Thursday, September 10, 2009

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுடனான நேர்காணல்


(பகுதி-1)

(இந்நேர்காணல் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையினால் வருடாந்தம் வெளியிடப்படும் "கலைஅமுதம்"-99 மலரில் இடம்பெற்றது.)

இலங்கையில் 90களின் கவிதைப் போக்கு எவ்வாறு உள்ளது?


ஓரளவு ஆரோக்கியமாக உள்ளது என்று தான் கூற வேண்டும். பெருமளவான எண்ணிக்கையில் இளைஞர்கள் கவிதை எழுதத் தொடங்கியுள்ளார்கள். இவர்களுட் பலரிடம் சமூகப் பிரக்ஞை கூர்மையாக உள்ளது. யுத்த அவலம், இன நல்லுறவு, எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உணர்வு போன்றவற்றைப் பலர் தம் கவிதைப் பொருளாகக் கொண்டுள்ளனர். பெண்களின் குரல் கவிதையில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.பல்வேறு மேலை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களின் அனுபவங்கள் கவிதையில் பதிவாகியுள்ளன. உலகக் கவிதைகளைக் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி ஓரளவு விரிவடைந்துள்ளது. குறிப்பிடத்தக்க இளம் கவிஞர்களின் கவிதைகள் சில தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பழைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களுட் பலர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டுள்ளனர்.அபாரமான சாதனைகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் நமது கவிதை தேங்கிப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. அவ்வகையில் தொண்ணூறாம் ஆண்டுகள் திருப்தி தருகின்றன.இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?


90 களில் நம்பிக்கை ஊட்டக் கூடியவர்களாக முன்னணிக்கு வந்த சிலரின் பெயர்கள் உடன் நினைவுக்கு வருகின்றன. நட்சத்திரன் செவ்விந்தியன், அஸ்வகோஸ், ஆத்மா, ஓட்டமாவடி அறபாத், வாசுதேவன், சுல்பிகா. இவர்கள் ஒவ்வொரு தொகுதியையாவது வெளியிட்டுள்ளனர்.நம்பிக்கை தரும் தொகுதிகள் இவை.
கவிதையில் படிமம் , குறியீடு என்பன எந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன?இன்று கவிதை பற்றிப் பேசுபவர்களால் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப் படும் ஒரு சொல் படிமம். உவமை, உருவகம், குறியீடு என்பன போல் படிமம் என்பதும் கவிதையின் ஓர் உறுப்பு என்ற வகையில் தான் பலரும் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.இது தவறான விளக்கமாகும். உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமங்கள் தான். படிமத்தின் வெவ்வேறு வகைகள் இவை. படிமம் என்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஒரு பொதுச் சொல்.Image, Imagery என்னும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் இது. 1960 கள் வரை இதனைச் சுட்ட தமிழில் கற்பனை என்னும் சொல்லைப் பயன் படுத்தி வந்தார்கள். 1960 களில் எழுத்து பத்திரிகை மூலம் தமிழில் புதுக் கவிதை இயக்கம் வளர்ச்சியடைந்த போது, அதில் சம்பந்தப் பட்டவர்கள் கற்பனை என்பதற்குப் பதிலாகப் படிமம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். கவிதை விமர்சனத்தில் இப்போது இச்சொல்லே பெருவழக்காகி விட்டது. கற்பனை என்பதை விட படிமம் என்பது பொருத்தமான சொல்லாகவே தோன்றுகின்றது. சொற்களால் மனதில் தோற்றுவிக்கப் படும் காட்சி அல்லது விம்பமே படிமமாகும். இதனை அகத்தில் தோன்றும் சொல்லோவியம் என்றும் கூறலாம. கவிதை சொற்கள் மூலம் நம் மனதில் பல்வேறு சித்திரங்களைத் தோற்றவிக்கின்றது. இத்தகைய சொற் சித்திரங்கள் மூலமே கவிதை நம்முடன் பேசுகிறது. தன் உட் பொருளை நமக்கு உணர்த்துகின்றது. வேறு வகையில் சொன்னால் கவிதை படிமங்கள் மூலமே நம்முடன் பேசுகின்றது. படிமங்கள் பல வகைப்படும். அவற்றுள் ஒன்று தான் குறியீடு. உவமை, உருவகம் என்பனவெல்லாம் படிமத்தின் வெவ்வேறு வகைகள். எல்லா வகையான அணிகளும் படிமங்கள் தான். படிமம் என்பது கவிதையின் மொழி எனலாம். அந்தளவுக்குக் கவிதையில் படிமம் முக்கியமானது. இதனை ஒரு சிறு உதாரணம் மூலம் விளக்கலாம்.

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள் - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை.

