Friday, June 24, 2011

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்
1988 நவம்பர் மாதம் பயங்கரம் நிரம்பிய காலப்பகுதியாக இருந்தது. அந்த இடத்தை விட்டுக் காலம் வேகமாகக் கடந்து போயுள்ளது. இன்றைய காலப்பகுதியில் அந்தப் பயங்கரத்தின் நிகழ்வுகளை அனேகர் மறந்து போயுள்ளனர். 88 -89 காலப் பகுதியில் காணாமற் போனவர்களைப் பற்றியும் கொலைசெய்யப் பட்டவர்களைப் பற்றியும் நாம் 90களில் உரையாடினோம்.மரணத்தை எதிர்நோக்கியவாறே கொல்லப்பட்டவர்களுக்கான இரங்கல் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.அவர்களை எண்ணி இன்று வரைக்கும் நான் பெருமையடைகிறேன்.நான் பிறந்து வளர்ந்து ஆளானது பயங்கரம் குடிகொண்டிருந்த ஒரு சமூகத்திலாகும். அந்தக் கால கட்டத்தில் அனேக மக்கள் மிலேச்சத் தனமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

நான் பிறந்து வளர்ந்த பீதி சூழ்ந்த அதே சமூகம் இன்றும் உயிர்புடனே காணப்படுகிறது.அதனாலேயே இதனை நான் எழுத முனைந்தேன். இறந்த காலத்தின் நினைவுகளில் இருந்து என்னால் விடுபடமுடியாமல் உள்ளது. இடதுசாரி ஒருவரான எனது தந்தை 1988 நவம்பர் மாதம் 8ம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் கொலை செய்யப்பட்டார்.அவர் தான் நந்தசேன சில்வா என்பவர்.வாழ்வின் 39 வது வருடத்தில் அவரைக் கொன்றபோது நான் சின்னஞ் சிறுமியாக இருந்தேன்.நான் அறிந்த வரையில்1971ம் ஆண்டுக் கிளர்ச்சியுடனேயே அவரது அரசியல் வாழ்வு ஆரம்பமாகியது.அது 1971 கிளர்ச்சியுடன் தொடர்பானவர்களுக்கும் அவருக்கும் இடையிலான அரசியல் நற்புணர்வினாலாகும்.எனது நினைவுகளில் அவர் மிகவும் பிரியத்துக்குரியவரும் சமூகத்தில் ஏனையவருக்காகப் பணியாற்றிய ஒருவருமாவார்.

1980 இன் வேலை நிறுத்தம் காரணமாக தொழிலை இழந்த அவர் பண்டாரவெல ஊவ கரந்தகொள்ள என்னுமிடத்தில் பண்ணை ஒன்றை ஆரம்பித்தார். வேலை நிறுத்தத்தால் பாதிப்படைந்திருந்த அவரது ஒருசில நண்பர்களுக்கும் இப் பண்ணையின் மூலமாக ஜீவனோபாயத்திற்கான வழியொன்று கிடைத்தமையால் அவர் மகிழ்வடைந்தார்.ஊவ கரந்தகொள்ள பாடசாலையைக் கட்டியெழுப்புவதிலும் பாடுபட்டுழைத்தார். உயர்தர வகுப்பில் கல்விகற்ற பிள்ளைகளுக்கான இலவச மேலதிக வகுப்புக்கைளையும் அவர் நடாத்தினார்.கிராமத்திலுள்ள ஏனைய பிள்ளைகளைப் போலவே சிரமங்களை அனுபவிக்கப் பழகிக் கொள்ளுமாறு கூறி எங்களைக் கிராமத்துப் பள்ளிக் கூடத்திற்கே ஆரம்பத்தில் அனுப்பினார். அப்பா பாடசாலைக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய காரணத்திற்காக எங்கள் மீது விஷேட கவனம் செலுத்தப் படுவதை விரும்பவி்ல்லை.அப்போது பள்ளிக்கூட நாடகக் குழுவில் இரண்டாவது தடவையாகவும் நான் தேர்ந்தெடுக்கப் பட்டதை விரும்பாத அப்பா பாடசாலைக்குச் சென்று "ஆற்றல் உள்ள வேறு பிள்ளைகள் இந்த வகுப்பில் இல்லையா" எனக் கேட்டது இன்று போல இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.மனிதர்களுடன் அன்புடன் பழகுவதற்கு அப்பாவே எனக்குக் கற்றுத் தந்தார் .பணணையைத் தாண்டிச் செல்லும் கிராமத்து மக்களை நிறுத்திக் கொழும்பிலிருந்து எடுத்து வந்த விட்டமின், இரும்புச் சத்து மாத்திரைகளைப் பகிர்ந்தளிப்பது இன்று போல் எனக்கு நினைவிலுள்ளது.1983 கறுப்பு ஜூலையில் எங்கள் இல்லம் தமிழ் மக்களால் நிரம்பியிருந்தது. அப்பா தன்னால் இயலுமான எல்லாச் சந்தர்ப்பத்திலும் பிறருக்காக உதவி புரிந்தார்.எனினும் அக்காலகட்டத்தில் எமக்கு அவரது சமூகத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த புரிந்துணர்வு இல்லாமலிருந்தது.

