Friday, December 11, 2009

வானம் ஏன் மேலே போனது?


விஜயலட்சுமி சேகரின் “வானம் ஏன் மேலே போனது?” இன்னுமொரு பெண் மொழி சார்ந்த பிரதியாக வெளி வந்துள்ளது.

இத்தொகுதியில் உள்ள சில பிரதிகள் சிறுகதை என்ற வழமையான சட்டகத்துள் வைக்க முடியாதனவாகவும் மரபுகளைவிட்டுத் தம்மை விடுவித்துக் கொண்டும் எழுதப் பட்டுள்ளன.ஆணாதிக்கக் கூறுகளில் இருந்து விடுபட்டுப் பெண் தனக்கான மொழியையும் வெளியையும் கண்டடைய வேண்டும் என்ற கூற்று வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அத்தகைய முயற்சியின் ஒரு பிரதிபலிப்பாக இவருடைய சில பிரதிகள் அமைந்துள்ளன.

மட்டக்களப்பு வாழ்வியலும் மொழியும் தொகுதி முழுவதும் இழையோடிக் காணப் படுகின்றது.கிழக்குடனான தொடர்பேதும் இன்றி வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இவரது தொகுதி புதிய அனுபவத்தைத் தரக்கூடும்.எனினும் “சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்” குறித்தும் அதன் வெளியீடுகள் குறித்தும் அறிந்திருப்போருக்கு இந்தத் தொகுதி முன்னைய அனுபவங்களின் நீட்சியாகவே தென் படும்.

தனது சுயத்தை இழக்க எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்.தான் அவமதிக்கப் படுவதையும் பிறரின் அனுதாபத்துக்குப் பாத்திரமாக அமைவதையும் ஆத்ம விசுவாசங் கொண்ட எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

“வலி” கதையின் பெண்ணும் தனது துயரத்தை வென்றுவிடப் பார்க்கிறாள். “என்ர காயத்த தவித் தடவி கத கேட்கும்.தடவக்குள்ள எல்லார்ர நகமும் காயத்தில் கீறும்.திரும்பத் திரும்ப வலிக்கும்.”

இரத்தம் வழியும் காயங்களை மூடி மறைத்துக் கொண்டு அனைவர் முன்னிலையிலும் புன்னகைத்து வாழும் பெண்களையும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கத் தோன்றுகின்றுது.இங்கு காயம் ஒரு குறியீடாகவும் உள்ளது.

இன்றைய உலகில் அதிகமான நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களின் வறுமை என்பன அதிக கவனத்தைக் கோரி நிற்பவையாக உள்ளன. முதலாவதாகப் பெண் தனது வறுமைக்கு எதிராகப் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.அதே வேளையில் பருந்துகளிலிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியவளாகவும் இருக்கிறாள். பெண் தனது பொருளாதார விடுதலைக்காக எழுந்து நிற்கையில் ஆண், பல் வேறுபட்ட தொந்தரவுகளையும் துயரயங்களையும் அவள் மீதும் அவளது குழந்தைகள் மீதும் சுமத்துகிறான்.பெண்ணானவள் வறுமைக்கு எதிராகவும் அவளைச் சுற்றி நிற்கும் பிசாசுகளுக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் போராட வேண்டியவளாக இருக்கிறாள்.ஆணிடமிருந்தே பெண்ணின் உலகுக்கு அச்சமும் இருளும் ஆற்றமுடியாத வடுக்களும் வேதனைகளும் வந்து சேர்கின்றன.


“அவள் நானாகி நாமாக” கதையில் வரும் பெண்னின் அவல நிலையின் முன் நாம் வார்த்தைகளையிழந்து போகிறோம்.
“எழும்பவே இயலாமல் இடுப்பெலும்பு முறிந்து திரும்பவும் தாய் நாட்டிற்கு வெறும் கையுடன் அனுப்பப் பட்ட நான், என் குழந்தை இரண்டு, நஞ்சு குடித்து இறந்த அக்காவின் குழந்தை இரண்டு இத்தனையும் சேர்த்து 76 வயது தாய்க்கு பாரமாவதில் உறைந்தே விட்டேன்”
இந்தப் பெண்ணுக்குச் சொல்ல எந்த மொழியிலாவது எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமா?

தனது தலைவிதியை ஆண் எனும் சாத்தானிடம் ஒப்புவித்துப் பின்னர் அவனால் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப் பட்ட பெண்ணின் வாழ்வை “கண்ணாடி வாழ்க்கை” சொல்கிறது.

“மொட்டுக்கள் மலரட்டும் 1-2” என்பன ஆணுடைய இழி செயலால் வல்லுறவுக்குள்ளாகும் பிஞ்சுகளைப் பற்றிச் சொல்கின்றன.

அவளை மட்டுமல்ல அவளது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியவளாக நித்தமும் ஆண் மிருகங்களை எண்ணிப் பயந்தவளாக பெண் வாழவேண்டியுள்ளது.

