Wednesday, July 15, 2009

“வேட்டைக்குப் பின்"னும் வடபுலத்துக் கவிதைகளும் ! - கவிதை நூல் விமர்சனம்

அறஃபாத்துடைய கவிதைகளைப் பற்றிக் கூற வரும் போது இக்கால முஸ்லிம்களின் வாழ்வையும் அரசியலையும் ஒதுக்கி விட்டுப் பேச முடியாமலுள்ளது. ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் முஸ்லிம்களின் ஆதரவுடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் காலப் போக்கில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு இழைத்த கொடூரங்களை மிஞ்சும் வகையில் தமிழ்ப் பேரினவாதம் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கொடூரங்களைக் கட்டவிழ்க்கத் தொடங்கியது.

எமைச் சூழவுள்ள மற்றைய இரு சமூகங்களும் அரசியல்வாதிகளும் எம்மவர்கள் “தூக்கிப் பிடிக்கும்” இந்திய இலக்கியவாதிகளும் தெற்கிலுள்ள முஸ்லிம்களும் கூட முஸ்லிம்களக்கு இழைக்கப் பட்ட அநீதிகள் எதனையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.எமது மக்கள் தாய் நிலங்களிலிருந்து விரட்டப் பட்டதையோ முஸ்லிம்கள் வெட்டப் பட்டும் சுடப் பட்டும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் கொலை செய்யப் பட்டதையோ எமது இனத்துக்காக அரசியலில் போராடிய தலைவனின் படுகொலையையோ கண்டு கொள்ளவில்லை.

போராட்டத்தின் போது ஒதுங்கியிருந்து பின்னர் சமாதானப் பேச்சுக்களில் தமக்குப் பங்கு கேட்டு வருகிறர்கள் என்று எமைப் பகிரங்கமாக ஒதுக்கிய போதும் எமக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியைக் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறே எமது கவிதைகளில் தேங்கியுள்ள கண்ணீரையும் வேதனைகளையும் கூடக் கண்டு கொள்ளவில்லை.

தற்கால ஈழக் கவிதைகள் எனும் பொழுதும் விடுதலைப் போருக்கு ஆதரவாக எழுதப் பட்ட ஒரு சிலரது கவிதைகளைத் தான் தமிழ் விமர்சகர்களும் இந்திய எழுத்தாளர்களும் (ஈழத்துக் கவிதைகளைப் பற்றித் தெரிந்தவர்கள்) முதன்மைப் படுத்துகின்றனர். பெரும்பாலும் அவர்களது பட்டியலில் தமிழ்க் கவிஞர்களின் பெயர்களே வாய்ப்பாடுகளாக வந்து விழும். அதற்கப்பால் ஒன்றுமில்லை என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம். எனினும் “மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” தொகுதியை அவர்களின் கருத்துக்களின் முன் வைத்தால் அவை தலைகீழாக மாறும்.

“மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த நூல் பற்றி யாரும் கதைக்கவில்லை. நமது மூத்த இலக்கியவாதிகள் அந்தத் தொகுதியை விரிவான தளங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். விமர்சனங்களினூடாகவும் பல்வேறுபட்ட கருத்துப் பரிமாற்றங்களினூடாகவும் அதில் உள்ளடங்கியுள்ள கவிதைகள் குறித்துத் தமிழக் கவிதையுலகின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். அவ்வாறு நிகழாதது துரதிர்ஷ்டமே. அரசியல், இலக்கியம் இரண்டுமே மக்கள் மயப் படுத்தப் படாதவரை அதன் வெற்றியும் உயிர்த்துடிப்பும் எவ்வளவு தூரம் சாத்தியப் படும்?

“மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்” தொகுதியில் உள்ள முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறஃபாத் திகழ்கிறார். இவரது இரண்டாவது தொகுதியான “வேட்டைக்குப் பின்” இனவாதத்தால் மேற்கொள்ளப் பட்ட அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புக்களையம் துணிந்து சொல்வதாக அமைகிறது. 2000 களில் வெளிவந்த சிறந்த தொகுதிகளில் ஒன்றாக இதனையும் கருதலாம். சிறுகதைகளினூடாக மாத்திரமன்றிக் கவிதைகளினூடாகவும் தனது படைப்பாளுமையை அறஃபாத் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 1998 முதல் 2004 வரை எழுதப் பட்ட கவிதைகள் கால வரிசையின் படியே தொகுதியில் இடம் பெற்றுள்ளன. யுத்தம் நிகழ்ந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளையும் விடவும் யுத்த நிறுத்தத்துக்குப் பின்னர் எழுதிய கவிதைகளில் எதிர்ப்பு மேலோங்கியுள்ளதைப் பொதுவாக அவதானிக்க முடிகிறது.

தனது மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளின் சாட்சியங்களாக இவர் தனது கவிதைகளை வெளிப்படுத்தியுள்ளார். துயரம் தோய்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளினதும் பிரக்ஞை பூர்வமான பாதிப்பை வாசகர்களிiயே தோற்றுவிப்பனவாக இவரது பல கவிதைகள் அமைந்துள்ளன.

தமை நசுக்கும் மனிதர்கள் குறித்துத் தமிழ்க் கவிஞர்கள் அவர்களது கவிதைகளுடாகவும் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆயதங்களுடாகவும் பேசினர். போராட்டம் முனைப்புப் பெற்ற ஒரு கால கட்டத்தில் அவர்களது கவிதைகளும் வீரியத்துடன் வெளிப் பட்டன. தற்போது பெரும்பாலான தமிழ்ச் சகோதரர்களின் கவிதைகளில் யுத்தத்துக்கான ஆதரவும் நியாயங்களும் தணிந்து போயுள்ளன. அவர்களது இழப்புகள் பற்றி, சமாதானமற்ற சமாதானம் பற்றி, சமூகப் பிறழ்வுகள் பற்றி, இடப் பெயர்வுகள் விளைவித்த துயரங்கள் பற்றி, புதிய வாழ்வு குறித்த நம்பிக்கைகள் பற்றிப் பேசுபவையாக அவர்களது கவிதைகள் அமைந்துள்ளன.

காலமாற்றம் இப்போது எதிர்ப்பை வெளிப் படுத்தும் எழுதுகோலை முஸ்லிம் கவிஞர்களிடம் கொடுத்துள்ளது. தற்காலத்தில் இயங்கும் முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளில் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்த அளவிலான கவிதைகள் சிங்கள இனவாதத்திற்கு எதிராகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பெருமளவிலானவை தமிழ்ப் பேரினவாதத்தால் நேர்ந்த அட்டூழியங்கள் பற்றியும் அவற்றுக்கு எதிராகவும் எழுதப் பட்டு வருகின்றன.இன்று பேசப்படும் முஸ்லிம் கவிஞர்களும் கவிதையின் தளமும் கிழக்கைச் சார்ந்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன ஒடுக்கல் என்பது பாதிக்கப் படும் எந்த இனத்துக்கும் ஒரே முகத்துடனேயே வந்து சேர்கிறது. சிங்கள இனவாதம் அப்பாவித் தமிழருக்கும் தமிழ் இனவாதம் அப்பாவி முஸ்லிம்களுக்கும் இன்னல்களைக் கொடுத்த வேளை அவர்கள் எதிர் கொண்ட வேதனைகளும் இழப்புகளும் வேறுபட்டிருக்கவில்லை. அஸ்வகோஸ், அறஃபாத் இருவரும் இதனை ஒரே விதத்திலேயே வெளிப்படுத்துகின்றனர்.