மக்கள் விடுதலை முன்னணியினரால் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி எனது அப்பா திட்டமி்ட்டுக் கொலை செய்யப் படுவதற்கான பிரதான காரணமாக அமைந்தது இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவரான அவர் அன்றைய மக்கள் விடுதலை முன்னணியினரின் அரசியலைப் பகிரங்கமாகவே எதிர்த்ததனால் ஆகும்.அவர் இனவாதத்திற்கும்,மக்களைக் கொன்றொழிப்பதற்கும் எதிராக வெளிப்படையாகவே பேசினார். நந்தன மாரசின்ஹ,விஜய குமாரதுங்க கொலைகளுக்கு அவர் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்தார்.மாரசின்ஹ கொலை செய்யப்பட்டதன் பின்னர், அப்பா நந்தன மாரசின்ஹ அவர்களின் பெரியதொரு நிழற்படத்தை வீட்டின் முன்னால் தொங்க வைத்துக் கொண்டு அதைப் பற்றித் துயரத்துடன் கதைத்தது எனக்கு நினைவில் உள்ளது. சிறுமியான நான் மாரசின்ஹ என்பவர் யார் என்பதைப் பற்றி விரிவாக அறிந்திருக்கவில்லை. எனினும் தந்தையின் வேதனையினூடே அவர் தொடர்பாக என்னுள் கட்டியெழுப்பப் பட்ட சித்திரம் இன்னும் அழியாமல் உள்ளது.

