. பரந்துபட்ட வாசிப்பு நம் அனுபவத்தை அகலப்படுத்தும். இலக்கிய வடிவங்களிலும் மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியைத் தரும். இத்தகைய இலக்கியத் தாடனமும் மொழிப் பயிற்சியும் இல்லாமல் சிறந்த இலக்கியங்களைப் படைப்பது மிகவும் அரிது. கவிதை எழுதுபவர்களுக்கு பழைய கவிதைகளிலும் புதிய கவிதைகளிலும் பரந்த வாசிப்பு அவசியமாகும். பிறமொழிக் கவிதைகள்படிக்க முடிந்தால் இன்னும் பயனுடையது.மொழிதான் இலக்கியத்தின் கருவி. தன் கருவி பற்றிய அறிவும் அதை லாவகமாகக் கையாளும் திறனும் இல்லாமல் ஒருவர் இலக்கியம் படைக்க முடியாது. இன்று கவிதை என வருகின்ற அனேகமான ஆக்கங்கள் இதனையே நிரூபிக்கின்றன.

(இந்நேர்காணலை ஒருங்கிணைத்துத் தந்த பிரதி அதிபர் ஏ.ஆதம் லெவ்வை அவர்களுக்கும், துணைபுரிந்த திருமதி நுஃமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்)
Newer Posts Older Posts