இவ்விடத்தே மாலதி மைத்ரியின் கட்டுரை வரிகள் நினைவுக்கு வருகின்றன. “சங்கப் பெண் கவிஞர்கள்” நூல் குறித்து “நிற் தகைக்குனர் யாரே?” என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நாடா கொன்றோ ; காடா கொன்றோ ;
அவலா கொன்றேர் மிசையா கொன்றோ ;
எவ்வழி நல்லவர் ஆடவர் ;
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!

நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும் இடம் எப்படியிருற்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும்.பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க, தண்டிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட பெண்களின் கூட்டுக் குரல் இது.இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?”

பொருளாதார விடுதலை மாத்திரம் பெண்ணுக்கு நிறைவான வாழ்வைக் கொடுக்கப் போவதில்லை.அவள் சார்ந்து வாழும் ஆண் சமுகம் அவளுக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டும். ஆண் உயர்ந்த குணமுள்ளவனாக, 'மனிதனாக' மாறினால் மாத்திரமே பெண் உலகுக்கு உண்மையான விடுதலை வந்து சேரும்.
“அவளுக்கென்று…” கதையில் அவள் தன் கணவன் நல்லவனாக மாறிவிடுவான் என்று மனதிலும் உடலிலும் வடுக்கள் தாங்கி வாழ்கிறாள்.
தொடர்ந்தும் அந்த இல்லத்தை அவன் நரகமாக்கிக் கொண்டே இருக்கிறான்.இறுதியில் அவள் அந்த நரகத்தைவிட்டு வெளியேறுகிறாள்.
“உள்ளே சென்று சில பொருட்களை பையில் போட்டு எடுத்த படி குழந்தையை அள்ளித் தோளில் போட்டுக் கொள்கிறாள்.இவள் பார்வையின் கனம் தாங்காமல் ரகுவின் உடல் சேற்றில் படுத்த எருமை மாடு போல மறு பக்கம் புரள்கிறது.பாதம் வாசலை, வாசல் படியைத் தாண்டுகிறது.வானம் அமைதி காக்கிறது.இந்த அமைதி அடங்கிப் போதலுக்கான அறிகுறி அல்ல”
என ஆசிரியர் முடிக்கும் இடத்திலிருந்து கதையைத் தொடங்கியிருந்தால் என்ன? என்று கேட்கத் தோன்றுகின்றது.

இத்தகைய கதைகள் வழமையாகவே பெண் வீட்டைவிட்டு வெளியேறுவதுடன் முடிந்து போகின்றன.அதன் பின்னர் அவள் செல்லும் வழி எது? இடம் எது? இவளைப் போல கணவனிடமிருந்து பிரிந்து சென்ற பெண்ணுக்கு அவள் அவாவி நின்ற நிம்மதியான வாழ்வு கிடைத்ததா? சமுகம் அவளுக்கு இசைவாகி நின்றதா? நாவைத் தொங்கவிட்டவாறு அலையும் மிருகங்களிடமிருந்து தன்னையும் குழந்தையையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வாள்? இத்தகைய பெண்களைக் காப்பாற்றிடப் பெண்ணிய வாதிகளும் பெண்ணியம் சார்ந்த அமைப்புகளும் எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன? துயரங்களின் பதிவுகளை மட்டுமல்ல துயரங்களுக்கான தீர்வுகளையும் அவளுக்கான நம்பிக்கைகளையும் இத்தகைய படைப்புகளினு}டாக வழங்க முடியாதா?

“வானம் ஏன் மேலே போனது?” நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எழுதப் பட்டிருந்தாலும் அது சொல்லும் உண்மை எல்லாப் பெண்களுக்கும் தைரியத்தை அளிக்கிறது.
“பத்து வயசுக்கு மேல நம்மளால நிமிந்து நிற்கவே முடியுதில்லயே. அதுவரைக்கும் தான் பூமிக்கும் வானத்துக்குமான உயரம்.அதுக்கு மேல தான் அறிவும் கூடயா வளருது. ஆளும் வளருது…ஆனா நம்மளோட உண்மையான வளர்ச்சிய உணர முடியாம வானம் இப்படி வளைச்சுப் போடுறாப் போல எப்பவும் முதுகுல முட்டுதே..”
வானம் மேலே போய் விட்டாலும் இன்னும் பெண்களின் நிலைமை இப்படித்தானே உள்ளது?

தொடரும் யுத்தங்களாலும் சிறுவர்களும் பெண்களுமே அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.தீர்க்கமுடியா வடுக்களைச் சுமந்து வாழும் இவர்களால் சமுகமே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது.யுத்தத்தில் ஒரு ஆண் கொல்லப் படும்போது அல்லது அவயவங்களை இழக்கும் போது அவன் ஒரு பெண்ணின் மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ இருக்கிறான்.அவ் வேளை அவனைச் சார்ந்து வாழும் பெண்ணும் குழந்தைகளும் அநாதரவாக விடப்படுகின்றனர்.அவ்வாறே யுத்தத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பெண்களையும் குழந்தைகளையும் குண்டுகள், நச்சு வாயுக்கள், கண்ணிவெடிகள், வல்லுறவுகள் போன்ற பல்வேறு
(ஆண் சார்ந்த)ஆயுதங்கள் சிதைக்கும் போது அவர்களுடைய முழு ஆயுளும் வீணடிக்கப் படுகின்றது.அப்பாவிகள் மீது செத்துச் செத்து வாழும் வாழ்க்கை திணிக்கப் படுகிறது.