அப்பா எப்பொழுதும் அவரது மரணம் பற்றிக் கதைத்தார்.எனினும் அவர் ஒரு வீரர் என்பதால் அவர் இறக்கப் போவதில்லை என்றே கருதினேன். எனது சிறு வயது உலகில் அப்பா தோற்றுப் போகாத வீரனாக இருந்தார்.அவரை யாரால் கொலை செய்ய முடியும்? சில வேளைகளில் என்னை மடியில் அணைத்துக் கொண்டு மார்க்ஸ் அல்லது லெனின் உடைய படைப்பொன்றை சத்தமிட்டு வாசிக்க அவர் பழகியிருந்தார்.எனக்கு அவற்றில் எவையும் விளங்கவில்லை.எனினும் நான் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.சிறுவயதிலிருந்தே எங்கள் செவிகளை அவற்றுக்குப் பழக்கிடவே அவ்வாறு வாசித்ததாக அவர் ஒரு தடவை கூறியது ஞாபகம் உள்ளது. அவர் உலகைக் காணும் விதம் தொடர்பாகச் சிறியவளான என்னிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது அவரது மரணத்தைப் பற்றி அறிந்திருந்ததாலேயே என்பது இப்போது எனக்கு விளங்குகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினரால் கொலை செய்யப் பட்ட எனது அப்பா அத்தகைய ஒரு மனிதராவார். நானும் அக்காவும் நவம்பர் 3ம் திகதி எமது பாடசாலை விடுதியிலேயே இறுதிகாக அப்பாவைப் பார்த்தோம். அதன்பின்னரான 5 தினங்களில் அவர் கொலை செய்யப் பட்டார். அவருடன் மேலும் நால்வர் கொலை செய்யப்பட்டனர். அதில் இருவர் அருகிலிருந்த பண்ணைகளின் உரிமையாளர்கள்.அவ்விருவரும் தமிழர்கள் என்பதோடு எந்தவொரு அரசியலிலும் ஈடுபடாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவ்விருவரையும் எதற்காகக் கொன்றார்கள் என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியாமலே உள்ளது.மற்றைய இருவரில் ஒருவர் பண்ணை வேலைகளுக்கு உதவியாளராக வந்திருந்த ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த தச்சர் ஒருவான ரோஹண என்பவராவார்.இரண்டாமவர் 'ஜயவர்தன அங்கில்' ஆவார்.( அவர் இடதுசாரிச் செயற்பாட்டாளர் ஒருவரான வசந்த திசாநாயக்காவின் இளைய சகோதரராவார்).'ஜயவர்தன அங்கில்' அப்போது (மொரட்டுவ)கட்டுபெத்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவர் ஒருவராக இருந்தார். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்த அவர், தொழில் ரீதியாகக் கட்டட நிர்மாணக் கலைஞரான எனது அப்பாவிடமிருந்து செயன்முறைசார் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக எங்கள் இல்லத்தில் வந்து தங்கியிருந்தார் என்பது நினைவில் உள்ளது.அவர்கள் அனைவரும் எமது இல்லத்தினுள் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்.பின்னர் கொலையுண்டவர்களோடு சேர்த்து வீட்டை முழுமையாகத் தீவைத்து எரித்தனர். 'ராவணாஎல்ல' யிலிருந்து தந்தையின் நண்பரொருவர் வளர்ப்பதற்காக எனக்குக் கொண்டு வந்த தந்திருந்த மான்குட்டியைக் கூட அவர்கள் விட்டுவைக்காமல் கொலை செய்திருந்தனர்.கொலை செய்வதற்கு முன்பாக அப்பாவைச் சித்திரவதைப் படுத்தினார்களா என்பதை நான் அறியேன்.ஜயவர்தன அங்கிலின் வலது கரத்தைத் துண்டித்து அப்பாவின் வெட்டப் பட்ட தலையுடன் சேர்த்து எங்கள் வீட்டுக்கு வரும் பிரதான பாதையின் மரமொன்றில் தொங்கவைத்திருந்தார்கள். அவருக்கான மரணச் சடங்குகளைத் தடைசெய்திருந்த கொலையாளிகள் மீறிச் செய்தால் எங்கள் மூலம் பலிதீர்ப்பதாக அறிவித்திருந்தார்கள்.எனக்கும் அக்காவுக்கும் அப்பாவின் ஈமக்கிரியைகள் தடுக்கப் பட்டதொன்றாயிற்று. அவர் எம்மிடத்திலிருந்து விடைபெறவில்லை. அவரது முகத்தை முத்தமிட்டு வழியனுப்ப எனக்கும் அக்காவுக்கும் முடியாமற் போனது. எனக்கு உலகைப் பற்றியும் அன்பைப் பற்றியும் கற்றுத் தந்த அப்பா அத்தகைய கொடூர மரணத்திறகு இரையானதேன்?மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களிடத்தில் இன்றுவரைக்கும் நான் கேட்பதற்காக உள்ள கேள்வி இதுதான்.

எரியூட்டப்பட்ட வீட்டுடன் சேர்த்து எனது சிறுபராயத்தின் எல்லா நினைவுத் தடயங்களும் எரிந்து கருகிப்போயின. ஆகக் குறைந்தது அப்பாவின் நிழட்படமொன்று கூட எமக்கில்லாமற் போனது.அன்று மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலை விமர்சனம் செய்தவர்களுக்கு அவர்கள் கொடுத்த தண்டனை அத்தகையது தான்.அந்தக் கொலைகாரர்கள் இன்று கூட சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். அந்த உதிரத்தத்தின் பொறுப்பிலிருந்து இன்றைய ஜேவிபி தலைவர்களால் விடுதலைபெற முடிந்திருப்பது நாம் சமூகம் என்ற ரீதியில் நேர்மையை, உயர் பண்புகளைக் காணாத் தொலைவொன்றில் வாழ்வதனாலாகும்.எனது அப்பாவின் கொலைகாரர்களுக்கு எதிரான பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதையும் நான் இன்று வரை அறியேன்.

அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது அரசியலுடன் இணைந்திருந்த நண்பர்கள் அனேக இடர்களுக்கு மத்தியில் எம்மை இடத்துக்கு இடம் கொண்டு சென்று ஒளித்துப் பாதுகாத்தனர்.அந்த மனிதாபிமானத்துக்கு நான் இன்று வரை மதிப்பளிக்கிறேன்.எமது பிள்ளைப் பருவம் புறக்கணித்துச் செல்ல முடியாத கெட்ட கனவொன்றை போலானது. கருணையற்ற உலகம் தொடர்பான இருண்ட சித்திரம் எஙகள் உள்ளங்களினுள் ஆழப்பதிந்தது அச்சிறு வயதிலேயே ஆகும்.அப்பாவின் அரசியல் நண்பரொருவர் என்னையும் அக்காவையும் அரவணைத்துப் பேணிப் பாதுகாத்து வாழ்வைக் கட்டியெழுப்பிட துணையிருந்திராவிட்டால் எங்கள் வாழ்வு எங்கே போய் முடிந்திருக்கும் என்பதை எனக்கு எண்ணிப்பார்க்கக் கூட முடியாமலுள்ளது.

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.எனது தந்தையின் ஆரம்பகால அரசியல் சகபாடிகள் இப்போதும் பல்வேறுபட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் அனேகமானோருக்கு அவரவருக்கேயான பாதைகளும் கிட்டியுள்ளன.எதிர்பாராத விதமாக நாம் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில் "இவர் நந்நவின் மகள்- இவர் அந்தச் சகோதரனின் மகள்" என அன்புடன் அழைப்பர். எனினும் எங்கள் உள்ளங்களை அழுத்திப் பிழிகின்ற வேதனையை அவர்கள் உணர்வார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நல்ல மனிதர்களில் ஒருவரான எனது அப்பாவை எதற்காகக் கொன்றார்கள் என்பதைத் தெளிவு படுத்த அவர்களாலும் முடியாமல் உள்ளது. அந்த மாபெரும் வேதனையை எமது மரணம் வரை சுமந்தலைய வேண்டியவர்களாக உள்ளோம்.எவரும் எத்தகைய பதிலொன்றையும் தந்திட முயற்சியெடுக்கவில்லை. அந்த வேதனையிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுவாரில்லை.எவருக்கும் எவரையும் கொல்லும் உரிமை இல்லை என்பது எனது எண்ணமாகும்.ஏதாவதொரு கொலை நிகழ்ந்தால் அது ஏன் நிகழ்த்தப்பட்டது என்பதைக் கேட்கும் உரிமை சனநாயகச் சமூகம் ஒன்றில் காணப்படவேண்டும். இன்றும் இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நபர்கள் கொல்லப் படுவதை நான் அறிவேன்.

இந்தக் கடிதம் 1988 -89 காலப்பகுதியில் கொலைசெய்யப் பட்ட எல்லா மனிதர்கள் சார்பாகவும் நிறைவேற்றப்படாமற் போன நீதியைப் பற்றிய வேதனையுடன் எழுதப்பட்டதாகும்.இறந்தகாலத்தில் நிகழ்த்தப்பட்ட மனிதக் கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தேடுவதற்கு எவருமே முன்வராத காரணத்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் அதைப் பற்றிப் பேசாமல் விட்டதாலும் இதுவரையும் மனிதக் கொலைகள் மலிந்த சமூகமொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதுவரை வடக்கிலிருந்து தெற்கு வரை மாற்றுக் கருத்துடையவர்கள் கொலை செய்யப் படுவதென்பது இரகசியமல்ல.எந்தவொரு மனிதனுக்கும் மாற்றுச் சிந்தனையையோ கருத்தையோ கொண்டிருக்கும் உரிமை உண்டென்பது எனது நம்பிக்கையாகும்.கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப் படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பது அதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

நீதியும் நேர்மையும் இழந்து போன நாடொன்றில் கொல்லப்பட்ட நல்ல மனிதர்களில் ஒருவரான அப்பாவைப் பற்றிய நினைவுகள் குறித்து இதைத் தவிர்த்து நான் வேறெதனை எழுதமுடியும்?

ருவந்தி சில்வா
(நந்தவின் மகள்)
தமிழில் - ஃபஹீமா ஜஹான்

0 comments: