Friday, December 11, 2009

வானம் ஏன் மேலே போனது?


விஜயலட்சுமி சேகரின் “வானம் ஏன் மேலே போனது?” இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.

இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப் பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.

மட்டக்களப்பு வாழ்வியலும் மொழியும் தொகுதி முழுவதும் இழையோடிக் காணப் படுகின்றது.கிழக்குடனான தொடர்பேதும் இன்றி வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இவரது தொகுதி புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.எனினும் “சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்” குறித்தும் அதன் வெளியீடுகள் குறித்தும் அறிந்திருப்போருக்கு இந்தத் தொகுதி முன்னைய அனுபவங்களின் நீட்சியாகவே தென் படும்.

தனது சுயத்தை இழக்க எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்.தான் அவமதிக்கப் படுவதையும் பிறரின் அனுதாபத்துக்குப் பாத்திரமாக அமைவதையும் ஆத்ம விசுவாசங் கொண்ட எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

“வலி” கதையின் பெண்ணும் தனது துயரத்தை வென்றுவிடப் பார்க்கிறாள். “என்ர காயத்த தவித் தடவி கத கேட்கும்.தடவக்குள்ள எல்லார்ர நகமும் காயத்தில் கீறும்.திரும்பத் திரும்ப வலிக்கும்.”

இரத்தம் வழியும் காயங்களை மூடி மறைத்துக் கொண்டு அனைவர் முன்னிலையிலும் புன்னகைத்து வாழும் பெண்களையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றுது.இங்கு காயம் ஒரு குறியீடாகவும் உள்ளது.

இன்றைய உலகில் அதிகமான நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களின் வறுமை என்பன அதிக கவனத்தைக் கோரி நிற்பவையாக உள்ளன. முதலாவதாகப் பெண் தனது வறுமைக்கு எதிராகப் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.அதே வேளையில் பருந்துகளிலிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியவளாகவும் இருக்கிறாள். பெண் தனது பொருளாதார விடுதலைக்காக எழுந்து நிற்கையில் ஆண், பல் வேறுபட்ட தொந்தரவுகளையும் துயரயங்களையும் அவள் மீதும் அவளது குழந்தைகள் மீதும் சுமத்துகிறான்.பெண்ணானவள் வறுமைக்கு எதிராகவும் அவளைச் சுற்றி நிற்கும் பிசாசுகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.ஆணிடமிருந்தே பெண்ணின் உலகுக்கு அச்சமும் இருளும் ஆற்றமுடியாத வடுக்களும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.


“அவள் நானாகி நாமாக” கதையில் வரும் பெண்னின் அவல நிலையின் முன் நாம் வார்த்தைகளையிழந்து போகிறோம்.
“எழும்பவே இயலாமல் இடுப்பெலும்பு முறிந்து திரும்பவும் தாய் நாட்டிற்கு வெறும் கையுடன் அனுப்பப் பட்ட நான், என் குழந்தை இரண்டு, நஞ்சு குடித்து இறந்த அக்காவின் குழந்தை இரண்டு இத்தனையும் சேர்த்து 76 வயது தாய்க்கு பாரமாவதில் உறைந்தே விட்டேன்”
இந்தப் பெண்ணுக்குச் சொல்ல எந்த மொழியிலாவது எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமா?

தனது தலைவிதியை ஆண் எனும் சாத்தானிடம் ஒப்புவித்துப் பின்னர் அவனால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் பட்ட பெண்ணின் வாழ்வை “கண்ணாடி வாழ்க்கை” சொல்கிறது.

“மொட்டுக்கள் மலரட்டும் 1-2” என்பன ஆணுடைய இழி செயலால் வல்லுறவுக்குள்ளாகும் பிஞ்சுகளைப் பற்றிச் சொல்கின்றன.

அவளை மட்டுமல்ல அவளது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியவளாக நித்தமும் ஆண் மிருகங்களை எண்ணிப் பயந்தவளாக பெண் வாழவேண்டியுள்ளது.

இவ்விடத்தே மாலதி மைத்ரியின் கட்டுரை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “சங்கப் பெண் கவிஞர்கள்” நூல் குறித்து “நிற் தகைக்குனர் யாரே?” என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நாடா கொன்றோ ; காடா கொன்றோ ;
அவலா கொன்றேர் மிசையா கொன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர் ;
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும் இடம் எப்படியிருற்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும்.பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க, தண்டிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட பெண்களின் கூட்டுக் குரல் இது.இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?”

பொருளாதார விடுதலை மாத்திரம் பெண்ணுக்கு நிறைவான வாழ்வைக் கொடுக்கப் போவதில்லை.அவள் சார்ந்து வாழும் ஆண் சமுகம் அவளுக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டும். ஆண் உயர்ந்த குணமுள்ளவனாக, 'மனிதனாக' மாறினால் மாத்திரமே பெண் உலகுக்கு உண்மையான விடுதலை வந்து சேரும்.
“அவளுக்கென்று…” கதையில் அவள் தன் கணவன் நல்லவனாக மாறிவிடுவான் என்று மனதிலும் உடலிலும் வடுக்கள் தாங்கி வாழ்கிறாள்.
தொடர்ந்தும் அந்த இல்லத்தை அவன் நரகமாக்கிக் கொண்டே இருக்கிறான்.இறுதியில் அவள் அந்த நரகத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
“உள்ளே சென்று சில பொருட்களை பையில் போட்டு எடுத்த படி குழந்தையை அள்ளித் தோளில் போட்டுக் கொள்கிறாள்.இவள் பார்வையின் கனம் தாங்காமல் ரகுவின் உடல் சேற்றில் படுத்த எருமை மாடு போல மறு பக்கம் புரள்கிறது.பாதம் வாசலை, வாசல் படியைத் தாண்டுகிறது.வானம் அமைதி காக்கிறது.இந்த அமைதி அடங்கிப் போதலுக்கான அறிகுறி அல்ல”
என ஆசிரியர் முடிக்கும் இடத்திலிருந்து கதையைத் தொடங்கியிருந்தால் என்ன? என்று கேட்கத் தோன்றுகின்றது.

இத்தகைய கதைகள் வழமையாகவே பெண் வீட்டைவிட்டு வெளியேறுவதுடன் முடிந்து போகின்றன.அதன் பின்னர் அவள் செல்லும் வழி எது? இடம் எது? இவளைப் போல கணவனிடமிருந்து பிரிந்து சென்ற பெண்ணுக்கு அவள் அவாவி நின்ற நிம்மதியான வாழ்வு கிடைத்ததா? சமுகம் அவளுக்கு இசைவாகி நின்றதா? நாவைத் தொங்கவிட்டவாறு அலையும் மிருகங்களிடமிருந்து தன்னையும் குழந்தையையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வாள்? இத்தகைய பெண்களைக் காப்பாற்றிடப் பெண்ணிய வாதிகளும் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளும் எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன? துயரங்களின் பதிவுகளை மட்டுமல்ல துயரங்களுக்கான தீர்வுகளையும் அவளுக்கான நம்பிக்கைகளையும் இத்தகைய படைப்புகளினு}டாக வழங்க முடியாதா?

“வானம் ஏன் மேலே போனது?” நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டிருந்தாலும் அது சொல்லும் உண்மை எல்லாப் பெண்களுக்கும் தைரியத்தை அளிக்கிறது.
“பத்து வயசுக்கு மேல நம்மளால நிமிந்து நிற்கவே முடியுதில்லயே. அதுவரைக்கும் தான் பூமிக்கும் வானத்துக்குமான உயரம்.அதுக்கு மேல தான் அறிவும் கூடயா வளருது. ஆளும் வளருது…ஆனா நம்மளோட உண்மையான வளர்ச்சிய உணர முடியாம வானம் இப்படி வளைச்சுப் போடுறாப் போல எப்பவும் முதுகுல முட்டுதே..”
வானம் மேலே போய் விட்டாலும் இன்னும் பெண்களின் நிலைமை இப்படித்தானே உள்ளது?

தொடரும் யுத்தங்களாலும் சிறுவர்களும் பெண்களுமே அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தீர்க்கமுடியா வடுக்களைச் சுமந்து வாழும் இவர்களால் சமுகமே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.யுத்தத்தில் ஒரு ஆண் கொல்லப் படும்போது அல்லது அவயவங்களை இழக்கும் போது அவன் ஒரு பெண்ணின் மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ இருக்கிறான்.அவ் வேளை அவனைச் சார்ந்து வாழும் பெண்ணும் குழந்தைகளும் அநாதரவாக விடப்படுகின்றனர்.அவ்வாறே யுத்தத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்களையும் குழந்தைகளையும் குண்டுகள், நச்சு வாயுக்கள், கண்ணிவெடிகள், வல்லுறவுகள் போன்ற பல்வேறு
(ஆண் சார்ந்த)ஆயுதங்கள் சிதைக்கும் போது அவர்களுடைய முழு ஆயுளும் வீணடிக்கப் படுகின்றது.அப்பாவிகள் மீது செத்துச் செத்து வாழும் வாழ்க்கை திணிக்கப் படுகிறது.


இவ்வாறு யுத்தம் அந்தரத்தில் விட்டுச் சென்ற சிறுவன் ஒருவனின் வாழ்வை “அந்தரத்தில்” கதை சொல்கிறது.

இவரது படைப்புகள் யாவும் அன்றாட வாழ்வின் துயரங்களில் இருந்தே வெளிப் பட்டுள்ளன.செய்யப் பட்ட கதைகளாகவோ முன்னரே தயாரித்து வைத்திருக்கும் வார்ப்புகளில் ஊற்றியெடுக்கப் பட்ட கதைகளாகவோ அன்றி துயருறும் பெண்களின் வலியைச் சொல்பவையாகவே அனேக கதைகள் அமைந்துள்ளன. “தீக்குள் தீ” , “நியாயம்” , “அவளுக்கென்று” போன்ற கதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பலராலும் எடுத்தாளப் பட்டுள்ள விடயங்களாக இருப்பதால் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் குறைகின்றது.இந்தக் கதைகள் தொகுதியில் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.சில கதைகள் குறுகி அவற்றின் மொழி இறுக்கமாகக் காணப் பட்டாலும் அவை சொல்லிச் செல்லும் விடயங்கள் மனதில் நீண்ட அதிர்வைத் தோற்றுவிக்கின்றன.

மௌனமாகவே பெண்ணின் துயரங்களைப் பார்த்துப் பார்த்து இருந்து இனியும் தாங்க முடியாமற் தானோ அந்த வானமும் தூரப் போயிற்று?