“என்னை உறுத்தும்
நினைவுகளைச் சொல்வேன்
நொந்து போன என் நாட்களின்
வேதனைச் சுமையினைச் சொல்வேன்
சிதழூரும் காயங்கள் பேசும் மொழியில்
என்னைப் பேச விடுங்கள்
….. ….. …..
தியாகங்கள் மட்டுமே தெரிந்த
மைந்தரின் நினைவுகளை
பழிக்க என்னால் இயலவில்லை.”
(இருள் : 1990) என அஸ்வகோஸ் கூற

“அந்த மண்ணிலிருந்து
நம் காயங்களைப் பேச விடுவோம்
அவமானச் சின்னங்களாய்
வேற்று மண்ணில்
சிறுத்துக் குறுகும்
ஒட்டுண்ணி வாழ்வுக்கொரு
விடை கொடுப்போம்
…. ….. ….
சிறைக் கம்பிகளுக்குள்
நசிந்து கிடக்கும்
மைந்தர்களின் இருப்பிற்காய்
ஏதேனும் செய்வோம்”
(நிர்ணயம் : 1998) என அறஃபாத் கூறுகிறார்.

இதனைப் போலவே அன்று தமது இருப்பை நிராகரித்துத் துயரங்களை, அக்கிரமங்களை ஏவிவிட்டவர்களிடம் ஜெயபாலன் கேட்டார்:

“ஏன் எம் மீது தீ மழை பொழிந்தீர்
ஏன் எம் மீது குருதி பெருக்கினீர்
எரிகின்ற நகரின் தெருக்களில்
குட்டியோடலையும்
பெட்டைப் பூனையாய்
காடு மேடு கடல் வயலென்றெமை
மூட்டைகள் காவி ஏன் ஓட அலைக்கிறீர்”
(பிரார்த்தனை : 1998)

தமிழினமே வெட்கித் தலைகுனியும் படியாக 2002 இல் வாழைச்சேனை எரிந்த தீயின் சாம்பல் மேட்டிலிருந்து அறஃபாத் கூறுகிறார்:

“சந்தையிருந்த இடத்தில்
ஒரு சாம்பல் மேடு
பொடியைத் தூவியபடி காற்று வந்தது
குட்டிகளைக் காவியபடி
ஒரு பூனையும் வந்தது
சஞ்சாரமற்ற எனதூரில் கேவித் திரிய
வேறென்னதான் உண்டு?”
(வேட்டைக்குப் பின் : 2002)

அன்று தமிழினம் வேட்டை நாய்கள் மொய்த்த தெருக்களில் குட்டியோடலையும் பூனைகளாயினர். வாழைச்சேனையிலோ முஸ்லிம்கள் மீது ஏவி விடப்பட்ட வெறிநாய்கள் மொய்த்தன.கொன்று புதைக்கப்பட்ட அப்பாவிச் சகோதரர் இருவரின் சடலங்களைத் தோண்டியெடுத்து வந்த வேளையில் வழிமறித்துப் பறித்தனர். பின் அந்த உடலங்களை வீதியில் இட்டு பெற்றோல் ஊற்றி எரித்தனர். அதிரடிப்படை வீரர்களும் உடன் சென்றிருந்த முஸ்லிம்களும் எரிந்த சாம்பலைக் கடந்து வந்தனர். இதனை அறஃபாத் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

“எரியுண்ட முதுகெலும்பின் மேல்
தலைவர்கள் நடந்தனர்
பட்டாளமும் நடந்தது
வெட்டிப் புதைத்த பின்
தோண்டியெடுத்த ஈருடலின்
அபயக் குரல்
காற்றிலேறிப் பிரலாபித்தெம்
ஊரைச் சுடுகிறது
தொழுவிக்காத ஜனாசாக்களின்
கேவல் பள்ளியைத் தகர்க்கிறது
அப்பாவிகளைக் கொன்று புதைத்த
வீரர்களின் எக்காளம்
ஈழ முகத்தில் அறைகிறது”
(கறுப்பு ஜூன் : 2002)

யுத்த காலத்தில் வடபுலத்தில் தமிழ் மக்கள் அடிக்கடி இடப் பெயர்வுகளை எதிர் கொண்டு அவதியுற்றனர்.சொல்லொணாத் துயரங்களை அவை அம் மக்கள் மீது திணித்தன. அந்த இடப்பெயர்வுகள் இராணுவத்திடமிருந்து தப்புவதற்காகவும் இருதரப்புச் சண்டைகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காகவும் நிகழ்ந்தவை. எனினும் வடபுலத்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்ட ஈனச் செயலானது இத்தகைய சமாதானங்களுக்கு உரியதல்ல என்பதைத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