இது பாரதி தாசனின் கவிதை. இக் கவிதையைப் படிக்கையில் நம் மனதில் ஓவியம் போல் ஒரு காட்சி தோன்றுகின்றது. தாமரைப் பூக்கள் மலர்ந்த குளம். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகிய இளம் பெண். அவளைக் கண்டு மனம் பறி கொடுக்கம் ஓர் இளைஞன். இந்தக் காட்சியையே இக் கவிதை வரிகள் சித்திரிக்கின்றன. இந்தச் சித்திரம் முழுவதுமே ஒரு படிமம்தான். இதைக் கூறு படுத்தி மூன்று தனித்தனிப் படிமங்களாகவும் பார்க்கலாம்.

1.தாமரை பூத்த குளம்.
2. முகத் தாமரை தோன்ற முழுகிடும் கோமளவல்லி.
3. அந்தக் கோமள வல்லியைக் கண்டு உள்ளம் கொள்ளை கொடுக்கும் குப்பன்.

இவ்வகையிலே ஒரு கவிதையில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு தொடரும் கூடப் படிமம்தான். இக் கவிதையில் வரும் தாமரை என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். முதல் வரியில் இச்சொல் அதன் நேர் பொருளில் நீர் வளர் தாவரமான தாமரையையும் அதன் பூவையும் சுட்டுகிறது. இதனை ஒரு நேர் படிமம் (Direct Image) எனலாம். அடுத்தவரியில் முகத் தாமரை என உருவகப் பொருள் தருகிறது. இதனை உருவகப் படிமம் (Metaphorical Image) எனலாம்.

கம்பராமாயணத்தில் வரும் வேறு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இராமன் நடந்து வருவதை மிதிலை நகரத்துப் பெண்கள் சன்னல்களைத் திறந்து மலர்ந்த முகத்துடன் எட்டிப் பார்க்கின்றார்கள். இதைக் கம்பன் பின்வருமாறு சித்திரிக்கின்றான்.
"சாளரம் தோறும் பூத்தன தாமரை மலர்கள்"
சன்னல்களில் தாமரை பூக்காது. இங்கு தாமரை பெண்களின் மலர்ந்த முகத்துக்குக் குறியீடு. இதனைக் குறியீட்டுப் படிமம் (Symbolic Image) எனலாம். இவ்வகையில் உவமை, உருவகம், குறியீடு எல்லாமே படிமத்தின் வெவ்வேறு வகைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

6 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

தங்கள் முயற்சிக்குப் பாராட்டு
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் முனைவர் மு.இளங்கோவன் அவர்களே,

தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

மிகவும் அருமையான நேர்காணல்.
பல விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பகிர்வுக்கு நன்றி !

தொடர்ந்தும் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.
தொடருங்கள் சகோதரி !

ஃபஹீமாஜஹான் said...

வாருங்கள் ரிஷான் ஷெரீப்,

"தொடர்ந்தும் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்"

உங்களுடைய ஆவலைப் பூர்த்தி செய்து வைக்கிறேன்.

நன்றி.

கலைமகன் said...

நல்லதமிழ் வளர்க்கும்பணியினை யேத்தி...
சொல்லில்தந்த நேர்காண லருமையுந்தன்
வல்லவர் தமிழில் எம். ஏ. நுஃமான்
வாழ்த்தி யேத்தினேன் அவர்பணி!

கவிதையியல் பற்றிய அவர்மொழிகள்
கடையினத்திற்கோ ரச்சாணி வழுத்தினேன்
கவிந்தகவிதா தரும் கவிதாயினிநீ
கருத்துமிகு நேர்காணல்கள் மேலுந்தா!

தெவிட்டாக்கனியாய நேர்காணலிது
தெளிவாய்ச்சொலிய வரிகளுந்தேனே!
கவிதைதரும் கவிதாயினியே வலைப்பூவில்
கனியாயினமேலுந்தா உனை வழுத்தினேன்!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - வெலிகம.

கலைமகன் said...

நல்லதமிழ் வளர்க்கும்பணியினை யேத்தி...
சொல்லில்தந்த நேர்காண லருமையுந்தன்
வல்லவர் தமிழில் எம். ஏ. நுஃமான்
வாழ்த்தி யேத்தினேன் அவர்பணி!

கவிதையியல் பற்றிய அவர்மொழிகள்
கடையினத்திற்கோ ரச்சாணி வழுத்தினேன்
கவிந்தகவிதா தரும் கவிதாயினிநீ
கருத்துமிகு நேர்காணல்கள் மேலுந்தா!

தெவிட்டாக்கனியாய நேர்காணலிது
தெளிவாய்ச்சொலிய வரிகளுந்தேனே!
கவிதைதரும் கவிதாயினியே வலைப்பூவில்
கனியாயினமேலுந்தா உனை வழுத்தினேன்!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர - வெலிகம.