இந்தத் தொகுதியின் அட்டையும் வடிவமைப்பும் மிகவும் பின்னடைவுடன் காணப் படுகின்றது.இங்கு பிள்ளைகளுக்கான 40 பக்கப் பயிற்சிக் கொப்பிகள் கூட இதை விடவும் தரமான அட்டை மற்றும் வடிவமைப்புடன் தான் விற்பனைக்காக வருகின்றன.யுத்த நெருக்கடிக்கும் பல்வேறு தட்டுப் பாடுகளுக்கும் மத்தியில் வடக்கிலிருந்து வெளிவரும் நூல்களும் தம்மால் இயலுமான உச்ச தரத்துடனேயே வெளிவந்துள்ளன. ஆனால் அச்சுத் துறை சிறப்பாகவும் அதே வேளை மலிவாகவும் காணப் படுவதாக எமது மக்கள் கருதும் இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட இந்த நூலின் அட்டையோ போட்டோ கொப்பிப் பிரதியொன்றை ஒத்திருக்கின்றது.இதன் அட்டை மற்றும் வடிவமைப்பில் இதை விடவும் நேர்த்தியைக் கையாண்டிருக்கலாம்.புத்தகக் கடலில் அல்லது நூலகத்தில் இந்தப் புத்தகத்தின் வெளித்தோற்றத்தால் இது பார்ப்போரின் கவனத்தைவிட்டும் நழுவிப் போய்விடும் அபாயம் உள்ளது.
“பனிக்குடம் பதிப்பகம்” இந்த நூலின் செய்நேர்த்தியை விட்டுக் கவனம் வழுவியதேன்?

(மறுகா-2007 இதழுக்காக எழுதப்பட்டது)

பஹீமாஜஹான்
2007.03.04

Monday, September 21, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்
(பகுதி-2)
படிமம், குறியீடு இல்லாத கவிதைகளைப் புதுக் கவிதைகளாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

படிமம், குறியீடு என்பன பற்றி நான் இப்போது சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் புதுக் கவிதைக்கு மட்டுமன்றி மரபுக் கவிதைக்கும் படிமம் அடிப்படை என்பது பெறப்படும். குறியீடும் ஒருவகைப் படிமமே என்ற வகையில் இரு வகைக் கவிதையிலும் அதுவும் ஒரு வெளிப்பாட்டு முறையாக இருக்கலாம். உவமை, உருவகம் , குறியீடு போன்ற படிம வகைகள் ஒவ்வொரு கவிதையிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவை எதுவும் இல்லாமல் நேர் படிமங்களால் மட்டுமே ஒரு நல்ல கவிதை அமைய முடியும்.யதார்த்தவாதம் என்றால் என்ன? உதாரணம் ஒன்றைக் கூறமுடியுமா?


யதார்த்தவாதம் என்பது ஒரு கலைக் கோட்பாடு. இதை ஆங்கிலத்தில் Realism என்பர். இதைப்பற்றி மிகச் சுருக்கமாக விளக்குவது என்பது எளிதல்ல. ஆயினும், நடைமுறை வாழ்க்கையை அதன் உட்புதைந்திருக்கும் உண்மைகள் புலப்படுமாறு கலை இலக்கியப் படைப்புகளில் சித்திரித்தல் என அதன் சாராம்சத்தைக் கூறலாம். இக்கலைக் கோட்பாடு மேலைநாடுகளில் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தான் வளர்ச்சியடைந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றத்துக்கும் இக்கலைக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பது இன்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. நவீன புனைகதை இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதைகளிலேயே இது முதல் முதல் வெளிப்பட்டது. டால்ஸ்டாய், தாத்தாவேஸ்கி, மாக்ஸிம் கார்க்கி போன்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இக்கோட்பாடு உச்சநிலை அடைந்தது என்பர். கவிதையில் யதார்த்தவாதத்தின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். தமிழில் மஹாகவியின் 'சடங்கு', 'கோடை', 'ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்', 'நீலாவணனின் பாவம் வாத்தியார்', என்னுடைய 'நிலம் எனும் நல்லாள்' போன்ற கவிதைகளை யதார்த்தவாதக் கவிதைக்கு உதாரணமாகக் காட்டலாம்.
இயற்பண்புவாதம் என்றால் என்ன? உதாரணத்துக்கு ஒரு கவிதையைச் சொல்வீர்களா?யதார்த்தவாதம் போல் இதுவும் ஒரு கலை இலக்கிய கோட்பாடு தான். ஆங்கிலத்தில் இதனை Naturalism என்பர். நடைமுறை வாழ்க்கையை அப்படியே உளளது உள்ளபடி சித்திரிப்பதை இது குறிக்கும். பிரான்ஸிய நாவலாசிரியர் எமிலி ஜோலாவின் நாவல்களை இயற்பண்புவாதத்துக்குச் சிறந்த உதாரணங்களாக மேலை நாட்டு விமர்சகர்கள் கூறுவர். எனினும், யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்பு வாதத்துக்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது அல்லது பெரிதும் கற்பிதமானது என்றே எனக்குத் தோன்றுகின்றது. எந்த ஒரு படைப்பாளியும் உள்ளதை உள்ளவாறே சித்திரிப்பது என்பது சாத்தியமல்ல. புகைப்படத்தில் கூட இது சாத்தியமில்லை. எனினும் ஒரு வாழ்க்கை நிலைமையைச் சித்திரிக்கும் ஒரு படைப்பாளி இந்த நிலைமை ஏன் இவ்வாறு இருக்கின்றது? இதற்கான காரணிகள் யாவை? போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காணக் கூடிய முறையில் ஒரு படைப்பை உருவாக்க முடியும். இதே வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக்கும் பிறிதொரு படைப்பாளி இது இவ்வாறு தான் இருக்கும், இது இவ்வாறு இருப்பதுதான் இயற்கையானது என வலியுறுத்தும் வகையில் அப்படைப்பை உருவாக்க முடியும். இந்த வேறுபாட்டை யதார்த்தவாதத்துக்கும் இயற்பண்புவாதத்துக்கும் இடையிலான வேறுபாடாகக் குறிப்பிடலாம். எனினும், இந்த வேறுபாடு நிலையானதல்ல. வாசகனின் வாசிப்பை- புரிதலைப் பொறுத்து மாறுபடக் கூடும். உதாரணமாக, ஒரு இயற்பண்புவாத நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் யதார்த்தவாத நாவலாக வாசிக்க முடியும். அதாவது ஒரு யதார்த்த நாவல் என்று கூறப்படுவதை ஒரு வாசகன் இயற்பண்புவாத நாவலாக வாசிக்க முடியும். உதாரணமாக, புதுமைப்பித்தனின் பொன்னகரம், ஒருநாள் கழிந்தது ஆகிய சிறுகதைகளை இரு வகைகளிலும் ஒருவர் வாசிக்க முடியும். இதனால் தான் இவ்விரு கொள்கைகளுக்குமிடையே உள்ள இடைவெளி மிகவும் குறுகியது என்றேன். கவிதையில் இயற்பண்புவாதத்துக்கு உதாரணம் தேடுவது சிரமம். எனினும், நீலாவணனின் 'வேளாண்மை' ஒரு பொருத்தமான உதாரணமாகத் தோன்றுகின்றது. அதையே யதார்த்தவாதக் கவிதைக்கும் உதாரணமாகக் கூறுவேன்.கற்பனாவாதம் என்றால் என்ன? இத்தகைய கவிதையொன்றைச் சொல்வீர்களா?Romanticism எனும் ஆங்கிலப் பதத்துக்கு நிகராகப் பயன்படுத்தப்படும் தமிழ்ப் பதம் இது. இதனை யதார்த்தவாதத்துக்கு எதிர்நிலையானது எனலாம். நடைமுறை யதார்த்தத்தில் இருந்து விலகி, மிகைப்படுத்தப் பட்ட, முற்றிலும் புனைவியல் பாங்கான கலை முறையை இது குறிக்கும். ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு கலைக் கோட்பாடு இது. சிந்தனையை விட உணர்ச்சியையும், மனிதனால் உண்டாக்கப்பட்டவற்றையும் விட இயற்கை வனப்பையும் இக்கலைக் கோட்பாடு முதன்மைப் டுத்துகிறது. அழகை ஆராதித்தல் இதன் முக்கிய அம்சமாகும். ஏனைய இலக்கிய வடிவங்களைவிட கவிதையில் இதன் ஆதிக்கம் அதிகமாகும். வில்லியம் வேட்ஷ்வேத், வால்ட்விட்மன்,ஷெல்லி, கீற்ஸ் ஆகியோர் பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கற்பனாவாதக் கவிஞர்களாவர். தமிழில் பாரதியிலும் பாரதிதாசனிலும் அவருடைய வாரிசுகளிடத்திலும் கற்பனாவாத்ததின் செல்வாக்கைக் காணலாம். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே கற்பனாவாதக் கவிதைகளுக்கு நல்ல உதாரணங்களாகும்.


இதில் எதை அல்லது எவற்றைத் தற்போதைய இலங்கைக் கவிஞர்கள் கையாள்கிறார்கள்?


இதில் ஒன்றைத் தனித்துக் குறிப்பிட முடியாது. கவிதையைப் பொறுத்த வரை இன்று இவையெல்லாம் தனித்தனிக் கோட்பாடுகளாகச் செயற்படுவதாகக் கூறமுடியவில்லை. இவை எல்லாவற்றின் செல்வாக்கும் வெவ்வேறு அளவில் கவிஞர்களிடத்தில் செயற்படுவதாகத் தான் தோன்றுகின்றது. கற்பனாவாதம், யதார்த்தவாதம் ஆகியவற்றின் கலவையைப் பல கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது. சோலைக்கிளியின் கவிதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.


தலித் என்பது எந்த மொழியிலிருந்து வந்த சொல்? தலித் இலக்கியம் என்றால் என்ன?


இது மராட்டி மொழிச் சொல் என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்கள், குறிப்பாக சாதிகாரணமாக ஒடுக்கப்பட்டவர்களைச் சுட்ட இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. தலித் இலக்கியம் என்பது சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய, அவர்களின் விமோசனம், விடுதலை பற்றிய இலக்கியமாகும். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இந்திய மொழிகள் பலவற்றில் தலித் இலக்கியம் பெருவளர்ச்சி பெற்றள்ளது.இலங்கையில் தலித் இலக்கியத்தில் உள்ளடக்கக் கூடிய படைப்புகள் உள்ளனவா?


நிறைய உள்ளன. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற சொல் பிரபலமாக முன்னரே, 1950 களின் பிற்பகுதியிலிருந்து இலங்கையில் இத்தகைய இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்பன படைக்கப்பட்டுள்ளன. ஆயினும், அவை தலித் இயக்கியம் என அழைக்கப்படவில்லை.பொதுவாக, முற்போக்கு இலக்கியம் என்றே அழைக்கப் பட்டன.கே.டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கம்,தெணியான் போன்ற பலர் இத்தகைய இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.ஈழத்து இலக்கியத்தில் பஞ்சமர் இலக்கியம் பற்றிப் பேசப்படுகிறதே, இதைப்பற்றிச் சற்று விளக்க முடியுமா?