“யாழ்ப்பாணமே…ஓ…எனது…யாழ்ப்பாணமே” தொகுதியில் நிலாந்தன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இங்கேயொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப் பட்ட அதே நாட்களில் தான் 1995 இல் எக்ஸோடஸ் ஏற்பட்டது என்பது”(எக்ஸோடஸ் என்பது பைபிளில் பழைய ஆகமத்தில் வரும் ஒரு மகா இடப் பெயர்வு) குறிப்புகளின் பின்னர் தொடரும் கவிதையில் நிலாந்தன் பின்வருமாறு எழுதிச் செல்கிறார்.

“அவகாசமில்லை
ஒரு சிறிதும் அவகாசமில்லை
நாடு திகிலடைந்து
ஒரு நாயைப் போல தெருவிலோடியது
சபிக்கப் பட்டோம்
காதுள்ளவன் கேட்டிருக்கக் கூடாத
வார்த்தைகள் அவை
கண்ணுள்ளவன் பார்த்திருக்கக் கூடாத
காட்சிகள் அவை
… ………..
வழி நெடுக குழந்தைகள்
களைப்பாலிறந்தன
கால் நடைகள்
வழிமாறித் தொலைந்தன
முதியோருக்கெல்லாம் இறுதி நாளது
ஊழிப் பெரு மழை பெய்ததப்போது
….. … …….
எமது குழந்தைகள்
மழை நீரை ஏந்திக் குடிக்கவும்
எமது முதியோரை
தெருவோரம் கைவிட்டுச் செல்லவும்
ஒரு நாள் வந்ததே…
(யாழ்ப்பாணம் 30.10.1995)

இத்தகைய கொடும் துயரத்தையே 1990 ல் விரட்டப் பட்ட முஸ்லிம்களும் எதிர் கொண்டனர்.ஊழிப் பெரு மழை அப்பொழுதும் பெய்தது. மாற்றுடையேதுமின்றி உடமைகள் எதுவுமின்றி தாய் நிலம் விட்டு வெறுங்கையுடன் விரட்டப் பட்டதை அறஃபாத் பதிவு செய்கிறார்.

“என் நெஞ்சே
என்னை அவமானப்படுத்திய
அக்கணத்தில்
பொட்டலங்களுக்குள் மாற்றுடையும்
அவரிட்ட பிச்சையாகின
அந்திமத்தை நீயறிவாய்
என் மண்ணே
ஏனெம்மை இழிவு படுத்தினாய்
தோடு பிய்க்க, காதறுந்த சரிதங்களை
ஏனங்கு எழுத வைத்தாய்”
(நெஞ்சத்தீ : 1998)

நிலாந்தனின் கவிதையிலிருந்து அறஃபாத்தின் கவிதை விலகிச் செல்லும் விதமே இங்கு முக்கியமானது. நிலாந்தன் குறிப்பிட்ட எல்லாத் துயரங்களையும் அனுபவித்தவர்களாக நொந்து வெளியேறிய மக்களை “அவர்கள்” நடத்திய விதத்தைப் பதிவு செய்கிறார் அறஃபாத். முஸ்லிம்களின் பொருளாதாரம் அனைத்தையும் சூறையாடியவர்களாக வழிப் பறிக் கொள்ளைக்காரர்களாக அவர்கள் மாறியிருந்ததை அறஃபாத் குறிப்பிடுகிறார்.

தாமே மக்களைக் காப்பவர்கள் என்றும் மக்களது துயர் துடைக்கும் தேவ குமாரர்கள் என்றும் தம்மை அடையாளம் காட்டியவர்கள் பின்னர் எதனைச் செய்தனர்?