இவ்வாறு யுத்தம் அந்தரத்தில் விட்டுச் சென்ற சிறுவன் ஒருவனின் வாழ்வை “அந்தரத்தில்” கதை சொல்கிறது.

இவரது படைப்புகள் யாவும் அன்றாட வாழ்வின் துயரங்களில் இருந்தே வெளிப் பட்டுள்ளன.செய்யப் பட்ட கதைகளாகவோ முன்னரே தயாரித்து வைத்திருக்கும் வார்ப்புகளில் ஊற்றியெடுக்கப் பட்ட கதைகளாகவோ அன்றி துயருறும் பெண்களின் வலியைச் சொல்பவையாகவே அனேக கதைகள் அமைந்துள்ளன. “தீக்குள் தீ” , “நியாயம்” , “அவளுக்கென்று” போன்ற கதைகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பலராலும் எடுத்தாளப் பட்டுள்ள விடயங்களாக இருப்பதால் அந்தக் கதைகளின் முக்கியத்துவம் குறைகின்றது.இந்தக் கதைகள் தொகுதியில் இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.சில கதைகள் குறுகி அவற்றின் மொழி இறுக்கமாகக் காணப் பட்டாலும் அவை சொல்லிச் செல்லும் விடயங்கள் மனதில் நீண்ட அதிர்வைத் தோற்றுவிக்கின்றன.

மௌனமாகவே பெண்ணின் துயரங்களைப் பார்த்துப் பார்த்து இருந்து இனியும் தாங்க முடியாமற் தானோ அந்த வானமும் தூரப் போயிற்று?

இந்தத் தொகுதியின் அட்டையும் வடிவமைப்பும் மிகவும் பின்னடைவுடன் காணப் படுகின்றது.இங்கு பிள்ளைகளுக்கான 40 பக்கப் பயிற்சிக் கொப்பிகள் கூட இதை விடவும் தரமான அட்டை மற்றும் வடிவமைப்புடன் தான் விற்பனைக்காக வருகின்றன.யுத்த நெருக்கடிக்கும் பல்வேறு தட்டுப் பாடுகளுக்கும் மத்தியில் வடக்கிலிருந்து வெளிவரும் நூல்களும் தம்மால் இயலுமான உச்ச தரத்துடனேயே வெளிவந்துள்ளன. ஆனால் அச்சுத் துறை சிறப்பாகவும் அதே வேளை மலிவாகவும் காணப் படுவதாக எமது மக்கள் கருதும் இந்தியாவில் பதிப்பிக்கப் பட்ட இந்த நூலின் அட்டையோ போட்டோ கொப்பிப் பிரதியொன்றை ஒத்திருக்கின்றது.இதன் அட்டை மற்றும் வடிவமைப்பில் இதை விடவும் நேர்த்தியைக் கையாண்டிருக்கலாம்.புத்தகக் கடலில் அல்லது நூலகத்தில் இந்தப் புத்தகத்தின் வெளித்தோற்றத்தால் இது பார்ப்போரின் கவனத்தைவிட்டும் நழுவிப் போய்விடும் அபாயம் உள்ளது.
“பனிக்குடம் பதிப்பகம்” இந்த நூலின் செய்நேர்த்தியை விட்டுக் கவனம் வழுவியதேன்?

(மறுகா-2007 இதழுக்காக எழுதப்பட்டது)

பஹீமாஜஹான்
2007.03.04

4 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

மிக நேர்த்தியான விமர்சனம்.
உங்கள் எழுத்து, தொகுப்பைப் பார்க்கத் தூண்டுகிறது.

//நாடாக இருக்கட்டும், காடாக இருக்கட்டும், பள்ளமாக இருக்கட்டும் இடம் எப்படியிருற்தால் என்ன? எந்த இடத்தில் ஆடவர் நல்லவராக உள்ளாரோ, அந்த இடமே நல்ல நிலமாக வாழும்.பெண்களுக்கான வாழ்வியல் விதிகளை வகுக்க, கண்காணிக்க, தண்டிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆண்களை நோக்கிப் பாயும் ஒளவையின் குரல் மட்டுமல்ல இது.ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப் பட்ட பெண்களின் கூட்டுக் குரல் இது.இன்னும் நம்மை நாம் தற்காக்க, எதிர்த்தாக்குதல் தொடுக்க ஒளவையையே தொடர்ந்து துணைக்கழைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன?”//

நிச்சயமாக முடியாது.
ஆனால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பு என்பது தற்போதும் ஏட்டில் மட்டும்தானே இருக்கிறது? :(

தொடருங்கள் சகோதரி.

ஃபஹீமாஜஹான் said...

அன்புள்ள ரிஷான்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in