தலித் இலக்கியம், பஞ்சமர் இலக்கியம் இரண்டும் ஒன்று தான். பஞ்சமர் என்பது, தலித் என்பது போல் சாதி காரணமாகத் தாழ்த்தப்பட்ட சமூகப் பிரிவினரைச் சுட்டும் ஒரு யாழ்ப்பாண வழக்குச் சொல்லாகும். யாழ்ப்பாணத்தில் இலங்கையின் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை விட சாதிப் பாகுபாடும் சாதி ஒடுக்கு முறையும் அதிகம். அவ்வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே இத்தகைய இலக்கியங்கள் அதிகம் எழுந்தன.தற்கால யுத்த சூழ்நிலையில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளதாகப்பொதுவாக உணரப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இலக்கிய உலகில் ஈழத்து இலக்கியத்துக்கு எத்தகைய இடத்தைப் பெற்றுத் தரும் என நீங்கள் கருதுகிறீர்கள்?


கடந்த சுமார் இருபது தசாப்தங்களில் ஈழத்து இலக்கியம் ஒரு புதிய பரிமாணம் பெற்றுள்ளது என்பது உண்மைதான்.இன முரண்பாடும் யுத்தமும் தொடரும் சூழலில் சமூக ரீதியான அடக்கு முறை தீவிரமடைவதும், தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் எனபன தீவிரமாகப் பாதிக்கப்படுவதும் தொடர்ச்சியாக நிகழும்போது இலக்கியம் இந்த நிலைமைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது தவிர்க்க முடியாதது. உலகமெங்கும் இத்தகைய சூழல் நிலவும் நாடுகளிலெல்லாம் இதனைக் காண்கிறோம். இதற்கு இலங்கை விலக்கல்ல. சமூக அடக்குமுறைக்கு எதிராகவும் , தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன மீறப்படுவதற்கு எதிராகவும் குரல்கொடுக்கும் இத்தகைய இலக்கியத்தை எதிர்ப்பு இலக்கியம் (Protest literature) என அழைப்பர். மூன்றாம் உலக நாடுகளான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் இன்றைய இலக்கியம் பெரிதும் எதிர்ப்பு இலக்கியமேயாகும். பலஸ்தீன இலக்கியம் இதற்கு நல்ல உதாரணமாகும். இன்றைய ஈழத்து இலக்கியம் இந்த நெறியிலேயே செல்கின்றது.

மூன்றாம் உலகின் எதிர்ப்பு இலக்கியத்தில் ஈழத்து இலக்கியத்துக்கும் குறிப்பாகக் கவிதை இலக்கியத்துக்கு ஒரு முக்கிய இடம் இருக்கும் என்றே கருதுகிறேன்.


இலக்கிய உலகில் 'நவீனத்துவம்' என்ற குறிப்பிடுகிறார்களே, நவீனத்துவம் என்பது பற்றி விளக்குவீர்களா?


தமிழ் இலக்கிய உலகில் நவீனத்துவம் என்ற சொல் ஒரு திட்டவட்டமான பொருளில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. ஆங்கிலத்தில் Modernity, Modernism ஆகிய சொற்கள் வழக்கில் உள்ளன.இவை இரண்டும் பொருளில் வேறுபட்டவை. Modernity என்பது தற்காலத்துக்குரியது, புதுமையானது, பாரம்பரிய மரபு வழியிலிருந்து வேறுபட்டது என்ற பொருள் தரும். இதனை நவீனத்துவம் எனலாம். Modernism என்பது இந்த நூற்றாண்டின் முன் அரைவாசியில், குறிப்பாக இரண்டு உலக யுத்தங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கு நாடுகளில் தோன்றிய ஒரு கலாசாரக் கொள்கையாகும். கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம் போன்ற துறைகளில் புதிய வெளிப்பாடடு வடிவங்களைத் தேடிய, அவற்றைத் தத்துவ ரீதியாக நியாயப் படுத்திய ஒரு கலாசாரக் கொள்கையாக நாம் இதனை விளக்கலாம். இக் கொள்கையை நவீனவாதம் எனத் தமிழில் கூறுவது பொருத்தமாகும். ஆயினும், நவீனத்துவம் என்ற சொல்லாலேயே இவ்விரண்டையும் நாம் சுட்டுகிறோம். அதனால் சில மயக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. நவீனவாதம், நவீனத்துவம் என்பவற்றுக்கிடையே உறவு உண்டு எனினும் இவை இரண்டும் வேறுபட்டவை.

மேற்கு நாடுகளில் நவீனத்துவம் கைத்தொழிற் புரட்சியோடு ஆரம்பிக்கின்றது. கைத்தொழிற் புரட்சி பாரம்பரிய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பைப் பெரிதும் மாற்றியமைத்தது. சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை உருவாக்கியது. அரசியல், நீதித்துறை, ஒழுக்கவியல், தத்துவம் ஆகியவற்றில் இது பெரு மாற்றங்களைக் கொண்டு வந்தது. கலை இலக்கியத் துறைகளிலும் புதிய பொருள், புதிய வடிவங்கள் என்பன தோன்றின. இவை பழைய மரபுகளிலிருந்து (Tradition) பெருமளவு மாற்றமடைந்த நவீனத்துவத்தின் சில முக்கிய அம்சங்களாகும். தமிழில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நவீனத்துவத்தின் அம்சங்கள் வெளிப்படத் தொடங்கின. ஆங்கிலேயர் இங்கு அறிமுகப்படுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவுகளே இவை. இலக்கியத் துறையில் நவீனத்துவத்தின் வெளிப்பாடாக 19ம் நூற்றாண்டின் இறுதியில் நாவல்கள் தோன்றின.பாரதியின் வருகையோடு கவிதையில் நவீனத்துவம் அறிமுகமாகியது. அதே காலப் பகுதியில் சிறுகதை இலக்கியம் தோன்றியது. கலை இலக்கியத்தில் யதார்த்தவாதம் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

இரண்டு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மேலைத் தேய முதலாளித்துவ சமூகங்களில் ஏற்பட்ட துரித வளர்ச்சியும் சிக்கல்களும் கலை இலக்கியத்தில் நவீனவாதச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. யதார்த்தவாதப் போக்கிலிருந்து வேறுபட்ட imagism, cubism, surrealism போன்ற கலைமுறைகள் தோன்றின. நவீன ஓவியம் (modern art), புதுக்கவிதை (new poetry) போன்றவையும் நவீனவாதத்தின் வெளிப்பாடுகளேயாகும். கடந்த கால் நூற்றாண்டுக்குச் சற்று அதிகமான காலப்பகுதியில் மேற்குலகில் பண்பாட்டுத் துறையில் பின்னவீனவாதம் (Post Modernism) பற்றிப் பேசப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழிலும் இதன் தாக்கத்தைக் காண்கிறோம்.பின்னவீனவாதத்தின் முனைப்பான அம்சங்கள் எவை எனக்கூறுவீர்களா?


பின்னவீனவாதம் அலசியல், தத்துவம், பண்பாடு போன்ற பல துறைகளிலும் இதுவரை வலுவுடன் விளங்கிய கொள்கைகள் எல்லாவற்றையும் கேள்விக்கிடமாக்குகின்றது. உலகளாவிய கொள்கைகள் என்று எவையும் இருக்க முடியாது எனக் கூறுகின்றது. அவற்றையெல்லாம் பெருங்கதையாடல் (Mata narative) என்று நிராகரித்து விடுகின்றது. குழுத் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இலக்கியத் துறையில் பிரதிக் கோட்பாடடுக்கு முதன்மை கொடுக்கின்றது. இலக்கிய ஆசிரியரின் முக்கியத்துவத்தை நிராகரிக்கின்றது. ஆசிரியனின் மரணத்தை றோலன் பார்த் என்ற பிரான்சிய பின்னவீனச் சிந்தனையாளர் முதன் முதல் அறிவித்தார். ஒரு படைப்பு உருவாகிய பின் ஆசிரியரனின் ஆளுமைக்கு அங்கு இடமில்லை என்பது இதன் பொருள். வாசகனே இங்கு முக்கியத்தவம் பெறுகிறான். ஒரு இலக்கியப் பிரதியைப் படித்து வாசகன் என்ன பொருள் கொள்கின்றானோ அதுவே அப்பிரதியின் பொருள். அவ்வகையில்
ஒரு பிரதிக்குத் திட்டவட்டமான பொருள் ஒன்று இருக்க முடியாது. ஒவ்வொரு வாசகனும் ஒரே பிரதியைப் படித்து வெவ்வேறு பொருள் கொள்ள முடியும். ஆகவே, ஒரு பிரதியின் பொருள் முடிவற்றது என்றெல்லாம் பின்னவீனவாதம் கூறுகின்றது. பின்னவீனவாதத்தைப் பொறுத்த வரை கம்பராமாயணமும், கல்கியின் சிறுகதை ஒன்றும், ஒரு காதல் கடிதமும், ஒரு சிறு துண்டுப் பிரசுரமும் பிரதிதான். பிரதி என்ற வகையில் இவை தம்முள் சமமானவை. அவ்வகையில், இலக்கியத் தரம், இலக்கிய மேன்மை என்பவற்றுக்குப் பின்னவீன விமர்சனத்தில் இடம் இல்லை எனலாம். ஜனரஞ்சக இலக்கியம், உயர் இலக்கியம் என்ற வேறுபாட்டைப் பின்னவீனவாதம் கடந்த செல்கின்றது.இலங்கைப் படைப்புகளின் உணர்வுத் தளம் சுய அனுபவங்களைக் கூற விளைவதாகவே பொதுவாகக் காணப்படுகின்றது.இதனால் இலக்கியம் நவீனத்துவம் பெற முடியுமா?


சுய அனுபவங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனித அனுபவத்தின் அர்த்தத்தைக் காண விளைவது உயர்ந்த கலையின் முக்கிய பண்பாகக் கொள்ளலாம். இது நவீனத்துவத்தின் முக்கிய அம்சமே. ஆனால், நீங்கள் சொல்வது போல் இலங்கைப் படைப்புகளின் இதுவே பிரதான போக்கு என்று எனக்கத் தோன்றவில்லை.இங்கு சுய அனுபவங்களை விட கருத்துக்களை அல்லது கொள்கைகளை முதன்மைப் படுத்தும் போக்கே முனைப்பாகத் தெரிகின்றது.


இலக்கியம் நவீனத்துவம் பெற வேண்டுமாயின் எத்தகைய உத்திகளைப் பயன்படுத்தலாம்?


நவீனத்துவம் உத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. உள்ளடக்கமே பிரதானமானது. உள்ளடக்கம் காலத்தைப் பிரதிபலிப்பதாக, அதாவது நம் காலத்துககுரியதாக இருத்தல் நவீன இலக்கியத்தின் பிரதான பண்பாகும். இன்றைய மனிதர், இன்றைய வாழ்க்கை, இன்றைய நடைமுறை ஆகியவற்றை இன்றைய நோக்கு நிலையில் அணுகுவது முக்கியமானது. தற்காலத்தில் எழுதப்படுவதனாலேயே ஒரு இலக்கியம் தற்காலத்துக்குரியது, நவீனமானது ஆகாது. அதில் தற்காலத்தின் குரல் கேட்க வேண்டும். உதாரணமாக, பாரதியின் கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலான பாரதியின் கவிதைகளில் இந்த நூற்றாண்டின் குரலைக் கேட்கிறோம். பாஞ்சாலி சபதம் மகாபாரதத்தி்ல் இருந்து எடுக்கப் பட்ட பழைய கதையே. ஆனாலும் அதில் கூட அடிமைப்பட்ட இந்தியாவின், அடிமைப்பட்ட பெண்களின் குரலையே கேட்கின்றோம். அதனாலேயே பாரதி நவீன கவிஞன் ஆகிறான். அவன் கையாண்ட பாட்டு வடிவங்கள் பெரும்பாலும் பழையவை. ஆனால், பொருள் புதிது, சுவை புதிது, சொற்புதிது.