சித்தாந்தன் “துஷ்டர்கள் சூழ்ந்த பொழுது” என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்…

“இரவின் சித்திரங்களை
ரசித்தக் கொண்டிருந்த போது
அவர்கள் வந்தார்கள்
குரூரத்தின் தெறிப்புக்களாய்
வார்த்தைகளில் விசமொழுக
என் மொழியிலேயே பேசினார்கள்
… …. ….
தங்கள் வார்த்தைகளை
மறுத்த போதெல்லாம்
என் உடலின் பாகங்களில்
கூரிய நகங்களால் கீறினர்
… … …
பின்னர் அவர்கள் போனார்கள்
அகங்காரமாய் வளர்ந்த படி
ஆழமான என் சுவடுகளை
அழிப்பது போல மிதித்துக் கொண்டு”

அதே அவர்கள் கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமத்திற்கும் வந்தனர். துஷ்டர்களாக அல்ல..எமன்களாக. “போர் நிறுத்தத்திற்கு முந்திய நாள்” கவிதையில் அறஃபாத் சொல்கிறார்..

“மின்சாரம் துண்டிக்கப்பட்டது
மழைநாளில் ஊரும் அட்டைகளாய்
அவர்கள் ஊருக்குள் வந்துவிட்டனர்
… …. ……….
இன்பத் தமிழில் தூஷித்தபடி
ஊரின் நடுவே
அவர்கள் வந்துவிட்டனர்
….. ………..
அவரை விடுங்கோ
என்ற மனைவியின் கதறல்
காற்றில் கரைந்து ஊரைச் சுற்றியது
என்ட பிள்ளய சுடாதீங்க
ஒரு தாயின் கெஞ்சலில்
விடுதலையின் வீர முழக்கம் கெக்கலித்தது
ஓராயிரம் மரணக் குரல்கள்
விண்ணில் அலைந்த படி
அர்ஷையும் தொடுகிறது
எமது பிரதிநிதியின் செவிகளை மட்டும்
ஏனிறைவா செவிடாக்கினாய்?”

இங்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட இரு தரப்பையும் விமர்சிக்கின்றார். ஒப்பந்தத்தின் பொழுது ஒரு தரப்பு வெற்று வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது. அடுத்த தரப்பு வெற்று வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தையே அவமானப் படுத்தியது. “ஓராயிரம் மரணக் குரல்கள் விண்ணில் அலைந்த படி” இருந்த பொழுதும் எமது பிரதிநிதி செவிடாய்க் கிடந்தார் என மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியையும் ஏமாற்றத்தையும் துல்லியமாக எடுத்துக் கூறுகிறார்.

அன்று அப்பாவித் தமிழர்களின் தலைகளைத் துண்டித்து எடுத்துச் சென்ற சிங்கள இராணுவம் குறித்து கருணாகரன் பின்வருமாறு பதிவு செய்தார். இவரது கவிதை தணிந்த குரலில் ஆழ்ந்த அதிர்வுகளை மனதில் எழுப்புகிறது.

“மாலையில்
காடெழும்பிய கிராமத்திலிருந்து
வெட்டப்பட்ட மூன்று தலைகளுடன்
வீரர்கள் திரும்பினர்
ஒன்று சிறியது
‘அது ஒரு குருத்தின் முகம்’ என்றது காற்று
ஒன்று வேட்டைக்காரனுடையது
ஒன்று நரைத்த தாடியும்
சுருங்கிய நெற்றியுமானது
தலைகளை இழந்த
மூன்று அகதிகளிலிருந்தும்
பெருகும் துக்கம்
அகதிகள் உறைந்த
மரங்களை மூழ்கடிக்கிறது”
(எனது வருகை)

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களுக்கும் இதனையே செய்துள்ளனர். அறஃபாத்தின் குரல் வீறுகொண்டெழுகிறது. வேதனையும் கதறலும் வஞ்சிக்கப் பட்ட சமூகத்தின் ஆறாத் துயரமும் கவிதை வரிகளில் வெளிப்படுகிறது.