அதனாலேயே அவனது கவிதைகள் நவ கவிதை அதாவது நவீன கவிதை எனப்படுகின்றன.உத்திகள் ஒவ்வொரு இலக்கிய வடிவத்துக்கும் ஏற்ப வேறுபடலாம்.படைப்பாளியின் நோக்கமும் தேவையுமே அதைத் தீர்மானிக்கும்.


தற்கால இளம் படைப்பாளிகளுக்குக் குறிப்பாக கவிதை எழுதுவோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?


வாசிப்பையே நான் அதிகம் வலியுறுத்துவேன். நமது பெரும்பாலான இளம்படைப்பாளிகள், கவிஞர்கள் அதிகம் வாசிப்பதில்லை. பரந்துபட்ட வாசிப்பு நம் அனுபவத்தை அகலப்படுத்தும். இலக்கிய வடிவங்களிலும் மொழியிலும் ஆழ்ந்த பயிற்சியைத் தரும். இத்தகைய இலக்கியத் தாடனமும் மொழிப் பயிற்சியும் இல்லாமல் சிறந்த இலக்கியங்களைப் படைப்பது மிகவும் அரிது. கவிதை எழுதுபவர்களுக்கு பழைய கவிதைகளிலும் புதிய கவிதைகளிலும் பரந்த வாசிப்பு அவசியமாகும். பிறமொழிக் கவிதைகள்படிக்க முடிந்தால் இன்னும் பயனுடையது.மொழிதான் இலக்கியத்தின் கருவி. தன் கருவி பற்றிய அறிவும் அதை லாவகமாகக் கையாளும் திறனும் இல்லாமல் ஒருவர் இலக்கியம் படைக்க முடியாது. இன்று கவிதை என வருகின்ற அனேகமான ஆக்கங்கள் இதனையே நிரூபிக்கின்றன.

(இந்நேர்காணலை ஒருங்கிணைத்துத் தந்த பிரதி அதிபர் ஏ.ஆதம் லெவ்வை அவர்களுக்கும், துணைபுரிந்த திருமதி நுஃமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்)
Thursday, September 10, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்


(பகுதி-1)

(இந்நேர்காணல் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையினால் வருடாந்தம் வெளியிடப்படும் "கலைஅமுதம்"-99 மலரில் இடம்பெற்றது.)

இலங்கையில் 90களின் கவிதைப் போக்கு எவ்வாறு உள்ளது?


ஓரளவு ஆரோக்கியமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். பெருமளவான எண்ணிக்கையில் இளைஞர்கள் கவிதை எழுதத் தொடங்கியுள்ளார்கள். இவர்களுட் பலரிடம் சமூகப் பிரக்ஞை கூர்மையாக உள்ளது. யுத்த அவலம், இன நல்லுறவு, எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உணர்வு போன்றவற்றைப் பலர் தம் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பெண்களின் குரல் கவிதையில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.பல்வேறு மேலை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களின் அனுபவங்கள் கவிதையில் பதிவாகியுள்ளன. உலகக் கவிதைகளைக் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி ஓரளவு விரிவடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க இளம் கவிஞர்களின் கவிதைகள் சில தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பழைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களுட் பலர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டுள்ளனர்.அபாரமான சாதனைகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் நமது கவிதை தேங்கிப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. அவ்வகையில் தொண்ணூறாம் ஆண்டுகள் திருப்தி தருகின்றன.இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?


90 களில் நம்பிக்கை ஊட்டக் கூடியவர்களாக முன்னணிக்கு வந்த சிலரின் பெயர்கள் உடன் நினைவுக்கு வருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன், அஸ்வகோஸ், ஆத்மா, ஓட்டமாவடி அறபாத், வாசுதேவன், சுல்பிகா. இவர்கள் ஒவ்வொரு தொகுதியையாவது வெளியிட்டுள்ளனர்.நம்பிக்கை தரும் தொகுதிகள் இவை.
கவிதையில் படிமம் , குறியீடு என்பன எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன?இன்று கவிதை பற்றிப் பேசுபவர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப் படும் ஒரு சொல் படிமம். உவமை, உருவகம், குறியீடு என்பன போல் படிமம் என்பதும் கவிதையின் ஓர் உறுப்பு என்ற வகையில் தான் பலரும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.இது தவறான விளக்கமாகும். உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமங்கள் தான். படிமத்தின் வெவ்வேறு வகைகள் இவை. படிமம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு பொதுச் சொல்.Image, Imagery என்னும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் இது. 1960 கள் வரை இதனைச் சுட்ட தமிழில் கற்பனை என்னும் சொல்லைப் பயன் படுத்தி வந்தார்கள். 1960 களில் எழுத்து பத்திரிகை மூலம் தமிழில் புதுக் கவிதை இயக்கம் வளர்ச்சியடைந்த போது, அதில் சம்பந்தப் பட்டவர்கள் கற்பனை என்பதற்குப் பதிலாகப் படிமம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கவிதை விமர்சனத்தில் இப்போது இச்சொல்லே பெருவழக்காகி விட்டது. கற்பனை என்பதை விட படிமம் என்பது பொருத்தமான சொல்லாகவே தோன்றுகின்றது. சொற்களால் மனதில் தோற்றுவிக்கப் படும் காட்சி அல்லது விம்பமே படிமமாகும். இதனை அகத்தில் தோன்றும் சொல்லோவியம் என்றும் கூறலாம. கவிதை சொற்கள் மூலம் நம் மனதில் பல்வேறு சித்திரங்களைத் தோற்றவிக்கின்றது. இத்தகைய சொற் சித்திரங்கள் மூலமே கவிதை நம்முடன் பேசுகிறது. தன் உட் பொருளை நமக்கு உணர்த்துகின்றது. வேறு வகையில் சொன்னால் கவிதை படிமங்கள் மூலமே நம்முடன் பேசுகின்றது. படிமங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒன்று தான் குறியீடு. உவமை, உருவகம் என்பனவெல்லாம் படிமத்தின் வெவ்வேறு வகைகள். எல்லா வகையான அணிகளும் படிமங்கள் தான். படிமம் என்பது கவிதையின் மொழி எனலாம். அந்தளவுக்குக் கவிதையில் படிமம் முக்கியமானது. இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம்.

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள் - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை.

இது பாரதி தாசனின் கவிதை. இக் கவிதையைப் படிக்கையில் நம் மனதில் ஓவியம் போல் ஒரு காட்சி தோன்றுகின்றது. தாமரைப் பூக்கள் மலர்ந்த குளம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகிய இளம் பெண். அவளைக் கண்டு மனம் பறி கொடுக்கம் ஓர் இளைஞன். இந்தக் காட்சியையே இக் கவிதை வரிகள் சித்திரிக்கின்றன. இந்தச் சித்திரம் முழுவதுமே ஒரு படிமம்தான். இதைக் கூறு படுத்தி மூன்று தனித்தனிப் படிமங்களாகவும் பார்க்கலாம்.

1.தாமரை பூத்த குளம்.
2. முகத் தாமரை தோன்ற முழுகிடும் கோமளவல்லி.
3. அந்தக் கோமள வல்லியைக் கண்டு உள்ளம் கொள்ளை கொடுக்கும் குப்பன்.

இவ்வகையிலே ஒரு கவிதையில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு தொடரும் கூடப் படிமம்தான். இக் கவிதையில் வரும் தாமரை என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். முதல் வரியில் இச்சொல் அதன் நேர் பொருளில் நீர் வளர் தாவரமான தாமரையையும் அதன் பூவையும் சுட்டுகிறது. இதனை ஒரு நேர் படிமம் (Direct Image) எனலாம். அடுத்தவரியில் முகத் தாமரை என உருவகப் பொருள் தருகிறது. இதனை உருவகப் படிமம் (Metaphorical Image) எனலாம்.

கம்பராமாயணத்தில் வரும் வேறு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இராமன் நடந்து வருவதை மிதிலை நகரத்துப் பெண்கள் சன்னல்களைத் திறந்து மலர்ந்த முகத்துடன் எட்டிப் பார்க்கின்றார்கள். இதைக் கம்பன் பின்வருமாறு சித்திரிக்கின்றான்.
"சாளரம் தோறும் பூத்தன தாமரை மலர்கள்"
சன்னல்களில் தாமரை பூக்காது. இங்கு தாமரை பெண்களின் மலர்ந்த முகத்துக்குக் குறியீடு. இதனைக் குறியீட்டுப் படிமம் (Symbolic Image) எனலாம். இவ்வகையில் உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமத்தின் வெவ்வேறு வகைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)
Saturday, August 1, 2009

மலையக இலக்கியமும் இசை பிழியப்பட்ட வீணையும்
இந்த நூலைப் பற்றி எழுத முன்னர் ‘மலையகம்’ , ‘மலையக இலக்கியம்’ என்பன தொடர்பில் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘மலையகம்’ என்பது தரைத் தோற்ற அடிப்படையில் இலங்கையின் மலைப் பிரதேசங்களைக் குறிப்பதாக இருப்பினும் ‘மலையக இலக்கியம்’ எனும் போது இந்த வரையறை பொருந்திவராமல் உள்ளது.

காலனித்துவ ஆட்சியின் போது, பெருந்தோட்டத் தொழிலுக்காக இலங்கைக்குக் கொண்டுவரப் பட்ட இந்திய வம்சாவழித் தமிழரே மலையக மக்களாவர். மலையகத்தில் வாழ்வோரை மாத்திரமன்றி மேல், வடமேல், தென் மாகாணங்களில் இறப்பர் தோட்டத் தொழிலைச் சீவனோபாயமாகக் கொண்டவர்களையும் மலையகத்தைப் பூர்விகமாகக் கொண்டு தொழில் நிமித்தம் மலையகத்துக்கு வெளியே வாழ்பவர்களையும் ‘மலையக மக்கள்’ என்ற பதம் உள்ளடக்குகிறது.

எனவே, ‘மலையக இலக்கியம்’ எனும் போது தனியே தேயிலைத் தோட்ட மக்களின் குரலாக அன்றி விரிந்த தளம் கொண்டே நோக்கப்பட வேண்டியுள்ளது. எனினும், மலையக இலக்கியத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி,பொருளாதார,வாழ்வியல் பிரச்சினைகளே முனைப்புப் பெற்றுத் திகழ்வதாயுள்ளன.