“தடித்த குரலுயர்த்திப் பேசிலேன்
பிறர் அஞ்சுதற்குரிய
கொடூரனுமல்ல நான்
எனினும்
நடு நிசியில் வஞ்சித்தென்
கழுத்தை ஏனறுத்தீர்
….. …….
பொங்கலுக்கா பலியெடுத்தீர்
ஈழத்தர்ச்சனைக்கா எனையெடுத்தீர்
கத்தியைச் சொருகியென்
பிடரியை அறுக்கையில்
கதறிய என் ஓலத்தை
தமிழீழ கீதமாக்கவா திட்டமிட்டீர்?”

பகிரங்கமாகவே தமிழீழம் பெறும் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களை வதைப்பதற்கெதிராக அறஃபாத்துடைய குரல் உக்கிரமாக எழுகிறது. கூரான வார்த்தைகள் கொண்டு அநியாயம் புரிந்தவர்களிடம் கேள்வியெழுப்புகிறார். அவர்களின் மனச் சாட்சிகளை இவ் வார்த்தைகள் துழைத்திடுமா?


என்ன நடந்தாலும் அவற்றை மக்கள் சம்பவங்களாகக் கருதிக் கடந்து சென்றுவிடுகின்றனர். முஸ்லிம்களின் இழப்புக்கள் குறித்தும் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்படும் அக்கிரமங்கள் குறித்தும் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை. அவற்றுக்கு எதிராக மக்கள் அரசியல் மயப்படுத்தப் படவுமில்லை. தனது சமூகத்தின் அழித்தொழிப்புக்கள் இழப்புகள் நடைபெறும் போதெல்லாம் அறிக்கை விடுவதொன்றே தமது தலையாய கடமை எனக் கருதி முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். அதற்கப்பால் அவர்களது கடமைகள் என்று எதுவுமில்லை. தமது சுகபோகங்களுக்காக ஒருவரோடொருவர் மல்லுக்கட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் உரிமைகள் யாவும் புறக்குடத்தில் வார்க்கப்படும் நீராக வீணாகிப் போகின்றன என்பதை அறஃபாத் ‘மௌனம்’ என்ற கவிதையில் பதிவு செய்கிறார்.

“வேட்டைப் பல் முறிந்த
தனித்துவச் சிங்கங்களோ
சிம்மாசனப் பித்னாவில்
நாணிச் சிறுத்ததென் போர் நெஞ்சு
…… ……..
சல்லடையாக்கப் பட்ட
என் சகோதரனே
என்னை மன்னித்து விடு
மறுநாள் உன் உம்மாவையும்
கொன்றுவிட்டார்கள்
எனினும்
நாம் மௌனமாகத்தான் இருந்தோம்”

முஸ்லிம் சமூகம் இனவாதத்தாலும் அரசியல்வாதிகளாலும் மிக மோசமாக வஞ்சிக்கப் பட்டுள்ளது. மிகக் கேவலமான அரசியல் தலைமைத்துவத்தையும் அவலம் மிகுந்த அழித்தொழிப்புக்களையும் ஒரே சமயத்தில் எதிர் கொண்டவர்களாக மக்கள் தத்தளிக்கின்றனர். எல்லா வழிகளிலும் கைவிடப் பட்டவர்களாகவும் அடைக்கலமற்றவர்களாகவும் மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மரம் பச்சோந்திகளின் புகலிடமாக மாறிவிட்டதை அறபாத் கூறுகிறார்.

“இருப்பின் ஒளிர்வு
உங்களால் மெருகேறுமென்ற
எங்கள் கனவில் இருள் படிகிறது
என் வருத்தங்கள் இதுதான்
என் வீட்டு முற்றத்தில்
ஒரு கிளசறி மரத்தையேனும்
நட்டியிருக்கலாம்
எனக்கு மஞ்சு பூட்ட உதவியிருக்கும்”

‘வேட்டைக்குப் பின்’ தொகுதியிலுள்ள கவிதைகள் யாவிலும் ஏதோ ஒரு துயரம் இழையோடிச் செல்கிறது. புதிய சொற் பிரயேபகங்கள் கவிதை வரிகள் அமைப்பு போன்றன வாசகர்களைப் பெரிதும் ஈர்ப்பனவாய் அமைந்துள்ளன.

சமகாலத்தில் இயங்கும் கவிஞர்களிடையே அந்தக் காலத்துக்கேயுரிய சில சொற்களும் கருத்துக்களும் பிரதிபலிப்பதை நாம் காண்கிறோம். தம்மைப் பாதித்தவற்றின் தாக்கம் எல்லாக் கவிஞர்களிடமும் காணப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. இதற்கப்பாலும் ஒருவரையொருவர் படிக்காத நிலையிலும் சமகாலத்தில் ஒரே கருத்தைச் சொல்லும் கவிதைகளைப் படிக்கும்போது கவிஞர்களின் உள்ளங்களைப் பிணைத்துள்ள இரகசிய இழைகளைத் தரிசிக்க நேர்கிறது.

யுத்த நிறுத்தச் சூழ்நிலையின் பின்னர் எல்லோரும் பதிந்தெழும்பும் தளங்களிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு அறஃபாத் வீறு கொண்டு எழுந்துள்ளார் என நினைக்கிறேன். சமகால நிகழ்வுகளினூடாக மொழியின் தீவிரத்துடன் கவிதையை நகர்த்திச் செல்லும் சாத்தியம் இக்கால கட்டத்திலேயே இவருக்கு வாய்க்கப் பெற்றுள்ளதாகத் தோன்றுகின்றது.

“தமிழர் மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த முக்கியமான ஒரு கவிதையாக அஷ்ரப் ஷிஹாப்தீனின் ‘ஸெய்தூன்’ என்ற கவிதையைச் சொல்ல வேண்டும். ‘ஸெய்தூன்’ என்ற கவிதையிலிருந்து தான் இன்று வரையான முஸ்லிம் தேசத்தை அல்லது அதன் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல கவிதைகளைக் கண்டு கொள்கிறோம்” என முன்னுரையில் றமீஸ் அப்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அதிகமான பதிவுகள் ஓரளவுக்கேனும் கவிதைகளில் தான் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் சமூகம் இனவாதத்தால் எதிர் கொண்ட இழப்புகள், இடப் பெயர்வுகள், துயரங்கள் பற்றி இன்னும் பத்தாண்டுகளிலோ அல்லது அதற்கு அப்பாலோ வரும் சந்ததி எதுவும் அறியாமற் போகலாம். அப்போது இந்தத் துயரங்களின் தொடர்ச்சி வேறு முகம் கொண்டு எம்மை வந்தடையலாம். 80 களில் 90 களில் 2000 களில் நடந்தவை பற்றிய தெளிவு அடுத்த சந்ததியினருக்குத் தெரியாமல் போனால் எமது அடையாளங்களை, இழக்கப்பட்ட உரிமைகளைத் துடைத்தளித்தவர்களாக நாமும் தான் மாறுவோம். துயரங்களின் பதிவுகளை அறஃபாத்துடைய தொகுதி ஓரளவு நிவர்த்தி செய்திருந்தாலும் தொடர்ச்சியான பதிவொன்றினை நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். அது நெடுங் கவிதையாகவோ நாவலாகவோ பரிசோதனையொன்றாகவோ கூட அமையலாம்.

-ஃபஹீமா ஜஹான்
(நன்றி - யாத்ரா )

4 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

"மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்" ஒரு கனதியான, முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கியமான காலப்பதிவுக் கவிதைகள். அத் தொகுப்பு பரவலான பார்வைக்குக் கொண்டு செல்லப்படவில்லையென்ற ஆதங்கம் எனக்கும் உண்டு.

இலங்கையின் முஸ்லிம் சமூகம் குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையும் மிக மிகச் சரியே. என்று மாறும் இந் நிலை?

உரையாடல் தளத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடருங்கள் சகோதரி !

Athikkadayan said...