மலையக இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு மிகப் பரந்த ஆய்வு தேவைப் படுகிறது. மலையகப் பெண்களின் கவிதைகள் எந்தளவுக்குத் தமது பிரச்சினைகளின் அடியாழங்களைத் தொட்டுள்ளன? என்ற வினாவுக்கு விடை தேடுவதும் இந்தத் தொகுப்பினு}டாகச் சாத்தியப் படுவதாயில்லை. இந்த “இசை பிழியப் பட்ட வீணை” யிலுள்ள கவிதைகள் எவ்வளவு தூரம் தமது வாழ்வியல் துயரின் மூலங்களை அணுகியுள்ளன? என்பது பற்றிய சில குறிப்புகளை முன்வைக்க விழைகிறேன்.

“இசை பிழியப்பட்ட வீணை” யில் உள்ள கவிதைகளை மலையகப் பெண்களின் கவிதைகளின் சாரமாகக் கொள்ள முடியாவிட்டாலும் மலையக இலக்கியத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க முடிகிறது. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே பதிலின்றிப் புறந்தள்ளப் பட்டவர்களிடமிருந்து நாம் எவற்றை எதிர்பார்க்க முடியுமோ அவையே இத் தொகுப்பில் விரவிக் கிடக்கிறதெனலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை எடுத்து நோக்கும் பொழுது “கற்கள் -கவண்கள்-தாவீது” தமது பிரச்சினைகளுக்குள் இருந்து வெளிப் பட்ட கவிதையாக உள்ளது. ஒடுக்கு முறையின் மீதான கோபத்தின் வெளிப்பாட்டை இந்தக் கவிதையில் காண முடிகிறது.

“சவால்” கவிதையின் பெண் மலையகத்தை விட்டு வெளியேறி மத்திய கிழக்குக்குச் சென்று உழைக்கிறாள். பின்னர் நாடு திரும்பி மனதுக்குப் பிடித்த துணையுடன் குடும்ப வாழ்வில் இணைகிறாள்.எனினும் மலையக வாழ்வு தான் விட்டோட நினைத்த வறுமைக்குள்ளேயே மீளவும் அவளைச் சிக்கவைத்துள்ளது.

“கற்பகதருக்கள்” கவிதை பெண் சிசுக்களைக் கருவில் வைத்தே கொலை செய்தல், பெண்கள் வல்லுறவுக்குள்ளாதல், விளம்பரப் பொருள்களாக விலை போதல் போன்ற பல விடயங்களுக்கெதிரான கோபத்தை வெளிப்படுத்துகிறது.
“மனிதம் புனிதம் பெறுவது பெண்ணால்
பெண் புனிதம் கெடுவது யாரால்?”
என்ற வரிகள் இந்தக் கவிதையின் மையப் பொருளாக உள்ளதெனலாம்.

“எரியூட்டப் பட்ட தலைப்பு” கவிதை மலையகத்தில் நடந்தேறும்(ஏனைய பிரதேசங்கள் விதிவிலக்கானவையல்ல) இன்னுமொரு அவலத்தைத் தொடுகிறது.

பெண்கள் தமக்குத் தாமே தீயிட்டுக் கொள்வதும் திருமணத்தின் பின்னர் வாய்க்கும் உறவுகளால் தீயூட்டிக் கொல்லப்படுவதும் இது எழுதப்படும் வாரத்தில் கூட மலையகத்தில் நடைபெற்று வருவதை ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

இத்தகைய எரியூட்டல்களுக்கும் தற்கொலைகளுக்கும் மூல காரணமாக ஆணே திகழ்கிறான்.வறுமைக் கோட்டுக்குள் சிக்கி வாழும் பெண்கள் இந்தக் கொடூரத்தைத் தமக்குத் தாமே இழைத்துக் கொள்ள முற்படுவதன் பின்னணி குறித்துப் பேச நாம் மறந்து விடுகிறோம்.

இந்தப் பெண்கள் மரணத்தை நாடியதற்கான காரணங்கள் கூட பெருமளவில் சிக்கலானவை அல்ல: தீர்வு காண முடியாதவையும் அல்ல.எனினும் பெண் வீழ்ந்து கிடக்கும் இருள் கிடங்கு அவள் வெளியேறி வருவதற்கான ஒளியை வழங்காமல் இருப்பதால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள்.

“உன்னில் இல்லாத நான்” கவிதையில் மலையேறி, கொழுந்து சுமந்து, மாலையில் வீடு வரும் இளம் மனைவி தனது கணவனிடமிருந்தாவது அன்பு கிடைக்காதா? என எதிர்பார்க்கிறாள். அவன் மனதிலும் ஈரமில்லை.வறுமையின் கோடுகள் இல்லத்தினுள் மட்டுமல்ல அவள் ஆன்மாவுக்குள்ளும் இழையோடிக் கிடக்கின்றன.

“நான் தாயா?கூலியா?” கவிதை அரசாங்கத்தின் நீர் மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் தலவாக்கலை நகரமும் நீரில் மூழ்கடிக்கப் படப் போவதைப் பதிவு செய்துள்ளது.

தலை நகரில் வாழும் மகன் குடும்பத்துக்கான அவனது பொறுப்புக்களை உதாசீனப் படுத்தி வாழ்வதைப் போலவே தொழிற் சங்கத் தலைவர்களும் தமது பொறுப்புக்களைக் கண்டு கொள்ளாமல் வாழ்வதாகத் தாய் கூறுகிறாள்.தனது மூதாதையர் வாழ்ந்த பூமியைத் தண்ணீரில் மூழ்கடித்து அந்த மண்ணின் புதல்வர்களைப் பிடுங்கியெறியும் திட்டத்தை அறிந்த பின்பும் எதிர்வினைகள் ஏதுமின்றி இருப்பதை எண்ணிக் கோபப்படுகிறாள்.

மலைகளைக் காப்பாற்றச் சென்ற லட்சுமணன் போல தன் மகனும் வீரனாகத் திகழ வேண்டும் என எதிர்பார்த்தவளுக்கு அவனது அலட்சியம் கோபத்தை வரவழைக்கிறது.தாயின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளாத மகன் கூடத் தன்னைச் சாதாரண கூலித் தொழில் புரிபவளாகவே கருதுவதை எண்ணிக் கவலையடைகிறாள்.

“என் அன்னையும் இப்படித்தான்” கவிதை மலையகத் தாயொருத்தியின் தியாகங்களைப் பேசுகிறது.அவள் தான் வயிறார உண்ணவோ நல்ல ஆடைகளை அணியவோ செய்யாது தனது மகளைக் கற்றவளாக்குவதற்காக அரும்பாடுபடுகிறாள்.அவள் சொல்லொணாத் துயரங்கள் சுமந்து பனியிலும் பட்டினியிலும் உழன்று தனது மகளின் உயர்வுக்காகத் தன்னையே தியாகம் செய்கிறாள். அவளைச் சாறு பிழிந்து வழங்கப் படும் அற்பக் கூலியை நம்பியே வாழ வேண்டிய அவலத்தைக் கவிதை சொல்கிறது.தினமும் பாடுபட்டு உழைத்த பொழுதும் பட்டினியில் வாழ வேண்டிய கொடுமையான நிலைமை பதிவு செய்யப் பட்டுள்ளது.

“து}ங்காத இரவில் நீங்காத நினைவு” கவிதையும் கொழுந்தெடுக்கும் மக்களின் அன்றாட வாழ்வுத் துயரங்களைப் பதிவு செய்கிறது. “துட்டுப் பணம் பெற்று தம் துயர் துடைக்க” வேண்டுமென்பதே ஆண்டாண்டு காலமாக அவர்களுக்குச் சொந்தமாக்கப் பட்ட அநீதியாகித் தொடர்வது கூறப்படுகிறது.

“தொழிலாளிப் பெண்ணின் சோக கீதம்” கவிதையில்
“மாலை ஆனதும்
கூடையை முதுகிலும்
குடும்ப பாரத்தை மனதிலும்
சுமந்து கொண்டு
கால் கடுக்க நடக்கிறாள்
வீட்டை நோக்கி”
“பகல் முழுவதும் பட்டினியால்
வாடும் குழந்தைகள்
சாப்பாடில்லாவிட்டாலும்
சாராயமே வாழ்க்கையாகிவிட்ட கணவன்”
என்ற வரிகள் போதும் பெண்ணின் துயரத்தை உணர்த்த.முதலில் அவள் தன் கால்களைச் சுற்றியுள்ள துயர்களில் இருந்தே விடுதலை பெற வேண்டியுள்ளது.ஆனாலும் அவள்
“பொறுப்பில்லா கணவனுக்கு
கள்ளும்
குற்றமில்லாக் குழந்தைகட்கு
கல்வியும்
பெற்றுக் கொடுக்க”
உழைத்துக் கொண்டிருக்கிறாள்.அவளைப் பிணைத்துள்ள கண்ணிகளில் இருந்து அவளால் தப்பிக்க முடியாதவளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

“விடியலுக்காகக் காத்திருந்த அன்று” கவிதையானது பேரினவாதிகளால் வேட்டையாடப் பட்ட மலையக மக்களைப் பற்றியும் மக்களின் துயர் துடைக்காது தமது சுய நலன்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மலையகத் தலைமைகள் பற்றியும் பேசுகிறது.

“புதிய அறிமுகம்” கவிதையில் இன்றைய மலையக வாழ்வின் இன்னுமொரு முகம் காட்டப்பட்டள்ளது.குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தந்தையும் மகனும் தன் இச்சைகளின் வழி போய்விட மனைவியும் பிள்ளைகளும் நிர்க்கதியுற்று வாழ நேர்கிறது.இத்தகைய இடர்களில் இருந்து மீள வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைத் தேடிச் செல்லும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.கல்வி கற்ற பின்னரும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்ற பின்னரும் தமது பெற்றோரையும் சமுகத்தையும் மறக்கும் பிள்ளைகளும் மக்கள் ஆதரவைப் பெற்றுப் பதவிகளையடைந்து கொண்ட அரசியல்வாதிகள் பின்னர் தம்மை ஆதரித்து நின்ற மக்களைத் து}க்கியெறியும் போக்கும் என நம்பிக்கையளிக்காத ஒரு மக்கள் தொகுதியே இன்றைய மலையகம் என இக்கவிதை விபரித்துச் செல்கிறது.

“ஏழைகளின் ஓலம்” கவிதை, தேயிலைத் தோட்டங்கள் தனியார் கைகளுக்கு மாறிய பின்னர் காலங் காலமாக எட்டடிக் காம்பறாக்களுக்குள் தேயிலையையே நம்பி வாழ்ந்த ஏழைத் தொழிலாளருக்கு இருந்த அற்ப வருமானமும் பறிபோனதைப் பதிவு செய்கிறது.தேயிலைத் தோட்டங்கள் துண்டாடப்படுவதும் தொழில் வாய்ப்புக்களை மக்கள் இழக்க வேண்டியிருப்பதுவும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் பயனளிக்காமல் உழைப்புக்கு வேறு வழியும் இன்றி பட்டினியால் வாடும் மக்களின் துயரமும் இக் கவிதையில் எடுத்துக் காட்டப் படுகிறது.