அன்பு சகோதரி பஹிமா ஜஹான் அவர்களுக்கு,
தங்களுடைய இந்த கவிதை தொகுப்பை பற்றிய விமர்சனம் நடுநிலைமை பார்வையோடு செய்யப்பட்ட ஒன்றாகவே எமக்கு தெரிகிறது. முழுமையான செய்திகளை உள்ளடக்கிய நூலை நானும் எதிர்பார்க்கிறேன். வரலாறு பல கொடூர முரண்களை நம்மிடையே விட்டு செல்கிறது. அதில் ஒன்று தான் பாலஸ்தீன விவகாரம்.பண்பாட்டில் உயர்ந்து விட்டோம் என்று மார்தட்டும் மேற்குலகமே ஒன்று திரண்டு யூதர்களை கொன்றொழித்த பொழுது அவர்கள் நிம்மதியாக தங்க இடம் தந்த பாலஸ்தீனர்களை இன்று எவ்வாறு நாடற்றவர்களாக யூதர்கள் கொண்டு வந்து நம்பிக்கை துரோகம் செய்தார்களோ அதைப்போன்றதொரு நம்பிக்கை துரோகமாகவே தமிழ்ப் பேரினவாதிகள் முஸ்லிம்களை படுகொலை செய்த நிகழ்வுகள் இருக்கின்றது. ஏனெனில் தமிழீழப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்கியவர்கள் முஸ்லிம்கள். ஆனால் அந்த முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் உயிர் உடைமைகளை எல்லாம் தமிழ்ப்பேரினவாதிகள் சூறையாடிய கொடுஞ்செயல் என்றுமே நம் நெஞ்சை விட்டு அகலாது. இதற்காக வேறொன்றும் செய்ய இயலாமல் வெறும் கண்ணீரை மட்டுமே சிந்தும் ஒரு அற்ப மானிடராகவே இன்று நாம் இருக்கிறோம்.
தம்முடைய வரலாறு தெரியாதவர்கள் ஒருக்காலும் வரலாறு படைக்கவே முடியாது என்ற வரிகளுக்கேற்ப இதை சமூகத்தில் உலவ விட்ட அந்த கவிஞர்களையும் இதை எம்மைபோன்றவர்களுக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கும் எம்முடைய நன்றிகள்.

பஹீமாஜஹான் said...

அன்பின் ரிஷான்,
இந்தப் பக்கத்துக்கு முதல் ஆளாக வந்திருக்கிறீங்க.
மகிழ்ச்சி.

"மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்" ஒரு கனதியான, முஸ்லிம் சமூகத்தின் மிக முக்கியமான காலப்பதிவுக் கவிதைகள்"

ஆமாம்.
அந்தத் தொகுப்புப் பற்றி உடையாடவேண்டும்.எப்படியாவது தொடக்கி வைக்கப் பார்ப்போம்.

"உரையாடல் தளத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்"

மிகவும் நன்றி.

பஹீமாஜஹான் said...

வாருங்கள் Athikkadayan,

"தமிழீழப் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்கியவர்கள் முஸ்லிம்கள். ஆனால் அந்த முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களின் உயிர் உடைமைகளை எல்லாம் தமிழ்ப்பேரினவாதிகள் சூறையாடிய கொடுஞ்செயல் என்றுமே நம் நெஞ்சை விட்டு அகலாது. இதற்காக வேறொன்றும் செய்ய இயலாமல் வெறும் கண்ணீரை மட்டுமே சிந்தும் ஒரு அற்ப மானிடராகவே இன்று நாம் இருக்கிறோம்."

தமிழ்ப் பேரினவாதம் முஸ்லிம்களை மாத்திரமல்ல தமிழ் மக்களைக் கூட இன்று நடுத்தெருவிலேயே கைவிட்டுள்ளது. அரசியலில் ஸ்திரைமற்ற தன்மை இங்குள்ள இரு சிறுபான்மை மக்களின் வாழ்வையும் பாதித்துள்ளது.

வரலாறு தந்து சென்றுள்ள பாடங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தின் பாதையை வடிவமைக்க முடியும்.

தங்களது உரையாடல்கள் தொடரட்டும்.
வருகைக்கு நன்றி.