“புதிய தாலாட்டு” எனும் தாலாட்டுப் பாடலில் கூட தாய் அனுபவிக்கும் துயரங்களே அடுக்கடுக்காக வருகின்றன. மலையக வாழ்வின் சீரழிவுக்கு குடிப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஆண்களும் பிரதான காரணமாக இருக்கின்றனர். அந்தக் குடிதான் அங்குள்ள பெண்களின் மீளாத துயரங்களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறது.தனது குழந்தையாவது தன்னைக் காப்பாற்றாதா? எனத் தாய் ஏங்குகிறாள்.
“உணவு உடை தந்திடுவேன்-நல்
உயர்கல்வி தந்திடுவேன்-என் சொத்தே
நீ எனக்குத் தருவாயோ-நம்
இனத்தின் விடிவுதனை என்றென்றும்
என் கருவறைக் கூலியாய்”
குடிகார அப்பனுக்குப் பிறந்த தன் குழந்தை இனத்துக்கு விடிவெள்ளியாகத் திகழ வேண்டுமெனக் கூறித் தாலாட்டுகிறாள்.

“மலையகச் சிறார்கள்” கவிதையானது மிக முக்கிய கவனிப்பைப் பெற வேண்டிய சிறுவர் சிக்கியுள்ள சீரழிவுகளைப் பட்டியல் இடுகிறது.

அங்குள்ள சிறுவர் அற்பக் கூலிகளாக மாறிவிடும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.மலையகத்தில் மாத்திரமன்றி மலையகத்துக்கு வெளியே கூட்டிச் செல்லப் படும் ஏராளமான மலையகச் சிறார்கள் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு ஊமைகளாக வாழ்கின்றனர் நகரங்களில் வாழ்வோர் வேலைக்காரச் சிறுவர்களாக மலையகப் பிள்ளைகளையே நாடுகின்றனர்.அவ்வப் பொழுது ஊடகங்கள் மூலம் ஓரிரு அவலங்களே வெளிக் கொண்டுவரப் பட்ட பொழுதும் மிக அதிகமான மலையகச் சிறார்கள் சாத்தான்களிடமே சிக்கியுள்ளனர்.

இந்தத் தொகுப்பில் உள்ள 47 படைப்பாளிகளின் கவிதைகளில் இருந்தும் மலையக மக்களின் பிரச்சினைகளின் மையத்தை அணுகியுள்ள சில கவிதைகளை எடுத்து நோக்கியுள்ளேன். இக் கவிதைகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத்தையும் பெண்களையும் மையப் படுத்தியே எழுதப் பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பாலும் பல பிரச்சினைகள் அவர்களை அரித்துக் கொண்டே இருக்கின்றன.

கல்வி , சுகாதாரம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகள் அங்கு புரையோடிப் போயுள்ளன.அங்குள்ள சிறார்களுக்கு முறையாகக் கல்வி வழங்கப் படுவதில்லை.நாட்டின் ஏனைய பிரதேசப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைப்பதுமில்லை.ஆசிரியர் அற்ற பள்ளிக்கூடங்கள், படிப்பதற்கு ஒழுங்கான வகுப்பறைகளோ சூழலோ இன்மை,பள்ளிக் கூடத்தைச் சென்றடைவதில் உள்ள இடர்கள் என ஏராளம் பிரச்சினைகளால் கட்டுண்டவர்களாக மலையகச் சிறார்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் வாழும் லயன்கள் கூட மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.கூறைகள் சிதைவடைந்து சுவர்கள் கரைந்து விழுந்துவிடக் கூடிய இருப்பிடங்களுக்குள் அவர்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.தண்ணீர் வசதி, மலசலகூட வசதி, பாதை,மின்சாரம் என எதுவுமே அவர்களின் வாழ்விடங்களில் இல்லை. அவற்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றர். ஏனெனில் லயன்களைச் சுற்றியுள்ள நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லை. அந்த லயன்களைச் சூழவும் காணப்படும் காட்டுச் செடிகளை வெட்டித் துப்புரவு செய்யும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை.எனவே விச ஜந்துக்களின் தொல்லைகளாலும் அவர்கள் அவதியுறுகின்றனர்.அவ்வாறே மருத்துவ வசதிகள் கூட அவர்களைவிட்டும் தொலைவிலேயே உள்ளன.

தோட்டங்களைத் தனியார்மயப் படுத்திய பின்னர் அங்கு நடைபெறும் சமுக மற்றும் சூழல் சீர் கேடுகள் உக்கிரமடைந்துள்ளன. மக்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதோடு மண்ணரிப்பு ,இருப்பிடங்களை இழத்தல் , சூழல் மாசடைதல் எனப் பல பிரச்சினைகளை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.

மலையக இளைஞர்களில் பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் தலைநகரில் வாழ்ந்து வருகின்றனர். தமது அடையாளத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஆவணங்கள் அனைத்தையும் தம் வசம் வைத்திருந்த பொழுதும் கைது செய்யப் படுகின்றனர்;;;;;; அதன் தொடர்ச்சியாக மலையகத்தில் வாழும் அவர்களது குடும்பமும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறது. இனவாதம் மலையக இளைஞர்களை வகை தொகையின்றி வேட்டையாடி வருகிறது.

இவற்றுக்குச் சமாந்தரமாகவே இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் மக்களின் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.ஏன் இவை தொடர்பான பதிவுகள்; எடுத்துக் கொள்ளப் படவில்லை? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மலையகப் பெண்கள் தம்மைச் சூழவுள்ள சிறு வெளியை கவிதைகளில் பதிவு செய்துள்ளனர்.மலையகப் பெரு வெளியை தமது எழுத்தில் கொண்டு வரும் முயற்சியில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டியுள்ளது.தமது முன்னோர் வாழ்வு நீளவும் அனுபவித்த அவலங்களும் ஏமாற்றங்களும் இந்தப் பெண்களிடத்தே எதிர்ப்புணர்வையும் கோபத்தையும் தோற்றுவித்துள்ளன.பெண்கள் சிந்திக்கத் தொடங்கியிருப்பதையும் அவர்களின் தலை நிமிர்வதையும் அனேக கவிதைகளில் கண்டு கொள்ள முடிகிறது.

இந்தப் படைப்பாளிகளிடம் தமது துயரங்களுக்கு எதிரான கோபம் உள்ளது.அவற்றைக் கவிதையாக்கும் முயற்சியில் மேலும் தம்மை ஈடுபடுத்தினால் இவர்களிடமிருந்து தரமான படைப்புகளை எதிர்பார்க்க முடியும்.வெறும் வார்த்தைப் பிடகடனங்களைத் தவிர்க்க வேண்டியிருப்பதையும் சில படைப்பாளிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

“இசை பிழியப் பட்ட வீணை” தொகுதியின் அட்டைப் படம் ,பக்க வடிவமைப்பு என்பன நேர்த்தியுடன் செய்யப் பட்டிருப்பது நிறைவைத் தருகிறது.தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ள நிழற்படங்களில் அதிகமானவை தேயிலைத் தோட்டங்களையே மையப் படுத்தியுள்ளன.தேயிலைத் தோட்டங்களைக் கடந்தும் மலையகம் விரிந்து செல்வதை நினைவூட்ட விரும்புகிறேன்.

(பனிக்குடம் இதழுக்காக எழுதப்பட்டது)
ஃபஹீமாஜஹான்
2008.01.30

Wednesday, July 15, 2009

“வேட்டைக்குப் பின்"னும் வடபுலத்துக் கவிதைகளும் ! - கவிதை நூல் விமர்சனம்

அறஃபாத்துடைய கவிதைகளைப் பற்றிக் கூற வரும் போது இக்கால முஸ்லிம்களின் வாழ்வையும் அரசியலையும் ஒதுக்கி விட்டுப் பேச முடியாமலுள்ளது. ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் முஸ்லிம்களின் ஆதரவுடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் காலப் போக்கில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு இழைத்த கொடூரங்களை மிஞ்சும் வகையில் தமிழ்ப் பேரினவாதம் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்க்கத் தொடங்கியது.

எமைச் சூழவுள்ள மற்றைய இரு சமூகங்களும் அரசியல்வாதிகளும் எம்மவர்கள் “தூக்கிப் பிடிக்கும்” இந்திய இலக்கியவாதிகளும் தெற்கிலுள்ள முஸ்லிம்களும் கூட முஸ்லிம்களக்கு இழைக்கப் பட்ட அநீதிகள் எதனையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.எமது மக்கள் தாய் நிலங்களிலிருந்து விரட்டப் பட்டதையோ முஸ்லிம்கள் வெட்டப் பட்டும் சுடப் பட்டும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் கொலை செய்யப் பட்டதையோ எமது இனத்துக்காக அரசியலில் போராடிய தலைவனின் படுகொலையையோ கண்டு கொள்ளவில்லை.

போராட்டத்தின் போது ஒதுங்கியிருந்து பின்னர் சமாதானப் பேச்சுக்களில் தமக்குப் பங்கு கேட்டு வருகிறர்கள் என்று எமைப் பகிரங்கமாக ஒதுக்கிய போதும் எமக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியைக் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறே எமது கவிதைகளில் தேங்கியுள்ள கண்ணீரையும் வேதனைகளையும் கூடக் கண்டு கொள்ளவில்லை.

தற்கால ஈழக் கவிதைகள் எனும் பொழுதும் விடுதலைப் போருக்கு ஆதரவாக எழுதப் பட்ட ஒரு சிலரது கவிதைகளைத் தான் தமிழ் விமர்சகர்களும் இந்திய எழுத்தாளர்களும் (ஈழத்துக் கவிதைகளைப் பற்றித் தெரிந்தவர்கள்) முதன்மைப் படுத்துகின்றனர். பெரும்பாலும் அவர்களது பட்டியலில் தமிழ்க் கவிஞர்களின் பெயர்களே வாய்ப்பாடுகளாக வந்து விழும். அதற்கப்பால் ஒன்றுமில்லை என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம். எனினும் “மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” தொகுதியை அவர்களின் கருத்துக்களின் முன் வைத்தால் அவை தலைகீழாக மாறும்.

“மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த நூல் பற்றி யாரும் கதைக்கவில்லை. நமது மூத்த இலக்கியவாதிகள் அந்தத் தொகுதியை விரிவான தளங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். விமர்சனங்களினூடாகவும் பல்வேறுபட்ட கருத்துப் பரிமாற்றங்களினூடாகவும் அதில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் குறித்துத் தமிழக் கவிதையுலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். அவ்வாறு நிகழாதது துரதிர்ஷ்டமே. அரசியல், இலக்கியம் இரண்டுமே மக்கள் மயப் படுத்தப் படாதவரை அதன் வெற்றியும் உயிர்த்துடிப்பும் எவ்வளவு தூரம் சாத்தியப் படும்?

“மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” தொகுதியில் உள்ள முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறஃபாத் திகழ்கிறார். இவரது இரண்டாவது தொகுதியான “வேட்டைக்குப் பின்” இனவாதத்தால் மேற்கொள்ளப் பட்ட அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புக்களையம் துணிந்து சொல்வதாக அமைகிறது. 2000 களில் வெளிவந்த சிறந்த தொகுதிகளில் ஒன்றாக இதனையும் கருதலாம். சிறுகதைகளினூடாக மாத்திரமன்றிக் கவிதைகளினூடாகவும் தனது படைப்பாளுமையை அறஃபாத் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 1998 முதல் 2004 வரை எழுதப் பட்ட கவிதைகள் கால வரிசையின் படியே தொகுதியில் இடம் பெற்றுள்ளன. யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளையும் விடவும் யுத்த நிறுத்தத்துக்குப் பின்னர் எழுதிய கவிதைகளில் எதிர்ப்பு மேலோங்கியுள்ளதைப் பொதுவாக அவதானிக்க முடிகிறது.

தனது மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளின் சாட்சியங்களாக இவர் தனது கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். துயரம் தோய்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளினதும் பிரக்ஞை பூர்வமான பாதிப்பை வாசகர்களிiயே தோற்றுவிப்பனவாக இவரது பல கவிதைகள் அமைந்துள்ளன.

தமை நசுக்கும் மனிதர்கள் குறித்துத் தமிழ்க் கவிஞர்கள் அவர்களது கவிதைகளுடாகவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆயதங்களுடாகவும் பேசினர். போராட்டம் முனைப்புப் பெற்ற ஒரு கால கட்டத்தில் அவர்களது கவிதைகளும் வீரியத்துடன் வெளிப் பட்டன. தற்போது பெரும்பாலான தமிழ்ச் சகோதரர்களின் கவிதைகளில் யுத்தத்துக்கான ஆதரவும் நியாயங்களும் தணிந்து போயுள்ளன. அவர்களது இழப்புகள் பற்றி, சமாதானமற்ற சமாதானம் பற்றி, சமூகப் பிறழ்வுகள் பற்றி, இடப் பெயர்வுகள் விளைவித்த துயரங்கள் பற்றி, புதிய வாழ்வு குறித்த நம்பிக்கைகள் பற்றிப் பேசுபவையாக அவர்களது கவிதைகள் அமைந்துள்ளன.

காலமாற்றம் இப்போது எதிர்ப்பை வெளிப் படுத்தும் எழுதுகோலை முஸ்லிம் கவிஞர்களிடம் கொடுத்துள்ளது. தற்காலத்தில் இயங்கும் முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்த அளவிலான கவிதைகள் சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பெருமளவிலானவை தமிழ்ப் பேரினவாதத்தால் நேர்ந்த அட்டூழியங்கள் பற்றியும் அவற்றுக்கு எதிராகவும் எழுதப் பட்டு வருகின்றன.இன்று பேசப்படும் முஸ்லிம் கவிஞர்களும் கவிதையின் தளமும் கிழக்கைச் சார்ந்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன ஒடுக்கல் என்பது பாதிக்கப் படும் எந்த இனத்துக்கும் ஒரே முகத்துடனேயே வந்து சேர்கிறது. சிங்கள இனவாதம் அப்பாவித் தமிழருக்கும் தமிழ் இனவாதம் அப்பாவி முஸ்லிம்களுக்கும் இன்னல்களைக் கொடுத்த வேளை அவர்கள் எதிர் கொண்ட வேதனைகளும் இழப்புகளும் வேறுபட்டிருக்கவில்லை. அஸ்வகோஸ், அறஃபாத் இருவரும் இதனை ஒரே விதத்திலேயே வெளிப்படுத்துகின்றனர்.

“என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்து போன என் நாட்களின்
வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூரும் காயங்கள் பேசும் மொழியில்
என்னைப் பேச விடுங்கள்
….. ….. …..
தியாகங்கள் மட்டுமே தெரிந்த
மைந்தரின் நினைவுகளை
பழிக்க என்னால் இயலவில்லை.”
(இருள் : 1990) என அஸ்வகோஸ் கூற

“அந்த மண்ணிலிருந்து
நம் காயங்களைப் பேச விடுவோம்
அவமானச் சின்னங்களாய்
வேற்று மண்ணில்
சிறுத்துக் குறுகும்
ஒட்டுண்ணி வாழ்வுக்கொரு
விடை கொடுப்போம்
…. ….. ….
சிறைக் கம்பிகளுக்குள்
நசிந்து கிடக்கும்
மைந்தர்களின் இருப்பிற்காய்
ஏதேனும் செய்வோம்”
(நிர்ணயம் : 1998) என அறஃபாத் கூறுகிறார்.

இதனைப் போலவே அன்று தமது இருப்பை நிராகரித்துத் துயரங்களை, அக்கிரமங்களை ஏவிவிட்டவர்களிடம் ஜெயபாலன் கேட்டார்:

“ஏன் எம் மீது தீ மழை பொழிந்தீர்
ஏன் எம் மீது குருதி பெருக்கினீர்
எரிகின்ற நகரின் தெருக்களில்
குட்டியோடலையும்
பெட்டைப் பூனையாய்
காடு மேடு கடல் வயலென்றெமை
மூட்டைகள் காவி ஏன் ஓட அலைக்கிறீர்”
(பிரார்த்தனை : 1998)

தமிழினமே வெட்கித் தலைகுனியும் படியாக 2002 இல் வாழைச்சேனை எரிந்த தீயின் சாம்பல் மேட்டிலிருந்து அறஃபாத் கூறுகிறார்:

“சந்தையிருந்த இடத்தில்
ஒரு சாம்பல் மேடு
பொடியைத் தூவியபடி காற்று வந்தது
குட்டிகளைக் காவியபடி
ஒரு பூனையும் வந்தது
சஞ்சாரமற்ற எனதூரில் கேவித் திரிய
வேறென்னதான் உண்டு?”
(வேட்டைக்குப் பின் : 2002)

அன்று தமிழினம் வேட்டை நாய்கள் மொய்த்த தெருக்களில் குட்டியோடலையும் பூனைகளாயினர். வாழைச்சேனையிலோ முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட வெறிநாய்கள் மொய்த்தன.கொன்று புதைக்கப்பட்ட அப்பாவிச் சகோதரர் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து வந்த வேளையில் வழிமறித்துப் பறித்தனர். பின் அந்த உடலங்களை வீதியில் இட்டு பெற்றோல் ஊற்றி எரித்தனர். அதிரடிப்படை வீரர்களும் உடன் சென்றிருந்த முஸ்லிம்களும் எரிந்த சாம்பலைக் கடந்து வந்தனர். இதனை அறஃபாத் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“எரியுண்ட முதுகெலும்பின் மேல்
தலைவர்கள் நடந்தனர்
பட்டாளமும் நடந்தது
வெட்டிப் புதைத்த பின்
தோண்டியெடுத்த ஈருடலின்
அபயக் குரல்
காற்றிலேறிப் பிரலாபித்தெம்
ஊரைச் சுடுகிறது
தொழுவிக்காத ஜனாசாக்களின்
கேவல் பள்ளியைத் தகர்க்கிறது
அப்பாவிகளைக் கொன்று புதைத்த
வீரர்களின் எக்காளம்
ஈழ முகத்தில் அறைகிறது”
(கறுப்பு ஜூன் : 2002)

யுத்த காலத்தில் வடபுலத்தில் தமிழ் மக்கள் அடிக்கடி இடப் பெயர்வுகளை எதிர் கொண்டு அவதியுற்றனர்.சொல்லொணாத் துயரங்களை அவை அம் மக்கள் மீது திணித்தன. அந்த இடப்பெயர்வுகள் இராணுவத்திடமிருந்து தப்புவதற்காகவும் இருதரப்புச் சண்டைகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காகவும் நிகழ்ந்தவை. எனினும் வடபுலத்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்ட ஈனச் செயலானது இத்தகைய சமாதானங்களுக்கு உரியதல்ல என்பதைத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

“யாழ்ப்பாணமே…ஓ…எனது…யாழ்ப்பாணமே” தொகுதியில் நிலாந்தன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இங்கேயொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப் பட்ட அதே நாட்களில் தான் 1995 இல் எக்ஸோடஸ் ஏற்பட்டது என்பது”(எக்ஸோடஸ் என்பது பைபிளில் பழைய ஆகமத்தில் வரும் ஒரு மகா இடப் பெயர்வு) குறிப்புகளின் பின்னர் தொடரும் கவிதையில் நிலாந்தன் பின்வருமாறு எழுதிச் செல்கிறார்.

“அவகாசமில்லை
ஒரு சிறிதும் அவகாசமில்லை
நாடு திகிலடைந்து
ஒரு நாயைப் போல தெருவிலோடியது
சபிக்கப் பட்டோம்
காதுள்ளவன் கேட்டிருக்கக் கூடாத
வார்த்தைகள் அவை
கண்ணுள்ளவன் பார்த்திருக்கக் கூடாத
காட்சிகள் அவை
… ………..
வழி நெடுக குழந்தைகள்
களைப்பாலிறந்தன
கால் நடைகள்
வழிமாறித் தொலைந்தன
முதியோருக்கெல்லாம் இறுதி நாளது
ஊழிப் பெரு மழை பெய்ததப்போது
….. … …….
எமது குழந்தைகள்
மழை நீரை ஏந்திக் குடிக்கவும்
எமது முதியோரை
தெருவோரம் கைவிட்டுச் செல்லவும்
ஒரு நாள் வந்ததே…
(யாழ்ப்பாணம் 30.10.1995)

இத்தகைய கொடும் துயரத்தையே 1990 ல் விரட்டப் பட்ட முஸ்லிம்களும் எதிர் கொண்டனர்.ஊழிப் பெரு மழை அப்பொழுதும் பெய்தது. மாற்றுடையேதுமின்றி உடமைகள் எதுவுமின்றி தாய் நிலம் விட்டு வெறுங்கையுடன் விரட்டப் பட்டதை அறஃபாத் பதிவு செய்கிறார்.

“என் நெஞ்சே
என்னை அவமானப்படுத்திய
அக்கணத்தில்
பொட்டலங்களுக்குள் மாற்றுடையும்
அவரிட்ட பிச்சையாகின
அந்திமத்தை நீயறிவாய்
என் மண்ணே
ஏனெம்மை இழிவு படுத்தினாய்
தோடு பிய்க்க, காதறுந்த சரிதங்களை
ஏனங்கு எழுத வைத்தாய்”
(நெஞ்சத்தீ : 1998)

நிலாந்தனின் கவிதையிலிருந்து அறஃபாத்தின் கவிதை விலகிச் செல்லும் விதமே இங்கு முக்கியமானது. நிலாந்தன் குறிப்பிட்ட எல்லாத் துயரங்களையும் அனுபவித்தவர்களாக நொந்து வெளியேறிய மக்களை “அவர்கள்” நடத்திய விதத்தைப் பதிவு செய்கிறார் அறஃபாத். முஸ்லிம்களின் பொருளாதாரம் அனைத்தையும் சூறையாடியவர்களாக வழிப் பறிக் கொள்ளைக்காரர்களாக அவர்கள் மாறியிருந்ததை அறஃபாத் குறிப்பிடுகிறார்.

தாமே மக்களைக் காப்பவர்கள் என்றும் மக்களது துயர் துடைக்கும் தேவ குமாரர்கள் என்றும் தம்மை அடையாளம் காட்டியவர்கள் பின்னர் எதனைச் செய்தனர்?

சித்தாந்தன் “துஷ்டர்கள் சூழ்ந்த பொழுது” என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்…

“இரவின் சித்திரங்களை
ரசித்தக் கொண்டிருந்த போது
அவர்கள் வந்தார்கள்
குரூரத்தின் தெறிப்புக்களாய்
வார்த்தைகளில் விசமொழுக
என் மொழியிலேயே பேசினார்கள்
… …. ….
தங்கள் வார்த்தைகளை
மறுத்த போதெல்லாம்
என் உடலின் பாகங்களில்
கூரிய நகங்களால் கீறினர்
… … …
பின்னர் அவர்கள் போனார்கள்
அகங்காரமாய் வளர்ந்த படி
ஆழமான என் சுவடுகளை
அழிப்பது போல மிதித்துக் கொண்டு”

அதே அவர்கள் கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமத்திற்கும் வந்தனர். துஷ்டர்களாக அல்ல..எமன்களாக. “போர் நிறுத்தத்திற்கு முந்திய நாள்” கவிதையில் அறஃபாத் சொல்கிறார்..

“மின்சாரம் துண்டிக்கப்பட்டது
மழைநாளில் ஊரும் அட்டைகளாய்
அவர்கள் ஊருக்குள் வந்துவிட்டனர்
… …. ……….
இன்பத் தமிழில் தூஷித்தபடி
ஊரின் நடுவே
அவர்கள் வந்துவிட்டனர்
….. ………..
அவரை விடுங்கோ
என்ற மனைவியின் கதறல்
காற்றில் கரைந்து ஊரைச் சுற்றியது
என்ட பிள்ளய சுடாதீங்க
ஒரு தாயின் கெஞ்சலில்
விடுதலையின் வீர முழக்கம் கெக்கலித்தது
ஓராயிரம் மரணக் குரல்கள்
விண்ணில் அலைந்த படி
அர்ஷையும் தொடுகிறது
எமது பிரதிநிதியின் செவிகளை மட்டும்
ஏனிறைவா செவிடாக்கினாய்?”

இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட இரு தரப்பையும் விமர்சிக்கின்றார். ஒப்பந்தத்தின் பொழுது ஒரு தரப்பு வெற்று வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது. அடுத்த தரப்பு வெற்று வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தையே அவமானப் படுத்தியது. “ஓராயிரம் மரணக் குரல்கள் விண்ணில் அலைந்த படி” இருந்த பொழுதும் எமது பிரதிநிதி செவிடாய்க் கிடந்தார் என மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியையும் ஏமாற்றத்தையும் துல்லியமாக எடுத்துக் கூறுகிறார்.

அன்று அப்பாவித் தமிழர்களின் தலைகளைத் துண்டித்து எடுத்துச் சென்ற சிங்கள இராணுவம் குறித்து கருணாகரன் பின்வருமாறு பதிவு செய்தார். இவரது கவிதை தணிந்த குரலில் ஆழ்ந்த அதிர்வுகளை மனதில் எழுப்புகிறது.

“மாலையில்
காடெழும்பிய கிராமத்திலிருந்து
வெட்டப்பட்ட மூன்று தலைகளுடன்
வீரர்கள் திரும்பினர்
ஒன்று சிறியது
‘அது ஒரு குருத்தின் முகம்’ என்றது காற்று
ஒன்று வேட்டைக்காரனுடையது
ஒன்று நரைத்த தாடியும்
சுருங்கிய நெற்றியுமானது
தலைகளை இழந்த
மூன்று அகதிகளிலிருந்தும்
பெருகும் துக்கம்
அகதிகள் உறைந்த
மரங்களை மூழ்கடிக்கிறது”
(எனது வருகை)

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களுக்கும் இதனையே செய்துள்ளனர். அறஃபாத்தின் குரல் வீறுகொண்டெழுகிறது. வேதனையும் கதறலும் வஞ்சிக்கப் பட்ட சமூகத்தின் ஆறாத் துயரமும் கவிதை வரிகளில் வெளிப்படுகிறது.

“தடித்த குரலுயர்த்திப் பேசிலேன்
பிறர் அஞ்சுதற்குரிய
கொடூரனுமல்ல நான்
எனினும்
நடு நிசியில் வஞ்சித்தென்
கழுத்தை ஏனறுத்தீர்
….. …….
பொங்கலுக்கா பலியெடுத்தீர்
ஈழத்தர்ச்சனைக்கா எனையெடுத்தீர்
கத்தியைச் சொருகியென்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தமிழீழ கீதமாக்கவா திட்டமிட்டீர்?”

பகிரங்கமாகவே தமிழீழம் பெறும் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வதைப்பதற்கெதிராக அறஃபாத்துடைய குரல் உக்கிரமாக எழுகிறது. கூரான வார்த்தைகள் கொண்டு அநியாயம் புரிந்தவர்களிடம் கேள்வியெழுப்புகிறார். அவர்களின் மனச் சாட்சிகளை இவ் வார்த்தைகள் துழைத்திடுமா?


என்ன நடந்தாலும் அவற்றை மக்கள் சம்பவங்களாகக் கருதிக் கடந்து சென்றுவிடுகின்றனர். முஸ்லிம்களின் இழப்புக்கள் குறித்தும் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்படும் அக்கிரமங்கள் குறித்தும் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை. அவற்றுக்கு எதிராக மக்கள் அரசியல் மயப்படுத்தப் படவுமில்லை. தனது சமூகத்தின் அழித்தொழிப்புக்கள் இழப்புகள் நடைபெறும் போதெல்லாம் அறிக்கை விடுவதொன்றே தமது தலையாய கடமை எனக் கருதி முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். அதற்கப்பால் அவர்களது கடமைகள் என்று எதுவுமில்லை. தமது சுகபோகங்களுக்காக ஒருவரோடொருவர் மல்லுக்கட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் உரிமைகள் யாவும் புறக்குடத்தில் வார்க்கப்படும் நீராக வீணாகிப் போகின்றன என்பதை அறஃபாத் ‘மௌனம்’ என்ற கவிதையில் பதிவு செய்கிறார்.

“வேட்டைப் பல் முறிந்த
தனித்துவச் சிங்கங்களோ
சிம்மாசனப் பித்னாவில்
நாணிச் சிறுத்ததென் போர் நெஞ்சு
…… ……..
சல்லடையாக்கப் பட்ட
என் சகோதரனே
என்னை மன்னித்து விடு
மறுநாள் உன் உம்மாவையும்
கொன்றுவிட்டார்கள்
எனினும்
நாம் மௌனமாகத்தான் இருந்தோம்”

முஸ்லிம் சமூகம் இனவாதத்தாலும் அரசியல்வாதிகளாலும் மிக மோசமாக வஞ்சிக்கப் பட்டுள்ளது. மிகக் கேவலமான அரசியல் தலைமைத்துவத்தையும் அவலம் மிகுந்த அழித்தொழிப்புக்களையும் ஒரே சமயத்தில் எதிர் கொண்டவர்களாக மக்கள் தத்தளிக்கின்றனர். எல்லா வழிகளிலும் கைவிடப் பட்டவர்களாகவும் அடைக்கலமற்றவர்களாகவும் மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மரம் பச்சோந்திகளின் புகலிடமாக மாறிவிட்டதை அறபாத் கூறுகிறார்.

“இருப்பின் ஒளிர்வு
உங்களால் மெருகேறுமென்ற
எங்கள் கனவில் இருள் படிகிறது
என் வருத்தங்கள் இதுதான்
என் வீட்டு முற்றத்தில்
ஒரு கிளசறி மரத்தையேனும்
நட்டியிருக்கலாம்
எனக்கு மஞ்சு பூட்ட உதவியிருக்கும்”

‘வேட்டைக்குப் பின்’ தொகுதியிலுள்ள கவிதைகள் யாவிலும் ஏதோ ஒரு துயரம் இழையோடிச் செல்கிறது. புதிய சொற் பிரயேபகங்கள் கவிதை வரிகள் அமைப்பு போன்றன வாசகர்களைப் பெரிதும் ஈர்ப்பனவாய் அமைந்துள்ளன.

சமகாலத்தில் இயங்கும் கவிஞர்களிடையே அந்தக் காலத்துக்கேயுரிய சில சொற்களும் கருத்துக்களும் பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். தம்மைப் பாதித்தவற்றின் தாக்கம் எல்லாக் கவிஞர்களிடமும் காணப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. இதற்கப்பாலும் ஒருவரையொருவர் படிக்காத நிலையிலும் சமகாலத்தில் ஒரே கருத்தைச் சொல்லும் கவிதைகளைப் படிக்கும்போது கவிஞர்களின் உள்ளங்களைப் பிணைத்துள்ள இரகசிய இழைகளைத் தரிசிக்க நேர்கிறது.

யுத்த நிறுத்தச் சூழ்நிலையின் பின்னர் எல்லோரும் பதிந்தெழும்பும் தளங்களிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு அறஃபாத் வீறு கொண்டு எழுந்துள்ளார் என நினைக்கிறேன். சமகால நிகழ்வுகளினூடாக மொழியின் தீவிரத்துடன் கவிதையை நகர்த்திச் செல்லும் சாத்தியம் இக்கால கட்டத்திலேயே இவருக்கு வாய்க்கப் பெற்றுள்ளதாகத் தோன்றுகின்றது.

“தமிழர் மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த முக்கியமான ஒரு கவிதையாக அஷ்ரப் ஷிஹாப்தீனின் ‘ஸெய்தூன்’ என்ற கவிதையைச் சொல்ல வேண்டும். ‘ஸெய்தூன்’ என்ற கவிதையிலிருந்து தான் இன்று வரையான முஸ்லிம் தேசத்தை அல்லது அதன் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல கவிதைகளைக் கண்டு கொள்கிறோம்” என முன்னுரையில் றமீஸ் அப்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அதிகமான பதிவுகள் ஓரளவுக்கேனும் கவிதைகளில் தான் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் சமூகம் இனவாதத்தால் எதிர் கொண்ட இழப்புகள், இடப் பெயர்வுகள், துயரங்கள் பற்றி இன்னும் பத்தாண்டுகளிலோ அல்லது அதற்கு அப்பாலோ வரும் சந்ததி எதுவும் அறியாமற் போகலாம். அப்போது இந்தத் துயரங்களின் தொடர்ச்சி வேறு முகம் கொண்டு எம்மை வந்தடையலாம். 80 களில் 90 களில் 2000 களில் நடந்தவை பற்றிய தெளிவு அடுத்த சந்ததியினருக்குத் தெரியாமல் போனால் எமது அடையாளங்களை, இழக்கப்பட்ட உரிமைகளைத் துடைத்தளித்தவர்களாக நாமும் தான் மாறுவோம். துயரங்களின் பதிவுகளை அறஃபாத்துடைய தொகுதி ஓரளவு நிவர்த்தி செய்திருந்தாலும் தொடர்ச்சியான பதிவொன்றினை நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். அது நெடுங் கவிதையாகவோ நாவலாகவோ பரிசோதனையொன்றாகவோ கூட அமையலாம்.

-ஃபஹீமா ஜஹான்
(நன்றி - யாத்ரா )